Skip to main content

நான் ஏன் எழுதுகிறேன்?


நான் ஏன் எழுதுகிறேன்?


சின்ன வயதில் இருந்தே எனக்கு பல நிறைவேறாத லட்சியங்கள் உண்டு .
அஞ்சாங்ளாஸ் காலத்திலிருந்தே வீட்டில் ஒப்புமை காட்டியே ஓயாமல் திட்டிக்கொண்டிருப்பார்கள். நாமளும் ஏதாவது பண்ணுவோம் , என்ற நப்பாசையில் விஷப்பரீட்சைகளில் இறங்கி கை நிறைய மொக்கை வாங்கியதுண்டு . 

வீட்டில் உள்ளவர்கள் மனம் திருந்தி பாஸ் மார்க் மட்டுமாவது எடு ராசா என்று கெஞ்ச ஆரம்பித்த  போதும் , நான் விடுவதாக இல்லை . 
நண்பர்கள் எல்லாம் அதற்கேற்ப , ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அடைமொழியோடு திரிந்து கொண்டிருந்தான் , கராத்தே சதீஷ் நிறைய்ய கலர் பெல்ட்டுகளை வாங்கி வைத்திருந்தான் .ஞாயிற்றுக்கிழமைகளில் ஆள் காணாமல் போய்விடுவான் . “எங்க மாஸ்டர் நாங்க எக்ஸர்சைஸ் பண்ணும்பொது எங்க வயித்தில ஏறி நடந்து போவார் தெரியுமா “ என்று அவன் (உதார் விடுவதற்காக சொன்னானோ , உண்மையாக சொன்னானோ ) சொன்ன போதே வயிறு கலங்கியது .
முனிபாபு படிப்பாளி , பார்த்திபன் என்.சி.சி  என எல்லோருக்கும் தனி அடையாளங்கள் இருந்தது . சின்ன வயதில் இருந்தே விளையாட்டு மைதானங்கள் என்றால் எனக்கு ஒவ்வாமை, எப்பொழுதும் ஓடுவதில் கடைசியாகத்தான் வருவேன் என்பதை வாட்ச்மேன் கூட தெரிந்து வைத்திருந்தார். 

பாடலாம் என்ற நப்பாசையை அருள் ஜான்சன் ஆசிட் ஊற்றி அழித்தான் , “வீணையடி நீ எனக்கு” மட்டுமே பாடி பத்தாவது வரை பரிசு வாங்கினான் . அதில் வரும் கண்ணம்மா என்ற ஹை பிட்ச்சை பாடியே தீருவேன் என்ற என் விடா முயற்சியின் பலனாக , குடியிருந்த வாடகை வீட்டை மாற்ற வேண்டியிருந்தது .  

பெரும்பாலும் என் முயற்சிகள் மற்றவர்களை பார்த்து சூடு போட்டுக் கொள்வதாகவே அமைந்திருந்தன . நான் ஒவ்வொரு விஷயத்தையும் முழுதாகக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக , அதன் பலனை ,அதன் மூலம் கிடைக்கும் பெருமையை மட்டுமே கற்பனை செய்து கொண்டிருந்தேன் . 

விளைவு நான் பெரும்பாலும் விஷயங்களை போலியாக செய்து கொண்டிருந்தேன் , எனக்கான தனித்தன்மையை தேடாது நான் மிகையாக பாவனை செய்கிறேன் என்பதே பத்தாவதை தாண்டித்தான் எனக்கு உறைத்தது .அந்த உண்மை மிகவும் வலித்தது , அனால் எனக்கே தெரியாமல் உருப்படியான ஒரு காரியத்தை நான் செய்ய ஆரம்பித்திருந்தேன் , அது வாசிப்பு . 
எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை கிட்டத்தட்ட ஒரு கர்ப்பத்தை போலே பல வருடங்களாக சுமந்து கொண்டிருக்கிறேன் , ஒவ்வொரு முறையும் எதோ ஒரு குறை என் கண்ணில் படும் , இதை மட்டுமாவது உண்மையாக , பிறரின் சாயல்களின்றி துவங்கும் எண்ணம் மட்டுமே ஊசலாடிக்கொண்டிருந்தது  .

என் வாழ்நாளின் சாதனையாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என கடந்த  பல வருடங்களாக முயற்சித்து , பல சோதனைகளை தாண்டி என் பதிவுகளை இந்த சுபயோக சுபதினத்தில் துவங்குகிறேன் . 

      ( மார்ச் 2012 -ல் எழுதியது )


Comments

  1. வரிகள் ஒவ்வொன்றும் வலிகள்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

யானைக் காதல்

களிறு, கைமா, வேழம் , எனப் பலசொற்கள் உண்டு தமிழில் யானையைக் குறிக்க , அவ்வகையில் கடலையும் யானையையும் மட்டும் தமிழ்மொழி அதிகம் நேசித்த காரணம் பரம ரகசியமாகவே இருக்கிறது . நானும் ஒரு யானையைப் பார்க்க மதுரை வரை சென்றிருந்தேன் . ஆலவாயின் வடக்கே , காலத்தை தன் காலடியில் இட்டு அதன்மேல் அசையாது படுத்திருக்கிறது ஒரு கல்யானை , நால்வாய் மேலே நீள்துதிக்கை கிடத்தி தூங்காநகரைக் கண்கொட்டாமல் பார்க்கும் அதற்கு , ஈராயிரம் ஆண்டுகளாகவும் யானைமலை என்றே பெயர் .   பசுமைநடை அமைப்பின் நூற்றியோராவது நடை அங்குதான் நிச்சயிக்கப்பட்டிருந்தது . நிகழ்வை அறிந்து அதில் பங்கேற்பது உறுதியானதும் ,   முதல்முறை நிஜ யானையின் மீது ஏற்றிவிடப்பட்டபோது குத்திய அதன் கனத்த முடிகளையும் , அதற்காக அழுததையும் நினைத்துக்கொண்டேன் . யானைமலையில் வரலாற்றுச் சான்றாக   மூன்று இடங்கள் உள்ளன , காலத்தால் முந்திய, மலையின் மேல் பகுதியில்   உள்ள தமிழிக்கல்வெட்டு உடன் சமணப்படுக்கைகள் . அடுத்து மலையின் பக்கவாட்டில், தீர்த்தங்கரர்கள் உருவங்கள் செதுக்கப்...