Skip to main content

திருவிழா .......



நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது.

எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன .
பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .  

வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை.

இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது.
மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத்தார் மேடையின் ஹீரோ, நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கிளர்ச்சியுறுவதை விசில் ஒலிகளுனூடே  உணர முடிந்தது . ஆயிரமாண்டுகளாக ஊரில் குடியிருக்கும்  மாரியும் ,ஒப்பனையில் ஒளிந்து கொள்ள முடியாத அந்த இரவு ஆட்டக்காரியும் ஒரே மஞ்சள் ஆடைதான் உடுத்தியிருந்தார்கள்.

பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலம் வர, இளசுகள் அவர்களின் இருபுறமும் நகர்ந்து கொண்டிருந்தார்கள், தோழிகளிடம் கிண்டல்களோடும்  , தன் விருப்பமானவனிடம்  கண்களால் பேசிக்கொண்டும் நகர்ந்தது ஊர்வலம். விளக்குகளின் ஒளியை விஞ்சும் கண்கள், எந்தக்காலத்திலும் மனதில் நிற்கும் காட்சி.

 புதிதாக தாலிச்சரடு மின்னும் ஒருத்தியின் கண்கள் யாரையோ தேட, ஒரு இளந்தாரி, வெள்ளைச் சட்டையோடும் குனிந்த  தலையோடும் அவளைக் கடந்தான். அந்தச்சட்டையின் பாக்கெட்டுக்குள் அழகான காதல் ஒன்று  உயிர் பிழைத்து எட்டிப்பார்த்தது.

ஊர்வலத்தின் முன்னே அழகான ஐந்து வெள்ளைக்குதிரைகள் வந்தன . அவை நடனமாடும் என்றார்கள், குதிரை எப்படி ஆடும் என்றேன், அழகாக அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், முதுகில் வண்ணக்குஞ்சங்கள்.  தலையில் கொண்டையாக பலவண்ணங்களில் புசு புசுவென பெருநகரத்தின் கார் துடைப்பான்கள் , இதை விட ஒரு நகரவாசியை யாரும் கிண்டல் செய்ய முடியாது.

குதிரைப்பாகன்கள் (?!) குதிரையை உண்மையில் ஆடச்செய்தனர், தாளகதியில் கால்களை த்தூக்கி ஆடின தன கால்களின் வலிமையை மறந்து விட்ட பரிகள் .  உற்றுப்பார்த்தபின் தான்  தெரிந்தது அவர்கள் குதிரையின் அடிவயிற்றில் குத்துவதும் அவை துள்ளுவதும் , உச்சமாக குதிரை இரண்டு கால்களை மேலே தூக்கி அப்படியே பேலன்ஸ் செய்தது. இதற்கும் விசில்.

இது எல்லாம் தப்பில்லையா, அது பாவம் யாராவது விலங்கு ஆர்வலர்கள் பார்த்தா கேஸ் போட்டுருவாங்க என்றேன் என்னையறியாமல் , சுற்றி இருந்தவர்கள் என்னை முறைத்தது போல் இருந்தது.

ஊரில் இறங்கியதில் இருந்து அன்பு, செல்போன் சிக்னல் இல்லாமல் கஷ்டப்பட்டான். அடுத்ததடவை வரும்போது டவர் வச்சுருவாங்க சிக்னல் கிடைக்கும் என்றான், வெப்பலில் மிச்சமிருக்கும்  சிட்டுக்களும் அப்போது  இருக்காது என்று நினைத்துக்கொண்டேன்.




Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சிறுபாணன் செலவு

நாஞ்சில் நாடனின் பேசுகையில் சிறுபாணாற்றுப்படை பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார் . ஓங்கு நிலை ஒட்டகம் பற்றியும் பீமனது சமையல் நூல் பற்றிய குறிப்பையும் சொன்னார் . அவர் சொல்லச்சொல்ல   அப்படி என்னதான் உள்ளது என்று உட்சென்று பார்த்தேன் . தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கான ஒரு பாடமாக சிறுபாணாற்றுப்படை இருந்தது . எளிய துவக்கத்திற்கு அது உதவியது . பின்னர் ஆழ்ந்து படிக்கையில் தமிழ்ச்சுரங்கம் தளத்தில் நல்ல உரையுடன் படிக்கக்கிடைத்தது .  இறுதியாக கண்டடைந்த தமிழ்த்துளி தளத்தில் செங்கை பொதுவன் என்ற அறிஞர் கொடுத்துள்ள விளக்கம் மிகச்சிறப்பாகவும் பொருத்தமாகவும் உள்ளது. ஆற்றுப்படுத்தும் பாணன் துவக்கத்தில் மூவேந்தர்களை விட ஏழு வள்ளல்களை விட சிறந்த வள்ளலான நல்லியக்கோடனை புகழ்கிறான் . அவனை சந்திக்கும்முன் தன் நிலையை, சந்தித்தபின் தனது மாற்றத்தை சொல்கிறான் .   அவனது ஊரான தென்மாவிலங்கை செல்லும் வழி யான எயிற்பட்டினம் , வேலூர் , ஆமூர் ஆகிய ஊ ர்களின் கண் செல்கையில் நிலவளம் எப்படி இரு