இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.
அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.
வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.
கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது, அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்று கம்பீரமாக வந்துகொண்டிருந்தது அவ்வளவுதான் கரவொலி, வீளை என்று ஒலி மட்டுமே எங்களை சூழ்ந்திருந்தது, சில மணித்துளிகளுக்கு காதே கேட்காத அளவுக்கு. பேரணி உழைப்பாளர் சிலையை சென்றடைந்ததும் மேலும் முழக்கங்கள்.
இத்தகு கூட்டங்கள் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது, மக்கள் தாங்களே தான் முன்வந்து கலந்து கொள்ளுகிறார்கள் யாரும் மது பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கவில்லை. இவ்வளவு மக்கள் சக்தியும் என் இந்த மாநிலத்தில் முழுதும் பயன்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரிய கேள்விதான்
மதியம் புத்தகக்கண்காட்சிக்கு சென்றேன், மாலை வரை அங்கிருந்து விட்டு பாண்டிச்சேரி திரும்பியாயிற்று. புத்தகக்கண்காட்சி அனுபவங்களை நாளை சொல்கிறேன்....
Comments
Post a Comment