மனங்களில் மனிதம் மலர்ந்த 2015
மக்கள் தங்கள் மீதான நெகடிவ் பிம்பங்களை எல்லாம் உடைத்தெறிந்த கணங்கள் அவை.
மனிதம் மனிதம் மனிதம் மட்டுமே தரிசித்த கணங்கள் அவை.
தெய்வம் என்ற ஒன்றை சகமனிதனிடம் நேரில் கண்ட வருடம் இது.
எத்தனை வருடம் கடந்தாலும் இது நெஞ்சில் நிற்கும்.
அப்துல் கலாம் என்ற மாமனிதர் மறைந்தார்.
இங்கு எத்தனையோ பிறர் இறந்த போதும் , இனி இறக்கும் போதும் இப்படி ஒரு பெருமை கிடைக்குமா தெரியாது . பரந்த பாரதமெங்கும் இன மத மொழி கட்சி ஜாதி எல்லாம் எல்லாம் கடந்து மனிதர்கள் கண்ணீர் உகுத்தது நம் வாழ்நாளில் நாம் காணாதது .
ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்தது , எதோ தன் சொந்தம் ஒன்று பிரிந்ததாகவே ஒவ்வொருவரும் நினைக்கத்தோன்றியது.
அரசியல் கட்சிகள் அச்சுறுத்த வில்லை , பேனர் வைக்க யாரும் வற்புறுத்த வில்லை , பணம் வசூலிக்க வில்லை, பேருந்துகள் நிறுத்தப்படவில்லை ,
தாமாகவே முன்வந்து மக்கள் ஊருக்கு ஊர் பேனர் வைத்தனர் , இரங்கல் கூட்டம் நடத்தினர் . குழந்தைகள் இளையோர்கள் யாவரும் அஞ்சலி செலுத்தினர் . பேய்க்கரும்புக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டி தன ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் ஒரு சகோதரன்.
கனவுகளை விதைத்து விதைத்து களைத்த ஒரு மனிதன், என்ன சம்பாதித்து வைத்திருந்தான் என்று அன்று நாடே பார்த்தது ....!
சென்னை பெருமழை !
கையசைத்தால் கால் டாக்சி , ஸ்மார்ட் போனை விரல்பதித்தால் சகலமும் கிடைக்கும் என்று நாம் கட்டிவைத்த ஒரு மாய மாளிகையை பார்த்து இயற்கை லேசாக சுண்டி விட்டது.
பெய்தது பெருமழை , தண்ணீர் லாரிகளுக்கு காத்திருந்த தெருக்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்தது .
ஒரு தலைமுறையின் உழைப்பை எல்லாம் ஒரு நாள் மழை அடித்துச்சென்றது .
பல அரசியல் சமூக பிரபலங்களின் சாயங்களை வெளுக்க வைத்தது மழை.
சொந்த வீடுகளில் நீரால் சிறை வைக்கப்பட்டனர் மக்கள், வீடில்லாதவர்களின் கதி இன்னும் என்ன என்று நமக்கு தெரியாது.
ஆறுதல் சொல்ல , அழுகையை துடைக்க ஆயிரம் ஆயிரம் கைகள் நீண்டன.
யார் அவர்கள் அவர்களின் முகம் நமக்குத்தெரியாது, அதை பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. சக மனிதனின் துன்பம் கண்டு தானாக எழுந்து வந்த நண்பர்கள் டார்வினின் சித்தாந்தங்களை கொஞ்சம் அசைத்துப்பார்த்தார்கள்.
உதவுதல் இயல்பான மனித குணம் என்றே உறுதி செய்தார்கள்.
தலைவன் என்று சொல்லிக்கொண்ட பலரின் முகத்தில் விழுந்த சவுக்கடி இந்த பலன் பாராத உதவி .
இடுப்பளவு நீரில் , கழுத்தளவு நீரில் நீந்திப்போய் உதவினார்கள் , இத்தனை நாள் நம்மால் திட்டப்பட ஐ டி இளைஞர்கள் , கையாலாகாதவர்கள் என முத்திரை குத்தப்பட்ட இளைஞர்கள், சமூக வலைதளங்களில் வாழ்பவர்கள் என நாம் குறைகூறியவர்கள் எல்லாம் புன்னகையோடு உதவினார்கள்.
அரசாங்கம் வரவில்லை, எம் எல் ஏ வரவில்லை , கவுன்சிலர் வரவில்லை ,
கட்சிக்காரன் வரவில்லை வந்தது நம் சகோதரன் . இது தான் நிஜம் , இது தான் நிதர்சனம்.
மக்களுக்காக உதவி செய்த தன்னார்வலர் ஒவ்வொருவரும் மதிக்கத்தக்கவர்கள், விலை மதிப்பில்லாதவர்கள் .....!
Comments
Post a Comment