அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்
அந்த மனிதரைப் பற்றி பதிவிட இரண்டு நாட்களாகி விட்டது. ஆற்றாமையும் நிலைஇல்லா சிந்தனைகளுமே மனதை அழுத்தி விடுகின்றன.
ஏவுகணை மனிதர் என்று அவரை ஊடகங்கள் விளிக்கின்றன, அவரோ எளிமையின் மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
அவர் பிறருக்கு அறிவுறுத்தியதும் அவரது வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. ஒன்றே .
என் தலைமுறைக்கு அவர் ஒரு ஊக்கமிகுந்த வழிகாட்டி , முன்மாதிரி !
அவர்போல் இன்னொரு அரசியல் சார்பற்ற தலைவர், இந்தியர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது நடக்கப்போவதே இல்லை.
அவரது எந்த இயல்பும் போற்றுதலுக்கு உரியதாகவே இருந்தது ,
எதைச்சொல்ல !
அவர் ஐ ஐ டி மாணவனுக்கும் , ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கும் வகுப்பெடுத்தவர், அவர்தம் கேள்விகளுக்காக எப்போதும் செவி கொடுத்தவர்.
முதுமைக்காலத்திலும் தன ஆசிரியரின் முன் இருக்கையில் பொருந்தி அமராதவர்.
ஆக்கப்பூர்வமான அறிவியலின் முகவரி அவர். ஏவுகணையையும் வடிவமைத்துள்ளார் , மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்காலையும் வடிவமைத்துள்ளார்.
செல்லுமிடமெங்கும் தன் மொழியின் தகைமையை , அறத்தை , ஆக்கங்களை குறள் வழி மொழிந்தவர்.
மதச்சார்பின்மை, மனிதநேயம், நேர்மை, எளிமை, அறிவியல் , லட்சியங்களுக்கான கனவுகள் என அவர் தூவிச்சென்ற விதைகள் இந்தியாவெங்கும் முளைத்திருக்கின்றன.
கல்வியாளர்களும், தொழின்முறை ஆசிரியர்களும் கூட மாற்றத்தின் மீது நம்பிக்கை இழந்த வேளையிலும், கலாமுக்கு மாணவர்களிடத்தும் , இளைஞ ர்களிடத்தும், இந்திய இறையாண்மையிலும், கற்பித்தலிலும் ஒருபோதும் நம்பிக்கை குறைந்ததே இல்லை.
அவர் வலிமையான இந்தியா , நேர்மையான இந்தியா, தூய்மையான இந்தியா
யாவும் வருங்கால இளைஞர்களின் கைகளில் உள்ளது என உணர்ந்து கொண்டவர்.அதை அவர்களுக்கு உணர்த்தி விடவே இறுதி மூச்சு வரை உழைத்தவர்.
அவர் 2020-ல் மீண்டும் இந்தியாவை ஆய்வு செய்து , அதன் எட்டி விட்ட இலக்குகளையும் எட்ட வேண்டிய தொலைவுகளுக்கான திட்டங்களையும் வகுத்தளிப்பார் என பேராவல் கொண்டிருந்தேன். இயற்கை முந்திக்கொண்டது !
அனைத்துக்கும் நன்றி அய்யா ! அமைதியின் நிழலில் துயில்வீராக !
விழித்திருந்த அனைவரிடமும் நீங்கள் கனவுகளை விதைத்திருந்தீர்கள்,
உங்கள் கனவுகளை மெய்ப்படச்செய்வதே இனி எங்கள் பணி!
Comments
Post a Comment