Skip to main content

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.

 ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்துகொண்டே இருந்தன, சொல்லவந்த தகவலோடு மேலும் மேலுமென அறிவுப்பசிக்கு எண்ணெயாக, கூடுதலாக கிளைத்துக்கொண்டேயிருந்தன வரலாற்றுத்தகவல்கள், முக்கியமாக கல்வெட்டுக் கலைச்சொற்கள் பற்றி அவர் சொன்னது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் உபயோகமாக இருந்தது.

முதலாம் ராஜராஜன் பீடத்திலிருந்து கலசம் மட்டும் முழுக்கற்றளியாக எடுப்பித்த குந்தாந்குழி மகாதேவர் கோவில் முற்றும் சிதிலமடைந்திருந்தது. அது திருபுவனையில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள மாதிரி வடிவத்தை கொண்டு தொல்லியல் துறையால் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டது. கோவிலின் எண்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், இரண்டு வடமொழி கல்வெட்டுக்களையும் சேர்த்து, சோழர் பரம்பரையின் நீண்ட அரசர் நிரையின் கொடை மற்றும் அறச்செயல்களையும் கூறும் கட்டியங்களாக இன்றும் உள்ளன. அக்கோவிலின் கட்டுமானம், சிலைகள் அமைப்பு பற்றி, வில்லியனூர் புலவர் திரு வெங்கடேசன் ஐயாவும், வீராசாமி ஐயாவும் விளக்கினர், மேலும் முக்கியமான கல்வெட்டுகளை படிக்கவும் உதவினர்.

அங்கிருந்து இருநாட்கள் முன்னரே திருக்குடமுழுக்காட்டப்பட்டிருந்த திருவண்டார் கோவில் சென்றோம். இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பதிகத்தில் வடுகூர் எனவும் , கல்வெட்டுகளால் திரு ஆரை நக்கன், திருவையாறுடையவர் கோவில் என்றும் ஊர்மக்களால் திருவாண்டார் கோவில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. திருவையாறு தலத்தின் ஈசனின் பெயரும் ஐயாறப்பன் / பஞ்சநதீசுவரர் என்பதாகும், ஐந்து ஆறுகள் கூடுமிடமாகையால் அது காரணப் பெயர் எனக்கொள்ளலாம், இத்தலத்தில் அப்படி இல்லாததால் இது ஐயாறின் வழி நிலைக்கோவிலா , அல்லது பஞ்சநதம் எனும் அரிய வகைக் கல்லால் ஆன சிலைகள் உள்ளதால் இப்பெயர் பெற்றதா என்பது ஆராயத்தக்கது.

 வெங்கடேசன் ஐயா இத்திருக்கோவில் பற்றி முழுதும் ஆய்வு செய்தவர், புத்தகங்களும் வெளியிட்டிருக்கின்றார். கோவிலின் சிறப்புகளை கூறினார், முக்கியமாக சோழர்கால அளவுகோல்கள் பற்றியும் திருவாண்டார் கோவிலில் இருபத்தியிரண்டு அடிஅளவுகோல் வெட்டப்பட்டிருப்பதை, கொடை நிலங்களின் தரத்தை ஊர்சபைகள் நிர்ணயித்தது பற்றியும் கூறினார். திருவண்டார்கோவில் தேவாரத்தலமான வடுகூராக வணங்கப்படுகிறது, வெங்கடேசன் ஐயா அதுபற்றி கல்வெட்டுகளில் தகவல் இல்லாதது பற்றியும், அது நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள திருக்கண்டீச்சுரம் என்னும் திருத்தலமாக இருக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.
சோழர் காலத்தின் சிற்பக்கலையை உலகுமுற்றும் வியக்க செய்யும் எழில்மிகுந்த துவாரபாலகர் சிலைகள், கோட்டச்சிற்பங்கள் இத்தலத்தில் உள்ளன. குடமுழுக்குக்காக கையில் காப்புக்கட்டியிருந்த  பிட்சாடனரின் நிர்மால்ய அழகு, துர்கையின் கம்பீரமான பொலிவு, ஆலமர்செல்வனின் மோனப்புன்னகை இவையெல்லாம் காலம் கடந்த வசீகரங்கள், கல்லில் மனிதன் கண்ட அழியாத அற்புதங்கள்.

 புதுவை விடுதலைப்போராட்ட வீரரும் இலக்கிய ஆய்வாளருமான திரு பி எல் சாமி சங்க இலக்கியத்திலே உயிரினங்கள், தாவரங்கள் முதலிய புத்தகங்கள் எழுதியவர், அவர் எழுதிய தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமான நூல், அவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கிறார், அவர் கலித்தொகையிலே தென்திசைக்கடவுளான ஆலமர்செல்வனின் கரகம் / குண்டிகை / கமண்டலம் ஆலமரத்திலே கட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருப்பதற்கு சான்றாக இக்கோவில் சிலையை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அடுத்ததாக திருபுவனை வரதராஜர் ஆலயத்திற்கு சென்றோம் கருவறை பூட்டியிருந்ததால் முன்மண்டபத்திலேயே உட்கார்ந்து கதை கேட்கலானோம். எங்களோடு சேர்ந்து திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலத்தின் வீரநாராயண விண்ணகரமும் தன் வரலாறைத் தானே கேட்டுக்கொண்டிருந்தது.
முதற்பராந்தகன் மனைவியான திரிபுவன மாதேவியின் பெயரால் அழைக்கப்பட்டது இக்கோவில். இங்கு நடத்தப்பட்ட கல்லூரிக்கு எழுபத்தியிரண்டு வேலி இறையிலி நில நிவந்தம் கொடுக்கப்பட்டுள்ளது, பிரபந்தம் ஓதுதல், வைணவர்களுக்கு, திருமஞ்சனத்திற்குமாக நிவந்தம் கொடுக்கப்பட்டவை. கடலூர் பகுதியில் உள்ள கொடுக்கூர் மற்றும் வெள்ளகேட் பகுதியில் அந்நிலங்கள் உள்ளன என்றார் வெங்கடேசன் ஐயா. கோவிலுக்கு வெளியே தற்போது அடித்தளம் மட்டுமே உள்ள மண்டபம் அன்றைய கல்லூரி என்றார். சோழமன்னர்களான முதல் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், விக்கிரம சோழன், பிற்கால பல்லவர்களில் கோப்பெருஞ்சிங்கன், விஜயநகர அரசர்களில் விருப்பன்ன உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்குள்ளன. இங்குள்ள கோக்கிழானடிப்பேரேரி செப்பனிடுதல் பற்றி வெங்கடேசன் ஐயா கூறினார். அரசர்கள் உடல்நலம் குன்றும்போதேல்லாம் இக்கோயிலுக்கு உத்தமாக்காரம் என்னும் நிவந்தம் வழங்கியதை, திருவக்கரையிலிருந்து கற்கள் எடுத்து வந்து "கல்அட்டி" ஏரி பராமரித்ததை, அதற்கு வண்டி வசதி செய்தோர் பெயர்கள் பொறிக்கப்பட்டது பற்றி (உபயம்), துணி நெய்யும் கலப்பினத்தவரான அயோகவர் பற்றியும்  மங்கை அம்மா எடுத்துக்கூறினார்.
இக்கோவில் திருச்சுற்றில் அழகிய இராமாயண, பாகவத குறுஞ்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன, தேவியருடன் அமர்ந்தநிலை பெருமாள் அருள்கிறார், அவரது அருளும் வலக்கையில் கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் உள்ள சிறியமலர் சிற்பியின் நுண்கலை உணர்வுக்கு சான்றாகிறது. திருச்சுற்றில் உள்ள முகம் சிதைந்த சிலை தவ்வையா இல்லையா என்று நானும் முருகனும் வாதித்துக்கொண்டிருந்தோம்.

குலோத்துங்கன்சரிதை எனும் தேடப்படும்நூல் இவ்வூரைச்சேர்ந்த கவிகுமுத சந்திர பண்டிதர் எழுதியது என்றார் ஐயா. மண்டபத்தில் குரலிசை நண்பர் ஒருவர் தாயன்பு மிகுந்த கிராமிய பாடல் ஒன்றை பாடினார். கேட்ட பாடல்தான், அனால் கற்பனை செய்ய இயலாத சூழலில் ஒலித்தது. காலத்துக்கும் மனதில் நிற்கும் ஓர் உளப்பதிவாக உறைந்து போனது அக்காட்சி.

அங்கிருந்து வளவனூர் தாண்டி வண்டியை மரத்தடியில் நிறுத்தி மோர்குடித்தோம். பின் வண்டி எண்ணாயிரம் நோக்கி சென்றது. அழகிய பலிபீடத்தை பார்த்துக்கொண்டிருந்தோம்,பிரம்மாண்டமாக உள்ள கோவில் கட்டுமானஅமைப்பின் சிறிய மாடல் போல் இருந்தது பலிபீடம், அதை வீரராகவன் ஐயா அழகாக விளக்கினார். பின் வழங்கப்பட்ட புளியோதரையும் தயிர்சாதமும் டைமிங்கான பெருமாள் கோவில் உணவுகள், பள்ளிக்கூடத்துக்குப்பிறகு மரத்தடியில் கனகாலம் கழித்து நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட நேர்ந்தது.

தன்குலம்பற்றி ஏதோபேசுகிறார்கள் என்று காய்கதிர்செல்வன் எங்களையே உற்றுப்பார்த்துகொண்டிருந்தார், அனைவரும் வேர்வையில் குளித்திருந்தோம். உணவுக்குப்பின் சிலர் தூண்களில் சாய்ந்து ஓய்வெடுத்தனர்.

எண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம் பற்றி தம்பி சரவணன் ஏற்கனவே கூறியிருந்தார், மூன்று தளமுள்ள விண்ணகர் அது, சிதைந்த கோவில் புதுப்பிக்கப்படுகையில் மேலே செல்லும் வழிகள் மூடப்பட்டு விட்டன. மேலிருந்த லக்ஷ்மி நரசிம்மர் கீழுள்ள வைகுண்ட வாச பெருமாள் சிலையின் முன்னே வைத்து வழிபடப்படுகிறது. சோழர் காலத்தே எண்ணாயிரத்திலும் கல்லூரி நடத்தப்பட்டுள்ளது, மூன்று வேதங்கள், சம்ஸ்கிருத இலக்கணமான வியாகரணம் இவற்றை பயிற்றுவித்தோருக்கான ஊதியம், பயின்ற இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கப்படி எல்லாமும்கூட கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள கல்லூரி எனும் சொல்லை எனக்குக்காட்டிய அன்பு கடலூர் குள்ளஞ்சாவடியை சேர்ந்த நண்பர்.

நிலமகளை இடத்தொடையில் ஏந்தி கருடன் மேல் காலை வைத்திருக்கும் வராகரை பார்த்தோம். இடைவரை மட்டுமே உள்ள அமர்ந்த நிலை பச்சைவண்ண கல்சிற்பத்தை திருச்சுற்றில் பார்த்தோம். நிரம்பி வழியும் கல்வெட்டுகள் உள்ள கோவில் அடித்தளம், அதன் மேல் உள்ள தளம், கல்தூண்களோடு செங்கல்வைத்துக்கட்டப்பட்டுள்ளது.

 எண்ணாயிரத்தில் உள்ள மலையில் சமணர் படுக்கைகளும் பார்ஸ்வநாதர் சிலை ஒன்றும்கூட உள்ளது. எண்ணாயிரம் என்னும் பெயரே சமணத்தொடர்பை கூறுகிறது அல்லவா. கவி காளமேகம் பிறந்த ஊரும் எண்ணாயிரம் என்பதை அவரே தன் பாட்டில் சொல்கிறார்.
“மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ணனவ னிவன்பேர் காளமுகில் – கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே
இவனுக்கூர் எண்ணா யிரம்.”

 அங்கிருந்து எசாலம் வந்தோம். நாங்கள் கண்ட கோவில்களில் ஊர்சபையினராலேயே நடத்தப்படும் கோவில் எசாலம் ராமநாதீஸ்வரர் ஆலயம்தான். இதுவும் மதகடிப்பட்டு குந்தாங்குழி மகாதேவர் கோவில் போன்று முழுதும் கற்றளியே, தற்போது கலசம் ஒன்று மட்டும் உலோகத்தில் உள்ளது. ராஜேந்திரனின் குருவான சர்வசிவ பண்டிதரால் கட்டப்பட்டது இக்கோவில். கோவில் நடை பூட்டப்பட்டிருந்தது. மதிலுக்கு வெளியே அய்யனார் பஞ்சுப்பொதிகளை காவல் காத்துக்கொண்டிருந்தார், அவருக்கு சற்று தள்ளி சிதைந்த நிலையில், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட  கொற்றவை. புகழ்பெற்ற எசாலம் செப்பேடுகள் இங்கிருந்தே கிடைத்தன, சிற்ப அமைதி இவ்வூர் பல்லவர் காலத்திருந்தே பேர்பெற்றிருப்பதாக எண்ணச்செய்கிறது.

தேவக்கோட்டங்களிலிருந்த சிலைகள் சற்றே சிதைந்திருந்தன, புதுச்சிலைக்கு பின்னிருந்த பழைய தென்திசை கடவுளை பார்த்து வீரராகவன் அய்யா மீண்டும் ஆலமரத்தில் உள்ள கரகத்தை பற்றி சொன்னார் , இல்லை இது திருநீற்றுப்பையாகிய பொக்கணம்தான் என்று உறுதிபடக்கூறினான் பாரி, கொஞ்சம் சிறுகுழந்தையின் அடம்கொண்ட முகத்தோடு,

இந்த நடையின் வியப்பு பாரிதான்(பார்முகிலன்). சிறு வயதே இருக்கும் அவன் சிறுவதிலேயே கல்வெட்டுக்களை படிக்கிறான், வரலாற்று தகவல்களை செவ்வனே தெரிந்து வைத்திருக்கிறான், செப்பேடு பற்றிய விவரங்களை பின்னிருந்து சொல்லிக்கொண்டே இருந்தான், தனக்குத்தானே ஒப்பித்துக்கொள்பவனை போல. துருதுருவென நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும், சொல்வெட்டுக்கிடையில் கல்வெட்டு ஆர்வம்காட்டும் ஆச்சரியமான இளைஞன். கடவுள் அவனுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கட்டும்.   
           
எசாலம் செப்பேடுகள் பற்றி வீரராகவன் ஐயா சொல்லி முடித்ததும் பிரம்மதேசம் கிளம்பினோம் அங்குள்ள இரு சிவன் கோவில்களும் தொல்லியல் துறையால் மீளக்கட்டப்பட்டு வருகின்றன. அதில் பெருவளாகம் கொண்ட பிரம்மபுரீசர் ஆலயம் மட்டுமே வழிபாட்டிலுள்ளது. அங்கு கல்வெட்டு படிஎடுக்கும் முறையை வீரராகவன் அய்யா விளக்க, மங்கை அம்மா கல்வெட்டுகளை படித்துக்காட்டிக் கொண்டிருந்தார்.

நிறைவாக ராஜேந்திரன் கண்ணப்ப நாயனாராக வேடமிட்டு நடித்த மண்டபத்தில் நன்றி நவிலலும் பின்னூட்டமும், அங்கே பேசாததால் இங்கே சொல்லிமுடிக்கிறேன்.

“ஒரு மரபு நடை என்பது எப்படி உணரப்பட வேண்டும் என்றால், ஆயிரக்கணக்கான வருடப்பழமை உள்ள கோவில்கள் மலிந்த இந்நாட்டில், கோவில்கள் ஏன் எடுக்கப்பட்டன? ஆன்மிகம், இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பங்கள், வரலாறு, கல்வெட்டுகள், இசை, நடனம் இவை அனைத்தும் ஒன்று கூடும் புள்ளியாகத்தான் கோவில்கள் இருந்திருக்கின்றன. ஒரு கலாச்சார மையமாக, பொருளாதார மையமாகக்கூட இருந்திருக்கின்றன.
எழுதப்பட்ட சான்றுகளான கல்வெட்டுகளை தன்னகத்தே உள்ள கோவில்கள் தென்னிந்திய வரலாற்றை தனக்குள்ளே பொதித்துக்கொண்டுள்ள கல்புத்தகங்கள், அவற்றைத் திறந்து படிக்கும் முயற்சியே இந்த மரபுநடை. இதை சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்திய வல்லத்தரசு, மணிவண்ணன், அருமை குமரவேல் அண்ணன் மற்றும் அவர்தம் குழுவினருக்கு நன்றி. உடல்நலக்குறைவை பொருட்படுத்தாது வந்த மங்கை அம்மா, அவர்தம் ஊக்கத்தாலே என்றும் இளைஞராகவே இருக்கும் வீரராகவன் ஐயா, புதுவையை சுற்றி தன் முயற்சியால் பல்வேறு கல்வெட்டுகளை படிஎடுத்தும், பதிப்பித்தும், வரலாறு வளர்க்கும் அய்யா வெங்கடேசன் இவர்களின் தாள் பணிகிறேன்.
சேலம் ஆய்வு மைய நண்பர்களை நேரில் கண்டத்தில் பெருமகிழ்ச்சி அடைந்தேன், பெருமாள் அண்ணன் உரிமையோடு பேசிக்கொண்டு வந்தார், மகாத்மா அவர்களின் இன்சொல் கேட்கும் பேறுபெற்றேன். சரவணன் அண்ணன், அன்பு, சரவணன் , நவீன், பாரி , முருகன் , இளையராஜா ஆகியோரின் அன்பும் அறிமுகமும் அணுக்கமும் பெற்றேன்.
பெற்றதை எல்லாம் அடுத்த நடை வரை அசைபோடுவேன். நம் வரலாற்று அறிவு விரிவுபடட்டும்.

தாமரைக்கண்ணன்,
புதுச்சேரி.
4.4.2018

Comments

Popular posts from this blog

மந்தஹாசம்

மேலாளர் அழைத்தார் என்ன என்றேன், நான் இரு நாட்களாக  இங்கில்லை, லீவ்  என்றார், தெரியும் என்றேன் புன்னகையுடன். எனது கணினி ஏன் திறப்பில் உள்ளது என்றார், முகத்தில் புன்னகை இல்லை. உற்றுப்பார்த்தேன், ஆம். தகவல்திருட்டு மிகவும் மோசமான விஷயம், அதுவும் நம்பிக்கை மோசடி தர்மத்துக்கு மாறானது. ஆழ்ந்த அமைதி, அலுவலகத்தின் பெண்பாலினர் அனைவரும் கடவுச்சொல் அறிவர், என்செய. "சார் ஒருவேள" என்று துவங்கி, அவர் வயதொத்த மூத்த பெண்மணி ஒருவரது பெயரை உச்சரித்தேன், மனிதர் முகத்தில் பெருமிதம் கலந்த மந்தஹாசம்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா