Skip to main content

Posts

Showing posts with the label மேலாளர்

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

பலி வாங்குதல்

விற்பனை மேலாளர் ஒருவர் திடீரென எனது அலுவல் மேசைக்கருகே வந்தார், கீழுதட்டை கடித்துக்கொண்டு அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தார். யாரிடம் வாங்குப்பட்டார் என்று தெரியவில்லை, மீட்டளிக்க பலிமிருகம் துழாவுகின்றார். என் கணிப்பொறி திரையை உற்றுப் பார்த்தார், சென்றும் விட்டார். வெளியே உயரதிகாரி அம்மணியிடம் அவர் கத்திக் கொண்டிருக்கும் சத்தம். திரையிலிருந்த என் குலதெய்வம் காளி யாரையோ மிதித்து நின்றிருந்தாள்.

திருத்தம்

நேற்று அலுவலக கூட்டம் ஒன்று நடந்தது, நூற்றி ஐம்பது பேர் கலந்து கொண்டார்கள். ஆமாம், நேர்முக கூட்டம் இல்லை இணையக்கூட்டம் தான். மேலாளாளர் ஸ்ரீ பேச ஆரம்பித்தார். இது அவருடைய கோப்பை தேநீர் இல்லை என்று அறிந்தும்கூட பருக ஆரம்பித்தார். உண்மைத் தலைவர் வேறு எங்கோ கோப்பை தேடியிருக்கலாம். தேவகுமாரனை நினைத்துக்கொண்டு சாட்டையை ஒரு சுழற்று சுழற்றினார் மே.ஸ்ரீ . உடனே நம்பியார் கையிலிருந்ததை எம்.ஜி.யார் பறித்ததுபோல பாய்ந்து வந்தார் பெருங்கிழ மேலாளர். கோப்பையை கவ்வ ஆரம்பித்த மே.ஸ்ரீயை அப்படியே பற்றிப்பிழிந்து தூரப்போட்டார். உக்கிரம் அடங்காமல் உரையாடினார் பெ.கி.மே , என்னைத்தவிர யாராவது இங்கு பணிபுரிவதுண்டா என்று உறுமினார். மே.ஸ்ரீ முனகலாக 'சாரே கொல மாஸூ' என்றார். புன்னகைத்து 'என்னையும் மே.ஸ்ரீ யும் தவிர' என்று திருத்தினார் பெ.கி.மே.

தங்கச் செம்பு

பறை, துடி, மிருதங்கம், தவில், தர்புகா, கடம், டிரம்ஸ் முதலிய தாளக்கருவிகள் இசைத்துறையில் உண்டு. ஈசன் திருஞான சம்பந்தருக்கு தம்பி கையால் தாளமிடாதே என்று பொற்தாளம் வழங்கினாராம்.  லயம் பிதா என்ற பழமொழி இதற்குப் பின்னால் வந்தது. தாள வகைகள் இத்தனை என்று கர்னாடக இசை கற்கையில் சொல்லித்தருகிறார்கள். என் மேலாளர் இதையெல்லாம் அறிந்தவரா எனத்தெரியாது. அயலூர் உயர்மேலாளர் ஸ்ரீ  ஒருவர் அலுவலக கட்செவிக் குழுமத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார். அதில் அவரது அருந்தவப் புதல்வி கிரித்தவ தேவதைகளுக்கான லட்சணங்கள் பொருந்த உடையணிந்திருந்தார். அவர் பள்ளியில் நடைபெறும் ஆங்கில நாடகத்தில் அவர் ஒரு இறைத்தூதுவராக தோன்றியிருப்பார் போல. குழுவின் நண்பர்கள் அவரவர் அளவில் பாராட்டிக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் தொலைவிலிருந்த நமது மேலாளர் அனைவரையும் பிடித்துத்தள்ளிவிட்டு மூச்சிரைக்க முன்வந்து தனது வாழ்த்துதலை இட்டிருக்கிறார். "இவ்வாறே தொடர்ந்து தூதராகி பிற்காலத்தில் நீங்கள் அமெரிக்காவுக்கான வெளியுறவுத் தூதராக வேண்டுகிறேன்"

எல்லோரும்

மேலாளர் அடிக்கடி என்னை அழைத்து கேட்கும் கேள்வி இது மொபைல் ஏதாவது பிரச்சனையா " ஒற்றைச்சொல்லில் சுருக்கமாக பதிலை நாடும் கேள்வி நேற்று நான் கூப்பிட்டப்போ ஏன் எடுக்கல " நீங்கள் நள்ளிரவு சம்போகத்திலிருந்தாலும் உதறி எறிந்துவிட்டு போனை எடுத்து பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை என்பது அவர்களது உறுதிப்பாடு. நேற்று மேலாளர் விடுமுறை, மூத்தமேலாளர் அழைத்தார்.  என்ன கவிதை எழுதியிருக்கான் உங்காளு? சீர் தளை எதுவும் மனசிலாகலை. அப்பிடியே மேலே அனுப்சா என்ன அனுப்சுருவான். எட்டிப்பார்த்தேன் எஸ்செல்லில் வழக்கமாக  மேலாளர் இழைக்கும் சூத்திரப் பிழைதான். சரிசெய்தென். மூ மேலாளர்,  'சரி போ, போனடிச்சாலும் எடுக்கானா பாரு உங்காளு என்றார். அவரும்  இந்நாட்டு மன்னர் தானே. 

கலிகாலம்

நேற்று  அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்ததா என்றார் மேலாளர். ஆம் அந்தத்தகவலை ஏன் என்னிடம் சொல்லவில்லை அமைதி நான் கூட்டத்தில் .. அந்தக்கூட்டத்தை நடத்த நான் எவ்வளவு முயற்சித்தேன் தெரியுமா, நான் இல்லாத வேளையில், எனக்குத்தெரியாமல் நடத்தி விட்டார்கள், எல்லாரும் நம்பிக்கை மோசம் செய்கிறார்கள். இல்லை நான் .. நீயும் சேர்ந்து இப்படியெல்லாம் செய்வது வருத்தமாக இருக்கிறது. மூத்த மேலாளருக்கும் கொஞ்சம் கூட புத்தி அறிவு வேண்டாமா, நான் எவ்வளவு முக்கியமானவன். குரல் கம்மியது. முகம் சிவந்தது. அருகில் அம்மணி நின்று புன்னகைத்தாள். பாவம்தான்.  காத்திருந்து செய்திருக்கிறார்கள்.

லாபம்

அம்மணி ஒருவர் உடன் பணிபுரிகிறார். அலுவலகத்தின் முதன்மை தகவல்சொல்லி அவர்தான். யாவரும் அவள்மேல் பாசமழை பொழிகிறார். நேற்று என்னைப்பார்த்து சிரித்தார், கடன்காரனுக்கு ஈயும் அசட்டுச்சிரிப்பை பதிலளித்தேன். மாலை மேலாளர் அழைத்து எனது தகவல் தொடர்பு முறை மிகமோசம் என்று வசைந்தார். ஹும், என்ன லாபம்.

கலைச்சொல்

மூத்த மேலாளருக்கு ரத்தக்கொதிப்பு உண்டு, பாரியான சரீரம், ஒரு மூன்று, நான்கு நாடி சரீரம். யார் அழகாகப் பாடினாலும் அவருக்குப் பிடிக்காது, சுரேஷ் இன்றுவரை அவரால் மூக்கறுக்கப்படுகிறான், ம்  ஆணென்பதால் அவ்வளவுதான். விசாரித்ததில் தெரியவந்தது, மேலாளர் முந்தைய பணியிடத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் என்று புகழப்பட்டவர். சொன்னதையே சொல்லவேண்டாம் பாருங்கள், இன்றைய துதிபாடிகளுக்கு மேலும் ஒரு கலைச்சொல்.

மந்தஹாசம்

மேலாளர் அழைத்தார் என்ன என்றேன், நான் இரு நாட்களாக  இங்கில்லை, லீவ்  என்றார், தெரியும் என்றேன் புன்னகையுடன். எனது கணினி ஏன் திறப்பில் உள்ளது என்றார், முகத்தில் புன்னகை இல்லை. உற்றுப்பார்த்தேன், ஆம். தகவல்திருட்டு மிகவும் மோசமான விஷயம், அதுவும் நம்பிக்கை மோசடி தர்மத்துக்கு மாறானது. ஆழ்ந்த அமைதி, அலுவலகத்தின் பெண்பாலினர் அனைவரும் கடவுச்சொல் அறிவர், என்செய. "சார் ஒருவேள" என்று துவங்கி, அவர் வயதொத்த மூத்த பெண்மணி ஒருவரது பெயரை உச்சரித்தேன், மனிதர் முகத்தில் பெருமிதம் கலந்த மந்தஹாசம்.

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிருக்கிறார்.    .

உயர்திரு

மேலாளருக்கு மேலான உயர்திரு ஒருவர்  இருக்கிறார்.  அவருக்கு சமீபத்தில் கிரிக்கெட் கோச் உத்தியோகம் கிடைத்தது.  ஆட்ட முடிவில் அவரணித் தலைவரிடம் பேசுகிறார்.  "சார் பேட் பாதி மேட்ச்சிலே ஒடஞ்சு போயிருச்சு" "அதனால என்ன இப்போ ? டார்கட் தான் முதல்லயே சொல்லியாச்சே!  நீ அடிக்க வேண்டியது தானே....ங்கிறேன் "  

புத்தக தினம்

மேலாளரிடம் 'இன்று உலக புத்தக தினம் சார்' என்றேன். அன்னாரின் பதிலுரை : நாங்கள் வாழ்ந்த கிமு மூவாயிரத்து ஆண்டுகளில் இது போல் புதிது புதிதாக தினங்களை உருவாக்கும் வழக்கு இல்லை .வெறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகள் தான் இருந்தது, மேலும் இது போன்ற தினங்களால் மக்களுக்கு புத்தகத்தை ஞாபகப்படுத்தி, அவற்றை  வாங்கச்செய்ய வைக்க  பதிப்பகங்கள் செய்யும்  மாபெரும் சூழ்ச்சியே இது. இதுபோன்ற முட்டாள்த்தனங்களை முறியடிக்க நான் அமெரிக்க அதிபராகவோ அல்லது அவரது முதன்மை ஆலோசகராகவோ இல்லாமல் போனது எனது பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியரின் சதி!