Skip to main content

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான்.


பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நான்கு பேர் உண்டு கொடுத்த தொகை 120 தான், வரும்போது அந்த பருமனான அக்காவிடம் சாப்பாடு நன்றாக இருந்தது என சொல்லிக்கொண்டு வந்தேன், செயற்கை வெட்கமெல்லாம் இல்லாமல் முகம் நிறைந்த சிரிப்போடு அப்பிடியா என்றார், காலமெல்லாம் உண்பிக்கும் பெண்களின் சிரிப்புத்தொடர்ச்சி கண்முன் வந்து போகிறது.


தளவானூர் குடைவரை பற்றி நண்பர் திருவாமாத்தூர் சரவணகுமார் தெளிவாகவே சொல்லியிருந்தார், இந்தப்பகுதிகளில் ஏதேனும் தொல்லியல் சார்ந்த இடங்களை நேரில் பார்க்க வேண்டுமென்றால் நான் தயங்காமல் முதலில் அணுகக்கூடியவர் சரவணன் தான், எல்லாத்தகவல்களையும் நினைவிலிருந்தே சொல்லக்கூடியவர், இத்தனைக்கும் இளைஞர். இது ஓயாது அலைந்து அவர் அடைந்த ஞானம். தமிழ்நாட்டில் இப்போது இப்பிரிவில் இவர்போல சில நூறு இளைஞர்கள் இருக்கிறார்கள். அங்கிருந்து மேலெழுபவர்கள் மிகக்குறைவு, பலர் பொருளியல் தேடலால், அதைநோக்கி தங்கள் கள அறிவை திசைதிருப்பும் செயலால் , குடியால் கூட வீழ்ந்துவிடுகிறார்கள், அவற்றிலிருந்து எழக்கூடிய எல்லா தகுதிகளும் உள்ளவர் சரவணன்.
விழுப்புரம் செஞ்சி முக்கியச்சாலையிலிருந்து தளவானூர் செல்லும் பிரிவில் திரும்பி ஆங்காங்கே விசாரித்துக்கொண்டு சென்றோம். காரை நிறுத்தி விட்டு இறங்கியதும் கொஞ்ச தூரத்தில் கருப்பு நாய் ஒன்று எங்களை நோக்கி உற்சாகமாக ஓடி வந்தது, நாய்களுக்கு ஜெயமோகன் வாசகர்களையும் அடையாளம் தெரிவது எந்தவகை நியாயம்? ஒரு கட்டத்தில் தொல்லியல்துறை பலகைகளும் இல்லாமலாயின, இதுபோல இக்கட்டுகளில் கைகொடுப்பவர்கள் ஆடு மேய்ப்பவர்கள் தான். தனிமையில் ஏதேனும் ஒரு பாறை மேலே அமர்ந்திருப்பவர்களிடம் கேட்டால் சரியான வழி கிடைக்கும். தளவானூர் குடைவரை மகேந்திரவர்ம பல்லவன் எடுப்பித்த குடைவரைகளுள் முக்கியமானது. அவரது கல்வெட்டுப்படி சத்ருமல்லேஸ்வரம் என்று பெயரிடப்பட்டது. அவரது முதல் குடைவரையான மண்டகப்பட்டு லக்ஷிதாயனம் இங்கிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில்தான் உள்ளது, அதைப்பார்த்துவிட்டு இங்கு வருபவர்களுக்கு இந்த குடைவரைகள் அடைந்த பரிணாம வளர்ச்சி பிடிபடும்.


சத்ரு மல்லேஸ்வர குடைவரையில் அழகிய மகர தோரணம் ஒன்று முகப்பில் பொலியப்பட்டுள்ளது. அவற்றுக்கு மேல் கூடுகளில் தேவர்களின் முகங்கள், வெளியே இரு வாயிற்காவலர்கள், மண்டகப்பட்டோடு ஒப்பிட இன்னும் தெளிவான சிற்பங்கள், அழகிய ஆடை அணிகள். உள்ளே குடைந்து நேர்முகமாக கருவறை அமைக்காமல் பக்க வாட்டில் திரும்பியுள்ளபடி சிறிய கருவறையும் அதற்கு முன்பாக முக மண்டபமும் அமைத்திருக்கிறார்கள், திருமயம் சிவன் குடைவரையின் தோற்றம் போல. மேலும் கருவறை வாயிலிலும் இரு துவாரபாலர்கள் உள்ளனர். காலத்தால் முந்தைய குடைவரையான மண்டகப்பட்டில் நேரடியான மண்டபமும் மூன்று கருவறைகளும் உள்ளன, இங்கு ஒற்றை கருவறை மட்டுமே. நாங்கள் செல்லும்போதே இரு பெரியவர்களும் ஒரு சிறுவனும் அங்கு இருந்தார்கள், நடுவயதுக்காரரான வெள்ளைச்சட்டைக்காரர் ஒருவர் உற்சாகமாக பேச துவங்கினார், மணிமாறன் அவருக்கும் வயதான மஞ்சள் சட்டை பெரியவருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியபடிதான் குடைவரையை பார்த்துக்கொண்டிருந்தான். வெள்ளுடைக்காரர் சிவப்பரம்பொருளின் பெருமைகளை கொஞ்சமாக எடுத்துவிட நமதாட்கள் இயல்பாக முன்னெச்சரிக்கை அடைந்து, பாறைகளுக்கு மேலே செல்ல யத்தனித்தோம்.

இந்த குடைவரை பாறைக்குமேல் சமணப்படுக்கைகள் உள்ளதாக அறிவிப்பு இருந்தது, வழக்கைப்பக்கம் திரும்பி மேலே செல்ல ஒற்றைக்கால் மட்டும் வைக்கக்கூடிய படிகள் நீண்டன, இரு பெரும்பாறைகள் ஒன்றோடு ஒன்று சாய்ந்து மேலே சில பாறைகளை அடுக்கி நிழலாக இருந்தது. குழந்தைகள் சிற்றில் கட்டுவதுபோல யாரோ விளையாடியிருக்கிறார்கள் அல்லது பச்சை வண்ணச்சிறுமியொருத்தி கழங்காடிவிட்டு அம்மா கூப்பிட்டவுடன் அப்படியே கற்களை விட்டுவிட்டு எழுந்து சென்றதைப்போல . அங்கிருந்த குளிர்ச்சி, கீழே கண்நிறைத்துத் தெரிந்த பச்சைப்பரப்பு எல்லாரையும் பயணத்திலிருந்து எளிதாக்கியது , மெல்ல தரையில் அமர்ந்தும் படுத்தும் தூரத்தில் பார்வையை ஓட்டிக்கொண்டு சிறிது நேரம் சும்மா இருந்தோம், கீழிருந்து நம்முடனே வந்த வெள்ளை சட்டைக்காரர் பையனிடம் , பாருடா பகவான் எப்படியெல்லாம் படைச்சிருக்கான், இதையெல்லாம் தவறவிட்டுருப்போமே என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். பேச்சுவாக்கில் அவர் மகாபாரதம் சொல்பவர், அத்தற்காகத்தான் உத்திரமேரூரிலிருந்து தென்புதுப்பட்டு என்னும் கிராமத்திற்கு வந்ததாக சொன்னார், நண்பர்கள் அனைவரும் கொஞ்சம் உள்ளுக்குள் அதிர்ந்து, வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவரை நோக்கி திரும்பி அமர்ந்தோம்
நண்பரின் பெயர் குடவோலை கா முருகன், பாரதக் கதை சொற்பொழிவாளர். வட தமிழ்நாட்டில் திரௌபதை ஆலய திருவிழாக்களில் பாரதக்கதை சொல்லல் ஒரு தவிர்க்க இயலாத சடங்கு. பாரதம் படிப்பவர் பெரும்பாலும் அங்கேயே தங்கி பத்துநாட்கள் கதை சொல்ல வேண்டும். ஊரின் வழக்கத்தை பொறுத்து நாட்களும் கதை சொல்லல் முறையும் மாறுபடும். முருகன் தானே விரும்பி இத்துறைக்கு வந்தவர். இசை நாட்டமும், கருவிகளை வாசிப்பதும் ஆரம்பகாலத்தில் இவரை உள்ளிழுத்திருக்கிறது, சுப்பு ஆறுமுகம் மீது கொண்ட ஆர்வத்தால் வில்லிசை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார், கணீரென்ற குரல் அவருக்கு. தானே பாடல்கள் எழுதிக்கொண்டு ஒரு நாள் உத்திரமேரூர் வடவாயிற் துர்க்கையம்மன் கோவில் திடலில் நிகழ்ச்சிகள் நடத்த துவங்கிவிட்டார், வில்லிசைக்கு மானசீக குருதான். பின் குருமுகமாக பாரதக்கதை சொல்லல் நோக்கி வந்திருக்கிறார், பின்பற்றுவது வில்லிபுத்தூரார் பாரதம். பத்தாண்டுகளாக பாரதம் சொல்கிறார், அவரிடம் பாரதம் படிப்பது பற்றி கேள்விகள் கேட்டு ஒரு வீடியோ பதிவு செய்து கொண்டேன். அவரை வணங்கி விடைபெற்றுக்கொண்டோம். அவர் பேசும்போதெல்லாம் கூடவே பயணிக்கும் அந்த சிறுவனின் கண்களில் தனிஒளி.அவர் பெயர் தமிழ், பின்னாளில் தமிழ் - முருகனை விஞ்சக்கூடும். இவ்வளவு நடக்கையில் உள்ளூர் இளைஞரொருவர் அங்கு ஓரமாக படுத்துக்கொண்டு போனில் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார், பக்க வாட்டில் ஒரு பாம்பு பாறையிடுக்குக்குள் சென்று மறைந்தபோதும் தந்தவம் கலையாதவர், நாங்கள் கிளம்பும் வரை அவர் இருக்கையை விட்டகலாத கர்மயோகி.


தளவானூரில் இருந்து கிளம்ப பதினொன்றரை தாண்டி விட்டது, திட்டப்படி அடுத்த இடம் சிங்கவரம் ரெங்கநாதர் கோவில் செல்லவேண்டும். ஆனால் கோவில் திறந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் முதலில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செஞ்சி வேங்கட ரமணர் கோவிலுக்கு சென்றுவிட முடிவெடுத்தோம். வழியில் சமணப்பலகை (புதிய சொல்லாட்சியாக்கும், அறுகோண நீட்சியாக கால் நாட்டியிருக்கும், ஜெயின் சங்கங்களால் அமைக்கப்பட்டிருக்கும் சமண தகவல் பலகைகள் )ஒன்று இருந்தது சேரனூர் என்னும் ஊரில் பஞ்சனார் பாறை என்னுமிடத்தில் சமணக்கால்தடமும் படுக்கைகளும் இருப்பதாக பலகை சொன்னது, மீண்டும் ஊருக்குள் வண்டியை திருப்பினோம். வழியில் இருந்த மலைகளை பார்த்தபடி, கொட்டியிருக்கும் கற்களை ஒவ்வொன்றாக எடுக்க முடிந்தால் மொத்த மலையையும் பிரித்து எடுத்துவிடலாம் என்றார் சீனு. வழியில் ஒரு ஆளில்லாத கல் மண்டபம் இருந்தது , அருகில் பாறையில் ஏதோ துறவியொருவர் பற்றிய தமிழ் எடுத்துக்கள் இருந்தன, மிகவும் பிற்காலத்தவை. அங்கிருந்தவர்களிடம் வழி விசாரித்துக்கொண்டு, சேரானூர் சென்றோம். ஊர் மக்கள் யாருக்கும் அப்படி ஒரு சமணர் இடம் இருப்பது தெரியவில்லை, ஆடுமேய்ப்பவர்கள் எப்போதோ பார்த்திருக்கிறார்கள், ஆனால் வழி ஏதும் உறுதியாகத் தெரியவில்லை.பக்கத்தில் எங்காவது பாறைகளில் சென்று பார்க்கலாம் என்றால் ஊரில் எல்லையில் மூன்று புறமும் பாறைக்குன்றுகள் தான் சூழ்ந்திருக்கிறது. ஊருக்கு வெளியே வரும்போது ஒரு பாறைமேல் சிறிய முருகன் கோவில் ஒன்று இருந்தது, சந்தேகத்தோடு சீனுவை திரும்பிப்பார்த்தேன், சேச்சே அப்படியெல்லாம் இருக்காது என்றார், அரை மனதோடு கிளம்பினோம்.
வழியில் கோணை என்ற ஊரிலிருந்து செஞ்சிக்கு செல்லும் வழியில் தூரத்தில் ஒரு பெரிய ராஜகோபுரத்தோடு கூடிய கோவிலைப்பார்த்தேன், வண்டியை மணிமாறன் அதற்குள் திருப்பி விட்டிருந்தார். இது போன்ற தருணங்களில், மிட்டாய்க்கடை பார்த்த குழந்தையாகிய என்னை சமாதானப்படுத்துவது கடினம். மீண்டும் ஒரு வளைவில் திரும்பியபோது சாலையிலிருந்து கோவிலை நோக்கி வழி ஒன்றிருந்தது, உடனே சேறு மிகுந்த அந்த வழியில் கோவிலை நோக்கி மீண்டும் எங்கள் கார் திரும்பியது.


உண்மையில் நாங்கள் செல்கையில் அங்கு தூரத்தில் சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். வளாகத்திற்குள்ளே பைக் நின்றிருந்தது, மாடு ஒன்று கட்டப்பட்டு புல் கடித்துக்கொண்டிருந்தது.அப்படியே நேர்பின்னால் ஒரு மலை, சுற்றி சில வயல்கள், வேறு எதுவுமே இல்லாத ஒரு இடம். ஆளில்லாத ஒரு பழைய கட்டிடத்திற்குள் நுழையும் திகில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்தது.நான் இங்கே ஏற்கனவே வந்திருக்கேன் வேங்கட ரமணர் கோவிலேதான் ஆனா முந்தி இது இந்த இடத்தில் இல்லையே என்று இன்னும் கொஞ்சம் பீதி கிளப்பினார் சீனு.


ஏழுநிலை ராஜ கோபுரம், வாயிலின் ஆரம்பத்திலும் முடிவிலுமாக கொடிப்பெண்கள், பின்னல்களில் தசாவதாரக்கோலங்கள், கிருஷ்ண லீலைகள், பன்னிரு ராசிகள். நான்கு கொடிப்பெண்களுக்கும் பக்கவாட்டில் நான்கு சுவரிலும் சிற்பங்கள், ஆதிமூலமென யானை அழைப்பதும், அக்கணம் பொற்புள் மீது திருமால் அமர்ந்தெழுந்து ஆழி விடுப்பதும், கஜேந்திரன் அருகில் சென்று பெருமாள் அருள்செய்யும் சிற்பத்தின் இருபுறமும் வடிக்கப்பட்டுள்ளது. ஏழு பனைகளை துளைத்துச்செல்லும் வாளியை வளைக்கும் ராமன், திரும்பிய பக்கங்களிலெல்லாம் இரணியனை மடியில் போட்டு குடலை உருவும் நரசிங்கர். குட்டி ஹம்பி தான் இது என்றார் சீனு.


கண்பட்டு விடுமென்று நுழைவாயிலை தாண்டியதும் உள்ளே சிற்பங்களேதும் பெரிதாக இல்லை. பக்கவாட்டில் கூரை இல்லாத ஒரு மண்டபத்தின் தூண்கள் மட்டும் நிற்கின்றன. மூன்று தனித்தனி சன்னதிகள். மையத்திலுள்ளதற்கு யாளிப்படிகள், கோபுரம் சுதையாலானது. ராமரும், சீதையும் அமர்ந்திருக்க பரிவாரங்கள் நின்று வணங்குகிறார்கள். கருவறைகளில் எந்த சிலைகளும் இல்லை. இருபுறமும் யானைப்படிகள் கொண்டு நிற்கும் இரு சன்னதிகள். மையத்திலுள்ள கோவிலின் அடித்தளம் உடைந்துள்ளது, ராஜகோபுரத்தில் அரசும் வேம்பும் வேர்பிடிக்கின்றன, முற்றாகவே கைவிடப்பட்டிருக்கிறது கோவில்.அரும்பொருள்களை எல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம். வழிப்போக்கர் யாரையும் உடனே கவர்ந்திழுப்பது கோவில் வளாக முகப்பிலுள்ள ஊஞ்சல் மண்டபம்தான். விண்ணோக்கி உயர்ந்திருக்கும் மண்டபம், ஒரு கூட்டல் குறி வடிவில் உள்ளது. மழைக்குப்பின் அடிக்கும் வெயில் ,தெளிவான வானம் பின்னணியில் நிற்க, வரைந்து வைத்த ஓவியம் போலிருந்தது. சொற்கள் திகைத்து நின்றுவிடும் அழகு .பிற்பாடு விசாரித்து தெரிந்து கொண்டோம் உண்மையில் இது புகழ்பெற்ற பட்டாபிராமர் கோவில், நரசிங்கராயன்பேட்டை பகுதிக்கு அருகில் உள்ளது.
ஆனால் வழிபாடற்ற கோவிலாதலால் பெரும்பாலானவர்கள் அறியவில்லை. அங்கிருந்து பயணித்து நிஜ வேங்கட ரமணர் கோவிலை அடைந்தோம், செஞ்சிக்கோட்டை நுழைவாயிலுக்கு மிக அருகில் இருக்கிறது. ஆனால் ராஜகோபுரத்தின் நிலை இன்னும் மோசம், பெரிய வளாகம், கல்தானே கொட்டிக்கிடக்கிறது அடிச்சுக்கிளப்பு என்று 16 அடி தூண்களாக நிறுத்தித் தள்ளியிருக்கிறார்கள். ஒருவகையில் இந்த மிகை பட்டாபி ராமர் கோவிலை இன்னும் கொஞ்சம் அழகாக்கிக் காண்பிக்கிறது. வேங்கட ரமணர் கோவில் வழிபாட்டில் உள்ளது ஒரு நல்ல விஷயம். பெரும்பாலும் கோட்டைக்குச்சென்று களைப்படைய விரும்பாதவர்கள் குடும்பத்தினருடன் வருமிடம் இது.

வேங்கட ரமணர் கோவிலில் நுழைந்த போதிலிருந்து வானர சாம்ராஜ்யத்திற்கு வந்துவிட்ட உணர்வு, கோவிலுள் நுழைந்ததும் என்னடா தம்பி கோவிலுக்கு வந்தியா என்ற விசாரிப்புக்குரல் கேட்டது, சீனுவின் முன் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது. குரங்குகள் ஜாக்கிரதை என்னும் நாயக்கர்கால அறிவிப்புப் பலகையை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை , அது இருப்பது சிற்ப வடிவில். கொடிப்பெண்ணின் அருகில் நிறைய குரங்குகள் தொந்தரவு செய்வதை சிற்பமாக வடித்திருக்கிறார்கள். நிஜத்திலும் நிறைய குரங்குச் சிறுவர்கள் சிறுமிகள் கோபுரங்களில் அட்டகாசம் செய்துகொண்டிருந்தார்கள், கீழே ஒரு மனிதக் குடும்பம் உணவருந்திக் கொண்டிருந்தது, அதன் தலைவர் நீண்ட மூங்கில் கழியுடன் எப்டி என்னைத்தாண்டி குரங்கு வருதுன்னு பாத்திர்ரேன் என்றபடி நடனமாடிக் கொண்டிருந்தார், மேலிருந்த சிறுவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்திருக்கும்.
உண்மையில் செஞ்சி, தமிழகத்தின் ஹம்பி தான். செஞ்சி சோழர்கள் காலத்திலிருந்து கோட்டையாக இருந்த பதிவு விக்கிரம சோழன் உலாவில் உள்ளது. செஞ்சியை காடவர்கள், நாயக்கர்கள், கோனார்கள், மராத்தியர்கள் என்று வேறுபட்ட அரசர் நிரை ஆண்டிருக்கிறது. நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் ஆனால் தஞ்சை கோவில்களில் உள்ளது போன்ற கல்வெட்டுகள் இங்குள்ள பெரிய கோவில்களில் இல்லை. நமது மிதமிஞ்சிய மொழிப் பெருமிதத்தை நிறுவவும் கொண்டாடவும் வாய்ப்பில்லாததால் இத்தகு இடங்கள் அரசால் கைவிடப்படலாகாது. கீழடி எப்படி வரலாற்றில் முக்கியமோ இணையாகவே செஞ்சியும் முக்கியம்தான். மிக மிகப்பழையது என்னும் லேபிள் மட்டுமே நமது நோக்கமெனில் கண்முன்னே பிற வரலாற்று சான்றுகள் மறைந்தொழியும்.


வேங்கட ரமணரை வழிபட்டுவிட்டு வெளிவாயில் படிகளில் அமர்ந்தோம் வழிநெடுக பேசிக்கொண்டு வந்தாலும் , ஏதாவது ஒரு கோவிலில் அல்லது தொல்லியல் தளத்தில் இருந்து உரையாடுவது எங்கள் பயணங்களில் மறக்க இயலாத அனுபவமாக அமைந்துவிடுவதை ஒவ்வொரு முறையும் உணர்ந்திருக்கிறோம். செஞ்சி கோட்டையை பற்றி பேசத்துவங்கி பேச்சு, சமணம் , மதங்களின் கட்டுமானங்கள் வழியே கிறிஸ்தவத்தின் அடுக்குகள் அது மாற்றியமைக்கப்பட்ட விதத்தில் வந்து நிலைகொண்டது. மேலை வரலாறு தத்துவத்தில் நான் கடைசி பென்ச் மாணவனாகையால், சந்தேகங்களை திருமா மற்றும் சீனு அண்ணாவிடம் கேட்டேன், ஆபிரகாமிய மதங்கள் எப்படி தங்கள் மூலநூலை அமைத்துக்கொண்டன, யூதமும் இஸ்லாமும் எப்படி தங்கள் கேனான் சார்ந்து இயங்குகின்றன, இப்படி மூர்க்கமாக வலியுறுத்துவதனால் என்ன இழப்பு என்பதெல்லாம் சொல்லிவிட்டு, பைபிளின் கட்டுமானத்தை பற்றியும் கான்ஸட்டாண்டி நோபிள் குறித்தும் விரிவாகவே விளக்கிச் சொன்னார்.


பயணத்தில் திட்டமிடப்பட்ட இடமான திருநாதர் குன்றுக்கு சென்றோம், சமணத்தளங்களை பெரும்பாலும் திறந்த வெளியில் பாறைகளில் குன்றுகளில் காணலாம். இன்று எனக்கு பெரிய இடராக தெரிவது முக்கியக்கோவில்கள், தொல்லியல் களங்கள், சமண்த்தளங்கள் எல்லாமே காமத்திற்கும், குடிக்குமான இடங்களாக மாறியிருப்பது. பட்டாபி ராமர் கோவிலில் ராஜ கோபுரத்திற்குள் அடியெடுத்து வைக்கையிலேயே திருமா பதறினார், அங்கு உடைந்த கண்ணாடிச் சிதறல்கள். உள்ளே கோவில்களின் படிகளில் பீர் புட்டிகளில் மூடிகள், கல் நுனிகளை புட்டிகளை அடித்துத்திறக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். திருநாதர்க்குன்றில் முழுக்கவே பலவண்ண கண்ணாடி சிதறல்கள், வீசப்பட்ட பிளாஸ்டிக் புட்டிகள், வரலாற்றுக்கு நாமளிக்கும் மரியாதை. என்னை இலகுவாக்க, திருமா தியானம் செய்வதுபோலத்தான் போதையும், இருவரின் மனநிலையும் அப்போது ஒன்றேதான் எனவே இந்த இடங்களை தேர்ந்தெடுப்பதில் வியப்பில்லை என்றார். அவரளவுக்கு ஜனநாயகமாக மனங்களை ஆராய நான் நல்லவனில்லை, பதிலுக்கு இதைச்செய்பவர்களை மாறுகால் மாறுகை வாங்கும் முறையை நான் ஆதரிப்பேன்.


திருநாதர்குன்று என்னுமிடம் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பது, இருபத்திநான்கு சமண தீர்த்தங்கரர்களும் ஒரே கல்லில் வரிசையாக வடித்துவைக்கும் முறை ஒன்று சமணர்களிடையே இருக்கிறது அதற்கு சிறந்த அழகிய உதாரணம் திருநாதர் குன்று, இதேபோல் இன்னொன்று கழுகு மலையில் உள்ளது. மேலதிகமாக நல்ல நிலையில் உள்ள பார்ஸ்வ நாதர் சிற்பமும், இரண்டாக பிளவுற்ற ஒரு தீர்த்தங்கரரின் பெரிய சிலையும் இங்கு உண்டு. தமிழ் எழுத்துக்களில் ஐ எனும் எழுத்து முதலில் காணப்படும் கல்வெட்டு இங்கு தான் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. சந்திர நந்தி என்னும் சமண துறவி உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்ததை சொல்லும் கல்வெட்டு . வெவ்வேறு காலங்களை சேர்ந்த 3 கல்வெட்டுகளை சீனு அண்ணா விளக்கிக்கொண்டு வந்தார். முன்பே இங்கு வந்திருந்தாலும் கல்வெட்டுகளை இப்போதுதான் பார்க்கிறேன்.
கடைசியாக அருகிலிருந்த சிங்கவரம் ரெங்கநாதப்பெருமாள் கோவிலுக்கு சென்றோம். குன்று மேலிருக்கும் கோவில், வடகலை பாணி வழிபாட்டுமுறை என்று எண்ணுகிறேன். அடிப்படையில் இதுவும் ஒரு குடைவரையே, ஒரு பெரிய பாறையில் படுத்திருக்கும் பெரிய பெருமாளை குடைந்திருக்கிறார்கள், அதே பாறை வளைவில் ஒயிலாக நிற்கும் துர்க்கையையும், ரங்கநாதரையும் பிரித்து இரண்டு சன்னதிகளாக்கி இருக்கிறார்கள். பல்லவர் கால சிலைகள், துர்க்கை ஆரம்ப காலத்தவள், பிற்கால அட்டேன்ஷன் நிலை இல்லாமல் ஒருகாலை மட்டும் எருமைத்தலையில் வைத்து, இடுப்பை ஒசித்து நிற்கிறாள், அருகில் தற்பலியிடுவோனும் பூசகனும் அமர்ந்திருக்கிறார்கள். இன்று துர்க்கையை நீங்கள் ஒரு சிறு சாளரம் வழியாகத்தான் தரிசிக்க முடியும் , அவருக்கு முன் தாயார் சன்னதி ஒன்று உருவாக்கப்பட்டு பெரிய லட்சுமி சிலை வைக்கப்பட்டிருக்கிறது, இருப்பினும் முன்பிருந்த நிலைக்கு இப்போது எவ்வளவோ மேல். இரண்டு சிலைகளையும் அலங்கரித்து, வெளிச்சத்தில் வைத்திருக்கிறார்கள். இரண்டிற்குமே அர்ச்சகர் தீபம் காட்டி விளக்குகிறார்.
இறுதியாக ரங்கநாதர், பேருருவம். கிடந்த கோலத்தில் இருக்கிறார். மகாபலிபுரத்தில், திருமயத்திலும் பார்க்கும் அதே காட்சி. இந்த ஒரு புராண காட்சி மீண்டும் மீண்டும் சிற்பிகளை செதுக்கத்தூண்டுகிற காட்சிபோலும். பாற்கடலில் ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டு யோகநித்திரையிலிருக்கிறார். மது கைடபர் எனும் இரு அசுரர் அவரை தாக்க வருகிறார்கள், பெருமாள் நித்திரையிலிருப்பதால் அவரது ஆயுத புருஷர்களான ஐவரும் மது கைடபரை தாக்கி விரட்டுகிறார்கள். அர்ச்சகர் இதை சற்று மாற்றி எல்லாத் தடைகளையும் நீக்கும் தலம் என்றார். பரவாயில்லை, வழிபாட்டில் ஒரு கோவில் இருந்தாலே நீடித்து வாழும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதே சமயம் பழமை குன்றாமல் இவற்றை பராமரிப்பதில் தான் நமக்கு பெரிய சவால் உள்ளது. மனம் சலித்து இச்செல்வங்களை கைவிட்டுவிடுவோமானால் இவை முற்றும் அழிய வழிவகுத்தவர்களுமாவோம்.
இங்கு வழிபட வருபவர்களுக்கு இது பல்லவர்கால குடைவரை சிற்பம் அல்ல, ராஜா தேசிங்கு தன் எல்லா போருக்கும் வழிபட்டுச்சென்ற இடம். ஒவ்வொரு தலைமுறையிலும் குடும்பத்தவர்களுக்கு கல்யாணம் , காதுகுத்து நிகழும் இடம். இது போதும், இந்த பற்றுதல் போதும். ஆலயங்களை மக்களும் மக்களை கடவுளும் காப்பாற்றிக் கொள்கிறார்கள். எந்த இடைத்தரகர்களும் இல்லை. இப்படித்தான் இங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. இந்த அடுக்குமுறை குலையும்போது, எல்லாமே மாறிவிடுகிறது. ஒரு நிலப்பரப்பு, ஒரு கோவில் , அங்கு வாழும் மக்களின் நம்பிக்கைகள், மரபு, அங்குள்ள பறவைகளும் பிற உயிரினங்களும் கூட இந்த சிக்கலான சமநிலையை பேணுகின்றன, ஒருபோதும் குரங்குகளற்ற செஞ்சியை நான் பார்க்க விரும்ப மாட்டேன், இங்கு மட்டுமே நான் கண்ட சிவப்புத்தலை ஓணானையும் மறக்க மாட்டேன், வரலாறு அந்த பெருமாளைப் போலவே நம் வாழ்வை நிறைத்துப் படுத்திருக்கிறது. அறிதுயிலும் அதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து விடுவதில்லை.

Comments

  1. அருமை. சிறப்பான விவரிப்பு. படிக்கையில் கிடைக்கும் அனுபவமே இப்படி இனிப்பாக இருக்கும் போது நேரில் சென்று நீங்கள் அனுபவித்தது எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

    ReplyDelete
  2. மிகச் சிறப்பு.பயண அனுபவங்களை நாங்களும் சுவைத்திட செய்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
    செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்
    -- என வேண்டுகிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சிறுபாணன் செலவு

நாஞ்சில் நாடனின் பேசுகையில் சிறுபாணாற்றுப்படை பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார் . ஓங்கு நிலை ஒட்டகம் பற்றியும் பீமனது சமையல் நூல் பற்றிய குறிப்பையும் சொன்னார் . அவர் சொல்லச்சொல்ல   அப்படி என்னதான் உள்ளது என்று உட்சென்று பார்த்தேன் . தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கான ஒரு பாடமாக சிறுபாணாற்றுப்படை இருந்தது . எளிய துவக்கத்திற்கு அது உதவியது . பின்னர் ஆழ்ந்து படிக்கையில் தமிழ்ச்சுரங்கம் தளத்தில் நல்ல உரையுடன் படிக்கக்கிடைத்தது .  இறுதியாக கண்டடைந்த தமிழ்த்துளி தளத்தில் செங்கை பொதுவன் என்ற அறிஞர் கொடுத்துள்ள விளக்கம் மிகச்சிறப்பாகவும் பொருத்தமாகவும் உள்ளது. ஆற்றுப்படுத்தும் பாணன் துவக்கத்தில் மூவேந்தர்களை விட ஏழு வள்ளல்களை விட சிறந்த வள்ளலான நல்லியக்கோடனை புகழ்கிறான் . அவனை சந்திக்கும்முன் தன் நிலையை, சந்தித்தபின் தனது மாற்றத்தை சொல்கிறான் .   அவனது ஊரான தென்மாவிலங்கை செல்லும் வழி யான எயிற்பட்டினம் , வேலூர் , ஆமூர் ஆகிய ஊ ர்களின் கண் செல்கையில் நிலவளம் எப்படி இரு