Skip to main content

ஆற்றுப்படை -2




அபிராமம் என்ற சொல்லுக்கு அழகு என்று பெயர், அபிராமவல்லி என்றால் அழகுக்கொடி. சிவபெருமானை அழகன்  என்றும் சொக்கன் என்றும் அழைக்கும் தலங்கள் சிலவே உண்டு. இக்கோவில் புராணத்தில் மூன்று கதைகள் உள்ளன. முதலில் ஊர் மற்றும் இறைவனின் பெயர்க்காரணம் சொல்லும் கதை இது.ஆதியில் ஆ ( மாடுகள்) குலத்திற்கு கொம்புகள் இல்லாமையால் அவை பிற விலங்குகளால் துன்புற்றன, அவை இத்தல இறைவனை வேண்டி கொம்புகள் பெற்றதால், இத்தலம் ஆ குலத்திற்கு தாய்வீடு எனப் பொருள்கொள்ளும் படி, ஆ மாத்தூர் - கோ மாத்ரு புரம் என்றானது. புராணப்படுத்துதலில்  காமதேனுவும், நந்தினியும் , நந்தியும் கூட இங்கு வழிபட்டதென கூறப்படுகிறது. அதற்குச் சான்றாக மூல லிங்கத்தில் பசுவின் குளம்பு பட்ட வடுவுள்ளதாகச் சொல்வர். என்னளவில், இந்த புராண ஏற்றங்களுக்கு அடித்தளத்தில் எதோ ஒரு நாட்டார் கதை ஒளிந்திருக்கக்கூடும் என்று தோன்றும், எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒருசில சான்றுகள் எஞ்சியிருக்கக்கூடும். கண்ணை மூடி இதை ஒரு நாடோடிக்கதையாக உருவகித்துக்கொள்ளுங்கள், அங்கு மதமோ, சிவனோ இல்லை. பசுக்கள் மேய்ச்சலில் இருக்கின்றன, ஒரு வன்மிருகம் அவற்றை கொன்று வருகிறது, அஞ்சிய பசுக்கள் உடனே கடவுளிடம் வேண்டின, கடவுள் அவற்றிற்கு கொம்புகளைக் கொடுத்தார். உடனே அவை திரும்ப வந்து அந்த மிருகத்தை விரட்டின, பின் அவைகளெல்லாம் அங்கேயே சந்தோஷமாக வாழ்ந்தன. எப்படியாயினும் இந்த ஊர்ப்பெயரில் இருப்பதால் இந்தக்கதையே இங்கு முதன்மை பெறுகிறது. தத்துவார்த்தமாக பசுக்களை மனித உயிர்கள் என்றுதான் சைவ சித்தாந்தமும் சொல்கிறது.

அடுத்ததாக இராமன் இலங்கைக்கு செல்வழியில் இங்கு சிவபெருமானை வழிபாடு செய்த புராணம், அதற்கு சான்றாக கோவிலில் மூன்று இடங்களில் இராமனின் சிலை உள்ளது. தற்போதுள்ள கொடிமரத்துக்கு பின்னேயுள்ள பலிபீடத்தின் அடியில் இருமருங்கிலும் ராம இலக்குவர் மற்றும்  வானர வீரர் உருவமும்  வடிக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு வெளியேயுள்ள அர்த்த மண்டப வாயில் நிலையின் பூதவரிக்கு மேலே உள்ள சிற்பம். அடுத்ததாக வெளிச்சுற்றில் உள்ள தனிச்சன்னதியில் உள்ள சிற்பம். இவற்றில் முதலிரு சிற்பங்களும் காலத்தால் மூத்தவையாக தோன்றுகின்றன, அவற்றின் அமைப்பு ராமன் தன் இளையவன் பின் நிற்க, வானரர்களிடம்  ஒன்றை குறிப்பாக காட்டுவதாக அல்லது சொல்வதாக உள்ளது. பொதுவாக பலிபீடத்தில் அர்த்த மண்டப முகப்பிலும் இவ்வாறு சிற்பங்கள் இருப்பதில்லை. வெளிச்சுற்றில் உள்ள சிற்பம் இன்னும்கூட தெளிவானது,  வில்வீரர் இருவரிடம் ஒரு பெண் வணங்கி நிற்பது போலவும் அவளுக்கு அருகில் மான் அல்லது ஆட்டு முகம் கொண்ட ஒரு பெண் வணங்கியவாறு அமர்ந்துள்ளதாகவும் உள்ளது. இங்கு உள்ள அறிவிப்பு  மான்முகம் சாபமாகப்பெற்ற பெண், இராமனை வழிபட்டு சுயஉரு மீண்டதாக தகவல் ஒன்றையும் தெரிவிக்கிறது.கிட்டத்தட்ட அகலிகை கதை போலத்தான். பலிபீடம் தவிர ஏனைய இரண்டும் பலகைக்கல் சிற்பங்கள், வெளிச்சுற்றில் பழைய சிற்பத்துக்கு முன்பாக புதிய சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. தலபுராணத்தில் இக்கதை எங்கனம் குறிக்கப்படுகிறது என்று தெரியவில்லை.  ஒருவகையில் இந்த இராமாயண, மகாபாரத கதைகளுடன் தலவரலாறுகளை இணைப்பது ஒரு சிறிய நதி பெருநதியில் கலப்பது போலத்தான், இதை நம் மரபு நீண்ட காலமாக அனுமதித்துள்ள ஆதரித்தும் வந்துள்ளது. இந்தியப்பண்பாடு ஒரு பெருங்கடல்.   இராமன் இங்கு சிவவழிபாடு செய்ததை அப்பர் பெருமான் தன் பதிகத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 


      

குராமன் னுங்குழ லாளொரு கூறனார்

அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்

இராம னும்வழி பாடுசெய் யீசனை

நிராம யன்தனை நாளும் நினைமினே.

 மூன்றாவது கதை அம்மைக்கானது, அம்மையப்பனை ஒன்றிணைத்து வணங்காது சிவனை மட்டும் தனியே வழிபட்ட பிருங்கி முனிவரை, அம்மை சபித்த கதை பல தலவரலாறுகளில் உள்ளது. இங்கு பிருங்கி முனிவர் வன்னி மரமாக மாறி இறைவியை தவமிருந்து முத்தியடைந்ததாக சொல்வர். அம்மை கோவிலின் திருச்சுற்றில் வன்னிமரமும் உள்ளது. இதை அம்மைக்கான புராண ஏற்றம் என்று கொள்ளலாம். இல்லாமல் முருகனும், தேவர், முனிவர் பலரும் வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது.

இம்மூன்று புராணக் கதைகளையும் விட இன்னும் பிரபலமான  கதை  ஒன்று உள்ளது, அது முக்தாம்பிகை சன்னதி வெளிச்சுற்றில் உள்ள வட்டப்பாறை அம்மன் பற்றிய கதை. உள்ளூர் மக்களிடம் வட்டப்பாறை அம்மன் சத்தியத்தை காக்கும் தெய்வம் என்று எப்போதும் நம்புகிறார்கள். முன்பொரு காலத்தில், சகோதரர்கள் இருவரிடையே சொத்துத்தகராறு. தம்பி அண்ணன் தன்னை ஏமாற்றியதாக ஊராரிடம் முறையிடுகிறான், அங்கும் அண்ணன் மறுக்கவே தம்பி வட்டப்பாறை அம்மன் முன் அண்ணனை சத்தியம் செய்யச்சொல்கிறான். அண்ணன் ஒரு சூழ்ச்சி செய்து தம்பியின் சொத்துக்களையெல்லாம் பொற்காசுகளாக மாற்றி அதை தன கைத்தடியை மறைத்து வைத்துக்கொண்டு, சத்தியம் செய்யும்முன்பு தடியை தம்பி கையில் கொடுத்துவிட்டு  சத்தியம் செய்கிறான். எதுவும் நடக்கவில்லை, தம்பி உன்னையல்லவா நம்பினேன் என்று அழுது புலம்புகிறான். தும்பூர் என்னுமிடத்தில் அண்ணன் செல்கையில் பாம்பு ஒன்று அவனை கடிக்கிறது, அண்ணனின் கைத்தடி நழுவி பொற்காசுகள் கொட்டுகின்றன. அண்ணன் இறந்து போகிறான், ஊரார் உண்மை அறிகிறார்கள். அந்தப்பாம்பின் தலை தும்பூரிலும் அதன் வால்நுனி  முக்தாம்பிகையின் மார்பிலும் தெரிய வட்டப்பாறை அம்மனின் சக்தியை அனைவரும் உணர்கிறார்கள். ஒரு அழகிய எளிய நாட்டார் கதை, மேற்சொன்ன புராண விளக்கங்களை விட இக்கதைதான் ஊராரிடம் வழங்கிவருகிறது. தும்பூரில் சுயம்பு நாகாத்தம்மன் கோவில் இன்று பிரசித்தி பெற்றது. முக்தாம்பிகையின் சிலையிலும் இந்த வால்நுனி தெரியும் என்கிறார்கள். இணைப்பாகவே இராமன் வாலியைக்கொன்று அரசை மீட்டளிப்பேன் என்றும் . சீதையை மீட்பதாக இராமனிடம் சுக்ரீவன் வட்டப்பாறையின் முன் சத்தியம் செய்தான் என்றும்   வாய்மொழிக்கதைகள் உண்டு.


- தொடரும்

Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போல தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சி சிறுமை உறுபவோ செய்பு அறியலரே இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது. நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனி