Skip to main content

ஆற்றுப்படை -1






நாங்கள் கிளம்பியது ஒரு மழை ஞாயிறு, புதுச்சேரியில் உள்ள மணிமாறன் வழியில் எங்களை கூப்பிட்டுக்கொள்வதாகத் திட்டம். மணிமாறன் அந்த வானிலையை எதிர்பார்க்க வில்லை, எனவே திட்டத்தில் ஒரு மணிக்கூர் தாமதமாகியது. நான் வில்லியனூரிலும் திருமா மதகடிப்பட்டிலும் இணைந்து கொள்ள, முதலில் திருவாமாத்தூரை நோக்கி பயணித்தோம்.

புதிய வருடக் கொண்டாட்டமாக இந்த  சிறு பயணம் , நான் நண்பர் மணிமாறன், சகோதரர் திருமாவளவன் மூவரைத்தாண்டி நான்காவதாக ஒருவரை இணைத்துக்கொள்ள முயன்றோம், ஆனால் இப்படியாகத்தான் அமைந்தது. மணிமாறனின் காரில் ஒரு பகலில் சென்று மீளக்கூடியவையாக நான்கு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டோம்.  எனது முந்தைய பயணங்கள் யாவும் நான் தனியாக செல்பவை, நண்பர்களுடன் பயணிப்பது அரிது, அந்த வகையில் இது எனக்கு ஓர் இனிய துவக்கம்.

அகழ்வாய்வுத்துறை  தயவில் ஹைவே சாலையிலேயே முன்னும் பின்னும் அலைந்து திருவாமாத்தூர் பிரிவுக்குள் சென்றோம். தேநீருக்காக வண்டியை நிறுத்திய இடத்திற்கு அருகிலேயே ஒரு ரோட்டின் இறுதியில் அய்யனார் கோவில் ஒன்று தெரிந்தது. யாரோ யாரையோ அழைத்தார்கள், தனியாக அங்கே சென்றேன்.

மழையில் நனைந்த வெளி, ஐயனார் பழையதும் புதியதுமான வண்ணங்களில்  யானை மேல் பீடத்தில் அருவமாக அமர்ந்திருந்தார்.  தெருக்கூத்துக் கலைஞர்கள் சூடும் முடியுடன் உள்ள அய்யனார். அய்யனார் என்றாலே அமர்ந்திருப்பவர் தானே. அருகே நிறைய சுடுமண் குதிரைகள், யானைகள் கூட. இரு ஊர்களுக்கிடையே இருந்த நீர்த் தகராறுக்காக சாட்சி சொல்ல வந்தவர் அவர், இந்த வனாந்தரம் மிகவும் பிடித்துப்போனதால் அங்கேயே தங்கிவிட்டாராம். முன்பு ஏரிக்கரை முழுதும் இந்த குதிரை யானை சுடுமண் சிலைகள் இருக்குமாம். அந்தக்கதையை சொன்ன நீண்ட முடியை கொண்டையாகச்சுருட்டி  மீசையுடனும் சிவந்த அரையாடை கருத்த மேனி பூசகர் அய்யனாரின் காலப்பிரதி போல் தானிருந்தார். சுற்றுச்சுவரும் தகரக்கூரையும் பூரணை புஷ்கலையம் உடனிருந்த இறைவன் தற்போது 2001 ல் ஏற்படுத்தப்பட்டார்.   சாட்சி சொன்ன அய்யனாருக்கு அருகே இரண்டாள் உயரத்தில் செங்குதிரை ஒன்று மூக்கு விடைத்து நின்றது. அந்த கோவில் தோன்றியதற்கான கதையை ஒரு கணத்தில் திகிலுடன் மனம் உருவகித்துக்கொண்டது.

 

பம்பை ஆற்றின் வழி திருவாமாத்தூரை அடையலாம், இந்த ஆறு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வராக நதியின் துணையாறாக குறிக்கப்படுகிறது, ஆனால் இன்றைய நிலவியலின்படி பம்பை கண்டாச்சிபுரம் ஏரியில் தோன்றி  கெண்டியங்குப்பம் கிராமத்திற்கு முன்பாக செஞ்சியாற்றில் கலந்து விடுகிறது. இடையே வராக நதியை காணமுடியவில்லை, அது இப்பெயரில் தற்போது உள்ளதென அறியமுடியவில்லை.    திருவாமாத்தூரின் அடையாளமான பம்பை ஆறு. இன்று நீர் நிறைந்து ஓடுகிறது , அருகிலுள்ள ஏரிகள் ததும்பி நிற்கின்றன. பக்தி இலக்கிய காலத்தில் பொதுமைப்படுத்தப்படும் கோவில்கள் யாவும் அவற்றின் வளத்தையே  முதன்மையாக கொண்டுள்ளது. அழகிய வயல்வெளி, நீரோடை, ஆறு, மலை, சோலை அங்குள்ள இயற்கை எழில் இவை கடவுளின் வாழிடமாக சொல்லப்படும், நகரமெனில் அங்குள்ள மாடங்கள் வீதிகள் அழகிய பெண்கள், அழகிய கண்கள், கணிகையரின் நடனம், இசை. திருவாமாத்தூரின் வரலாறு பம்பை ஆறு தந்த வளத்தால் உண்டானது. அதனருகில் உள்ள ஏரிகளும் கழனிகளும் அவ்வளத்தால் அமைந்த நகரும் அந்த ஆற்றின் கொடையே. நீங்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே பெரிய நகரங்கள் யாவும் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான மக்களின் வாழ்விடங்களாக உள்ளதன் அடையாளங்களை காணலாம். மதுரையும், வஞ்சியும், உறையூரும் அப்படித்தான். நீண்ட கால பண்பாட்டுத்தொடர்ச்சி அறுபடாது உள்ள சான்றுகள் இங்குள்ள பெருநகரங்கள் படிப்படியாக உருவான முறையை சொல்கின்றன. திருவாமாத்தூர் விழுப்புரத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்.

 

திருஞான சம்பந்தர் தேவாரம்

 

கரவின் மாமணி பொன்கொ ழித்துஇழி

சந்து காரகில் தந்து பம்பைநீர்

அருவி வந்துஅலைக்கும் ஆமாத்தூர்  என்கிறது.

 

முந்தைய வருடங்களில் நான் திருவாமாத்தூர் சென்றபோது பம்பை என்பது அங்கங்கு மண் அகழப்பட்ட வெளி, கிராமங்களால் சூழப்பட்டுள்ளதாலேயே  முழுதும் அழிந்துபடாத ஆறு, கரைகளில் சீமைக்கருவேல மரங்கள் இருக்கும். எனது நண்பர் சரவணக்குமார் திருவாமாத்தூரை சேர்ந்தவர், தொல்லியல் ஆர்வலர் . அங்கு கோவிலுக்கு மிக அருகே உள்ள பம்பையின் தடத்தில் உறைகிணறு ஒன்றை கண்டறிந்தார். நாங்கள் பார்த்தபோது அது சமதளத்தில் இருந்து ஆறடி ஆழத்திற்குள் தான் இருந்தது. உறைகிணறுகள் என்பவை சுடுமண் வளையங்களை ஒன்றின் மேலொன்றடுக்கி  அமைக்கப்படுபவை. மணற்பாங்கான இடங்களில் நீர்பெற இக்கிணறு அமைப்பு உதவியிருக்கிறது, கடற்கரையில் இவற்றின் தேவை மிகுதியாக இருந்திருக்கலாம். அற்ற காலத்தில் நீர்நிலைகளின் உள்ளேயோ அருகேயோ உள்ள இக்கிணறுகள் மக்களுக்கு நீர்வழங்கியிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை மற்றும் அகநானூறு இவற்றைப்பேசுகிறது. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான கிணறுகளின் அருகில் பானை ஓடுகளும் தொல்வாழ்விட எச்சங்களும் கூட காணக்கிடைக்கிறது. உறைகிணறுகளை மட்டும் அடையாளப்படுத்தி அவற்றை காலவரிசைப்படுத்த இன்னும் இங்கு யாரும்  முன்வரவில்லை, ஆக காலக்கணக்கீடு என்பது தோராயமான ஒன்றாகவே இருக்கிறது. உதாரணமாக கீழடி அகழ்வாய்வில் உறைகிணறு கண்டறியப்பட்டது, சோழர்கள் அரசாண்ட கங்கை கொண்ட சோழபுரம் (ஜெயங்கொண்டம்) பகுதியிலும் இக்கிணறுகள் கிடைக்கின்றன. கீழடியின் வயது இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகள் என்று அரசு அறிவித்துள்ளது, கங்கை கொண்ட சோழபுரம் அமைக்கப்பட்டது ராஜேந்திரன் காலத்தில்தான், உத்தேசமாக பதினொன்றாம் நூற்றாண்டில் தான் அங்கு பெருமாளிகைகள் அமைக்கப்பட்டு குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன. ஏறத்தாழ ஆயிரத்து அறுநூறு ஆண்டு காலம் அறுந்துவிடாத ஒரு நீர்த்தொழில்நுட்பத்தின் சான்று இவை. அதே சமயம் இவற்றை காலக்கணக்கீடு செய்ய மேலும் மேலும் ஆய்வுகள் தேவை.

 

 கோவில்கள் உருவான வரலாறு மிகநீண்டது. ஒரு வழிபாட்டிடம் என்பது சடங்குகள் சார்ந்து உருவாகலாம், தொல்எச்சங்கள் சார்ந்து உருவாகலாம், இயற்கை அதிசயம் ஒன்றை வைத்து உருவாகலாம், பிறப்பும் இறப்பும் கூட தோற்றுவாயாகலாம். வழக்கத்திலிருந்து விலகிய எதோ ஒன்று புதிய வழக்கமாக பண்பாடாக மாறுவது. வழிபாட்டிடம் என்பது எப்போதும் சமயம் சார்ந்தது மட்டுமாக இல்லை, அவை சமூகத்தின் பண்பாட்டுத்  தடங்கள். இந்தியப்பண்பாடு இவற்றை பற்றுக்கோடாக கொண்டு  வாழ்கிறது. திருவாமாத்தூர் அவ்வகையில் இந்த மாற்றங்களை தன்னகத்தே வைத்துப்புறம் காட்டும் ஊர். கோவிலின் அமைவிடம் ஆற்றின் கரையில், கரை என்றால் கரையே தான். பெருங்கோவில் இறைவன் அழகிய நாதர், அபிராம ஈஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார், இறைவி முத்தார் முறுவலாள், முக்தாம்பிகை தனிக்கோவில் இறைவியாக ஈசனை நோக்கி மேற்கில்  நிற்கிறாள் அம்மை,  இவ்வமைப்பு பொதுவில் எங்கும் இல்லை. நீரோடும் பம்பையில் கால்நனைத்துவிட்டு இறைவர் கோவிலுக்குள் நுழைந்தோம்.

 

-          தொடரும்


Comments

Popular posts from this blog

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

ஜல்லிக்கட்டு பேரணி சென்னை

இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.  அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.  வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.  கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது,    அலங்கரிக்கப்பட்ட ஜல...