Skip to main content

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன்.

நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரை தண் தாது ஊதி மீமிசை
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போல
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சி
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே



இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது.



நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனியவன். எனது தோள்களை பிரியமாட்டான்.

தாமரையின் குளிர்ந்த தாது - மகரந்தத்தை சேர்த்து மிக உயரத்தில் உள்ள சந்தனமரத்தில் சேர்த்துவைக்கப்பட்ட இனிய தேன் போல உயர்ந்த சுவை உடையது உயர்ந்தோர் காதல்.

 நீர் இன்றி இவ்வுலகு அமையாதது போல அவனன்றி அமையாத என்னில் இரக்கம் கொள்பவர், மணமிக்க எனது நெற்றி பசலை கொள்வதை அஞ்சியும் சிறுமை செய்வாரா , இல்லை அவர் அத்தகு செயல்களை செய்தறியாதவர். ஆகவே என்னைப்பிரிய மாட்டார்.


குறிப்பு

தலைவனது குணங்கள் நேரடியாகவே சொல்லப்படுகிறது, பின் உயர்ந்தோர் நட்பு / காதலுக்கு உவமை சொல்லப்படுகிறது, தலைவி தாமரை மலராகவும் தலைவனை உயர்ந்த மலையில் விளங்கும் சந்தன மரமாகவும் சொல்கிறது உவமை. தான் அவனின்றி இருக்க மாட்டேன் என்பதை, நீரின்றி அமையாது உலகு என்னும் உவமையால் சொல்கிறாள் தலைவி. இந்த சொலவடை தமிழ் நிலத்தில் திருக்குறளுக்கு முன்பே இருந்தது என்பதற்கிது சான்று.

நறுநுதல், தீந்தேன், தண்தாது, மீமிசை சாந்து  எனும் சொற்கள் அழகியவை, புரையோர் கேண்மை என்பது ஆழம் மிகுந்த சொற்றோடர். 

Comments

Popular posts from this blog

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

யானைக் காதல்

களிறு, கைமா, வேழம் , எனப் பலசொற்கள் உண்டு தமிழில் யானையைக் குறிக்க , அவ்வகையில் கடலையும் யானையையும் மட்டும் தமிழ்மொழி அதிகம் நேசித்த காரணம் பரம ரகசியமாகவே இருக்கிறது . நானும் ஒரு யானையைப் பார்க்க மதுரை வரை சென்றிருந்தேன் . ஆலவாயின் வடக்கே , காலத்தை தன் காலடியில் இட்டு அதன்மேல் அசையாது படுத்திருக்கிறது ஒரு கல்யானை , நால்வாய் மேலே நீள்துதிக்கை கிடத்தி தூங்காநகரைக் கண்கொட்டாமல் பார்க்கும் அதற்கு , ஈராயிரம் ஆண்டுகளாகவும் யானைமலை என்றே பெயர் .   பசுமைநடை அமைப்பின் நூற்றியோராவது நடை அங்குதான் நிச்சயிக்கப்பட்டிருந்தது . நிகழ்வை அறிந்து அதில் பங்கேற்பது உறுதியானதும் ,   முதல்முறை நிஜ யானையின் மீது ஏற்றிவிடப்பட்டபோது குத்திய அதன் கனத்த முடிகளையும் , அதற்காக அழுததையும் நினைத்துக்கொண்டேன் . யானைமலையில் வரலாற்றுச் சான்றாக   மூன்று இடங்கள் உள்ளன , காலத்தால் முந்திய, மலையின் மேல் பகுதியில்   உள்ள தமிழிக்கல்வெட்டு உடன் சமணப்படுக்கைகள் . அடுத்து மலையின் பக்கவாட்டில், தீர்த்தங்கரர்கள் உருவங்கள் செதுக்கப்...