அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, 5
மால் நோக்கு, இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே 10
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்
இப்பாடல் பாலைத்திணையில் வருகிறது, காதலர்கள் காட்டு வழி உடன்போக்கு செல்கின்றனர். மங்கிய மாலைப்பொழுதில், ஈச்சை மரத்தின் ஓலைகள் ஒலிக்கும் காடு. வழியில் செல்லும் விலங்குகளை தலை அறைந்து கொன்ற சிவந்த தலையும் குருதி வடிந்த வாயும் உள்ள புலிக்குருளைகள் மாலையிலும் வேட்டையாடக் காத்திருக்கும் முள் நிறைந்த இண்டைக்கொடி படர்ந்த காட்டு வழியில், கூறிய பற்களுடைய ஐயள் மடந்தை இரவில் முன்செல்ல பின்செல்லும் இவன் காற்றோடு பெருமழை பெய்யும் போது மலை ஒளிரத்தோன்றும் இடியை விடக்கொடியவன்.
நேரடியாக கடும் வழியில் பெண்ணை முன்னிறுத்தி பின்செல்லும் கொடியன் இவன் என வசை பாடுவதாக தோன்றினாலும், புலிகள் காத்திருக்கும் வழியில் தலைவியை மறைத்து வைக்காது முன் செல்ல செய்து, துணிந்து பின்வரும் காக்கும் திறனுடைய வீரன் எனக்கொள்ளலாம். இங்கு புலிகள் காதலியின் உறவினர் என்பது உவமம்.
Comments
Post a Comment