Skip to main content

Posts

Showing posts from April, 2015

உயர்திரு

மேலாளருக்கு மேலான உயர்திரு ஒருவர்  இருக்கிறார்.  அவருக்கு சமீபத்தில் கிரிக்கெட் கோச் உத்தியோகம் கிடைத்தது.  ஆட்ட முடிவில் அவரணித் தலைவரிடம் பேசுகிறார்.  "சார் பேட் பாதி மேட்ச்சிலே ஒடஞ்சு போயிருச்சு" "அதனால என்ன இப்போ ? டார்கட் தான் முதல்லயே சொல்லியாச்சே!  நீ அடிக்க வேண்டியது தானே....ங்கிறேன் "  

நரை திரை மூப்பு

நமது சுற்றம் ஓர் நாளும் நம்மை ஊக்கினோர் அல்லர் .  என் குடும்பம் எஞ்ஞான்றும்  என்மனம் அறிய நடந்தது இல்லை. என் குடியினர் நமக்கு மகற்கொடை மறுப்பர். எம்புதல்வர் நாள்தோறும் எமை பள்ளி புகுந்து இறைஞ்சச்செய்வர் . எம் ஊரினர் யாவருமெனை முதுகிலே நகைப்பர். எம் மன்னனோ கோல் தவறி குடிநடத்துவான்,...... ஆயினுமென்ன? அவர் என் மக்களே !  

புத்தக தினம்

மேலாளரிடம் 'இன்று உலக புத்தக தினம் சார்' என்றேன். அன்னாரின் பதிலுரை : நாங்கள் வாழ்ந்த கிமு மூவாயிரத்து ஆண்டுகளில் இது போல் புதிது புதிதாக தினங்களை உருவாக்கும் வழக்கு இல்லை .வெறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகள் தான் இருந்தது, மேலும் இது போன்ற தினங்களால் மக்களுக்கு புத்தகத்தை ஞாபகப்படுத்தி, அவற்றை  வாங்கச்செய்ய வைக்க  பதிப்பகங்கள் செய்யும்  மாபெரும் சூழ்ச்சியே இது. இதுபோன்ற முட்டாள்த்தனங்களை முறியடிக்க நான் அமெரிக்க அதிபராகவோ அல்லது அவரது முதன்மை ஆலோசகராகவோ இல்லாமல் போனது எனது பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியரின் சதி!

காய்ச்சல்

காய்ச்சல்களில் மிக மோசமானது இலக்கியக்காய்ச்சல் தான் . மருந்தே கிடையாது . சற்று எச்சரிக்கையாக இருங்கள் . ஜோக், கார்டூன் , கிசுகிசு தாண்டி கண்ணில் எதுவும் பட்டுவிடாதபடி பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது. அதுவே உடல்நலம் நயக்கும்  

பழிக்குப்பழி

கெட்ட வேளைகளில் அடிக்கடி தொல்லைபேசிய நண்பனிடம் என் வலைப்பூவை படித்துப்பார் என சொல்லிவிட்டேன் ! # பழிக்குப்பழி ...

புவி நாள் ! குறுங்கவிதைகள் ..

நீர் ! பாலாற்றின் பழைய காதலி  மூன்றாம்போரின் மூலகாரணி வலஞ்சுற்றும் கோளின் பெருங்கிழத்தி  பிளாஸ்டிக் உறைகொட்டி ஊற்றுக்கண் அடைத்ததனால்  ஆற்றுக்கண் வாராக்கரு ! 

தோசை!

நண்பர் ஒருவர் அயல்பாலை தேசத்தில் பணியாற்ற சென்றார் ! அங்கும் தோசை தான் திண்கிறார் .என்ன்ன்ன...................  

தீராப்பழி !

அலுவலகத்தில் அலுவலக நண்பர் ஒருவர் திருமண  பத்திரிகை வைத்துக்கொண்டே வந்தார், ( அலுவல் நேரத்தில் தான் ). என்னருகில் வந்த போது பத்திரிகை தீர்ந்திருந்தது, விருட்டென்று வெளிச்சென்றவர் மீண்டு வரவில்லை .  வீட்டுக்கு வந்த பின்,  போனில் பேசியவர்  பத்திரிகை தீர்ந்து விட்டதாகவும் பத்திரிகை வைக்காததால் வராது இருந்துவிட கூடாது , அது நம் கலாச்சார விழுமியங்களுக்கு நாம் செய்யும் குற்றம் எனவும் அறிவுறுத்தினார் . அதையும் கல்யாணத்திற்கு வருவதையும் ஒப்புக்கொண்டு போவதற்கு மறந்து விட்டேன் ,  ஐயகோ.. இது தீராப்பழி !

சன்னதம்

இன்றைய அலுவலக மீட்டிங்கில் திடீரென மேலாளருக்கு சன்னதம் வந்து விட்டது .  சும்மா சொல்லக்கூடாது முறையான  கோபமும் ஆவேசமும் கலந்துகட்டி தாள லயத்தோடு ஆடினார். குழுவின் அனைத்து ஆண்மக்களையும் மாறுகால் மாறுகை மாறுமூக்கு வாங்கியவர் ,உச்ச கட்ட   பரவசத்தில் எம் குழுவின் ஒரேயொரு பெண்ணை வெறித்து , "இவளன்றோ நமக்குக் கிடைத்த அருமணி, இவள் ஒருத்திதான் வழுவாது ஆற்றும் பணியன்றோ நம்மைக்காத்து நிற்கிறது" என்று கூவிக்கொண்டே போனார். ஹ்ம். அந்த மூஞ்சிக்கு நேத்து தான் எக்ஸ்செல் ஒப்பன் பண்ணவே  சொல்லிக்கொடுத்தேன் .

முகமன்

காடு திறந்தே கிடக்கின்றது , நெட் பேக் சல்லிசாக கிடைக்கின்றது. எழுதிப்பழக வலைப்பூ போல் பிரிதொரு இடம் இல்லை என பேயோன் போன்ற முது கிழவர்கள் நிரூபித்திருப்பதால் வலைப்பூ . உங்களது அன்றாட தலைவலிகளுள் அல்லது காப்பிக்களுள் ஒன்றாக இதையும் எடுத்துக்கொள்ளவும். அதை விடுத்து சீரியஸாக பதில் உரைக்கும் , வாதுக்கு வரும் சான்றோர்களுக்கு இது பூவல்ல .