ராஜவனம் - ராம் தங்கம்
திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்தின் அடுத்த படைப்பு ராஜவனம்
என்னும் எழுபது பக்க அளவிலான குறுநாவல். நாவலின் சிறப்பு அதன் சொற்கச்சிதம், அதுதான் இந்த சிறிய நாவலில், ஒரு நிலத்தின் இயல்பு, சூழியல், அரசியல் அனைத்தையும் செறிவாகக் கொண்டுவர உதவியிருக்கிறது. இந்த வடிவத்தை தெரிவு செய்ததற்காக ஆசிரியரை தனியே பாராட்டவேண்டும்.
விவரிப்பினூடாக ஒரு வனத்தில் உங்களை புகுத்திவிடுவதுதான் நாவலின் அழகு, சங்கஇலக்கியத்தில் சிலபாடல்களில் இந்த மாயம் நிகழும் , நீங்கள் வார்த்தைகளூடே ஒரு பாலையிலோ, சுனைக்கரையிலோ நின்று கொண்டிருப்பீர்கள்...உள்ளே உறங்கும் ஏதோ ஒன்று வனத்தில் நம்மை அதிசுதந்திரர்களாக்கி விடுகிறது. எது நம்மை அங்கு பிணைத்திருக்கிறது என்பது அது அறியும்போலும். நாவலில் காடு ஒரு தகப்பனின் நினைவுகளூடே விரிகிறது, ஒரு மகனின் பயணத்தில் எதிர்பாராது வரும் வன்விலங்கு அவனுக்கு அவன் மேலும் அறிந்துகொள்ளத்தக்க ஒரு தகப்பனைக் காட்டிச்செல்லும்.
வனத்தின் புல்லையும், மூங்கிலையும், வண்ணத்துப்பூச்சியையும், பறவையையும் பெயரோடு சுட்டும் ராம் தங்கம், காணிகளின் அடுப்பு நீரில் கொதிக்கும் தழைகளையும் சொல்கிறார். தகவல் செறிவால் குமரி வனத்தின் காடுபற்றிய ஒரு அழகிய ஆவணமாகவும் இது அமைந்திருக்கிறது. புனைவும் தரவுகளும் பிணைந்த இந்த தன்மை படைப்பில் இயல்பாகவே பொருந்தியிருக்கிறது.
காட்டின் மீது காதலுள்ள யாரும் வாசிக்கவேண்டிய நூல், அப்படி இல்லையெனில் வாசித்தபின் அந்த வனத்தை காதலிக்கத்துவங்குவீர்கள். குமரி மாவட்ட நந்தியாற்றின் பிறப்பிடத்தை நாமும் பார்த்து வரலாம், வாருங்கள்.
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
11.03.2021
மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...
Comments
Post a Comment