களிறு, கைமா, வேழம் , எனப் பலசொற்கள் உண்டு தமிழில் யானையைக் குறிக்க , அவ்வகையில் கடலையும் யானையையும் மட்டும் தமிழ்மொழி அதிகம் நேசித்த காரணம் பரம ரகசியமாகவே இருக்கிறது . நானும் ஒரு யானையைப் பார்க்க மதுரை வரை சென்றிருந்தேன் . ஆலவாயின் வடக்கே , காலத்தை தன் காலடியில் இட்டு அதன்மேல் அசையாது படுத்திருக்கிறது ஒரு கல்யானை , நால்வாய் மேலே நீள்துதிக்கை கிடத்தி தூங்காநகரைக் கண்கொட்டாமல் பார்க்கும் அதற்கு , ஈராயிரம் ஆண்டுகளாகவும் யானைமலை என்றே பெயர் . பசுமைநடை அமைப்பின் நூற்றியோராவது நடை அங்குதான் நிச்சயிக்கப்பட்டிருந்தது . நிகழ்வை அறிந்து அதில் பங்கேற்பது உறுதியானதும் , முதல்முறை நிஜ யானையின் மீது ஏற்றிவிடப்பட்டபோது குத்திய அதன் கனத்த முடிகளையும் , அதற்காக அழுததையும் நினைத்துக்கொண்டேன் . யானைமலையில் வரலாற்றுச் சான்றாக மூன்று இடங்கள் உள்ளன , காலத்தால் முந்திய, மலையின் மேல் பகுதியில் உள்ள தமிழிக்கல்வெட்டு உடன் சமணப்படுக்கைகள் . அடுத்து மலையின் பக்கவாட்டில், தீர்த்தங்கரர்கள் உருவங்கள் செதுக்கப்பட்ட குகை, கல்வெட்