Skip to main content

குடைவரையில் ஒரு பாரதக்காரர்-2

வில்லிசைக் கலைஞர், மகாபாரத சொற்பொழிவாளர் - உத்திரமேரூர் "குடவோலை கா முருகன்" நேர்காணல், பாகம் - 2

நான் இப்போ மகாபாரதம் பற்றி சொல்லப்போறேன், நான் பத்தாண்டுகளாக பாரதம் சொல்றேன். பாரதத்துல வில்லிபாரதம் இருக்கு நல்லாப்பிள்ளை பாரதம் இருக்கு. நாங்க சொல்றது வில்லிதான். வில்லிபுத்தூரார் எதையும் சுருக்கமா சொல்லீருவார் இப்படின்னா இப்படி நேரடியா சொல்லுவார். நல்லாப்பிள்ளை அதையே விரிச்சு கற்பனையெல்லாம் சேர்ந்து நீட்டிச்சொல்லுவார், சுருக்கமா சொல்றதான வில்லியோட பாரதம் சுவையில்லாதது இல்லை. முதன் முதல்ல பாரதம் பேச ஆரம்பிச்சது எங்கங்கிறது ஒரு முக்கியமான விஷயமில்லையா, வில்லுப்பாட்டுப் போலவே, பாரதத்தையும் உத்திர மேரூரில் இருக்கும் திரௌபதை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போதுதான் மகாபாரதம் சொல்லத் துவங்கினேன். தமிழாசிரியர் ஒருத்தரை கூட வைத்துக்கொண்டு சொல்லத்துவங்கினேன். மகாபாரதத்திலேயே சந்தனு கங்கை திருமணம் தான் மிகவும் மிகப்பெரிய விஷயம். அந்தப்பகுதி சொல்லச்சொல்ல இனிக்கும் கேட்கக்கேட்க ரசிக்கும். அப்படி ஒரு பகுதி, மக்கள் யாருமே எழுந்து போகாம இருக்கிற சுவாரஸ்யமான பகுதி. இதை முதலில எடுத்து பேசினேன். அது ஒரு பிரம்மாண்டமான மேடை, அற்புதமான மேடை.

ஒவ்வொரு கோவில்களிலேயும் ஒவ்வொரு அனுபவம் எனக்குக்கிடைக்கும், அந்தக் கோவிலோட நுழைவாயில் மிகவும் பழைமையான வடிவில் இருக்கும். சிலபேரு கோவிலை புதுசா காட்டினாலும், வடிவத்தை மாத்தாம அப்படியே வச்சுருப்பாங்க. சில இடங்கள்ல பிரம்மாண்டமான கோவில்களை நிறுவி வைத்திருப்பாங்க இதுபோல வித்தியாசமான அம்சங்கள் இருக்கும். இதை விடுத்து அந்தந்த ஊர் மக்கள் தான் எங்களுக்கு மிகவும் உறுதுணை. ஒவ்வொரு இடத்திலும் வேற வேற சடங்குகள் இருக்கும். இப்போ அரவான் களப்பலியை எடுத்துக்கிட்டீங்கன்னா அரவான் களப்பலி சடங்குகள் ஒரே மாதிரியாக இருக்காது. அதேபோல துரியோதனன் படுகளத்துல துரியோதனனூடே அளவு மாறும். நாடகத்துக்கு (கூத்து) வர்ரவங்க அவங்கவங்க பாணியிலே செய்வாங்க ஆனா கதைக்கரு மாறாது, ஆனால் வடிவங்களும் உருவங்களும் மாற்றி அதன் பிரதிபலிப்பாக நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இதைப் பார்க்கும் பொது ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

குறிப்பா ஊருணிப் பொங்கல் அப்படின்னு ஒரு பொங்கல் இருக்கு. தருமர் பிறப்பு, திரௌபதை திருக்கல்யாணம் இதுபோன்ற நேரங்களில் ஊருணி பொங்கல் என்ற பொங்கல் வைப்பாங்க. பாரதக்காரர் உக்காந்திருக்கும் மேடைக்கு பின்னால் தான் பொங்கல் வைப்பாங்க, கோவிலை சுத்தி பொங்கல் வைக்கும்போது அந்தப்புகை எல்லாம் பாரதக்கதை சொல்லும் பொது முகாரி ராகம் பாடவேண்டிய இடத்துல கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போய் சொல்லிட முடியும்.

அதேபோல நாட்கள், பொதுவாக பதினெட்டு நாள் பாரதம் செய்வாங்க, சில பேரு முப்பது நாள் பாரதம் சொல்லுவாங்க. பாரதம் சொல்லும்போது ஆற்காட்டுல அரவானை பெருசா சொல்லுவாங்க, உத்திர மேரூரிலே துரியோதனனை பற்றி பெருசா சொல்லுவாங்க, இப்படியும் மாறும். கதை சொல்கிற நாளை வைத்துப்பார்த்தால் ஆற்காட்டுல மட்டும் நூறுநாள் பாரதம் சொல்லுவாங்க, அந்த பாரதக்காரர் நூறுநாள் சொல்லிவிட்டால் அவர் இரண்டு தலைமுறைக்கே உட்கார்ந்து சாப்பிடலாம். என்ன காரணமென்றால் அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் திருவிழா நடக்கும். வருடாவருடம் தொடர்ந்து திருவிழா நடத்துகிற ஊர்களும் இருக்கும், உதாரணத்துக்கு இப்போ நாங்க வந்திருக்கிற தென்புதுப்பட்டு ஊருல வருடாவருடம் நடத்துவாங்க. தென்புதுப்பட்டுக்கு நான் வருவதற்கு காரணம் நான் திண்டிவனத்திற்கு பக்கத்தில ஆலங்குப்பம்னு ஒரு ஊர்ல பாரதம் சொல்லிட்டிருந்தேன். அப்போ இந்த ஊர்க்காரங்க அங்க வந்து பாரதம் பாத்துட்டு, அதற்குப்பிறகு நாடகம் பாத்துட்டு இரவு பதினோரு மணிக்கு மேலே தாம்பூலம் கொடுத்தாங்க. அப்பிடித்தான் தென்புதுப்பட்டுக்கு வந்தேன், இங்கே பத்து நாள் பாரதம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும், இந்த ஊர்ல என்ன வித்தியாசம்னா காப்புக்கட்டும்போது இருக்கிற ஐந்து பேர்கள், ஒவ்வொரு வேளை பூஜையிலும், ஒவ்வொரு சடங்கில் கலந்துகொள்ள வேண்டும், அவங்க இல்லாம திருவிழாவில் எந்த விஷயமும் நடக்காது. இதுக்காகவே ஒரு சிலஊர்களில ஒருத்தர் மட்டும் காப்புக்கட்டுவாங்க, எளிதா சடங்குகளை முடிப்பதற்காக. மக்களும் வந்து பாரதம் கேட்பதற்கு ஆர்வமாக இருப்பாங்க, அந்த வகையிலே இது சிறந்த ஊர். ஆலங்குப்பமும் இதேபோலத்தான். காஞ்சிபுரம் பக்கத்தில வாலாஜாபாத்தில் ஒருமுறை பாரதம் சொல்லும்போது, அங்கிருக்க மக்கள் எல்லோரும் வந்து பாரதம் சொல்றவரோட கால்ல விழுந்து கும்பிடுவாங்க. எனக்கு, சின்ன வயசுல பாரதம் சொல்றதால மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். நம்ம கால்ல பெரியவங்க விழுறாங்களே இது தப்பில்லையா அப்பிடீன்னு தோணும், அந்த நேரங்கள்ல அந்த திரௌபதை அம்மனைத்தான் நினைச்சுக்கறது, இவங்களுக்கு எல்லா அருளும் நல்லா கொடுக்கணும்னு. அதுக்கப்பறம் சென்னை போறவழியிலே திருவெளிச்சைன்னு ஒரு ஊரு , கேளம்பாக்கம் பக்கத்துல. அந்த ஊரு பக்கத்துல ரொம்ப பெரிய கோவில் மலை சார்ந்த இடமாக இருக்கும் பக்கத்துல ஏரி இருக்கும் பிரம்மாண்டமான இடம். அந்தக்கோவில்ல அம்பாளே தெரிய மாட்டாங்க அந்த ஜோதிதான் தெரியும். என்னுடைய வயசுக்கு நான் பார்த்தவரை அந்த கோவிலை சுத்தி பூதகணங்கள் சிறப்பா அமைந்திருக்கு, கொடிமரம் கோவில் அமைப்பு எல்லாமே நல்லா அமைந்திருக்கு, மிகப்பெரிய அதிர்வை நான் அங்கதான் பார்த்தேன். அப்படி சில அனுபவங்கள்.

அதே போல பாரதம் சொல்லுகிற பொழுது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சொல்லுகிற விதத்தின்படி, இப்போ அர்ச்சுனன் இருக்கான், நகுலன் இருக்கான், சகாதேவன் இருக்கான் இவங்கல்லாம் எதன் முறையில வராங்க, அரக்கர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எப்படிப்பட்ட நிலையில் இருப்பார்கள், கங்கை தன குழந்தைகளை எடுத்து ஆற்றங்கரையில் வீசுகிற பொது அவளுடைய மனநிலை என்ன இதை எல்லாம் விளக்கி சொல்லும்போது அந்த கதாபாத்திரத்தின் உள்ளேயே நாங்க போய்விடுவோம். நாங்க அங்க இருப்பதாகவே உணர்ந்தால்தான், கதையை உணர்ச்சிபொங்க சொல்லமுடியும்.

எனக்கு ரொம்ப பிடிச்ச தெய்வம்னா உத்திரமேரூர் முருகப்பெருமான் தான், அவர் மேல ஒரு பாட்டு ரெண்டு வரி பாடறேன் கேளுங்க.

முதலில் திருப்புகழை சொல்கிறார். " ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று" ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

மயிள்மீது முருகப்பெருமான் போறாரு அப்போ அருணகிரிநாதர் பார்க்கிறார், அதை வாரியார் சுவாமிகளும் பார்க்கிறாராம். ஞானிகளெல்லாம் ஒருவர் நினைத்தால் அதன்பொருட்டு அனைவருக்கும் அது தெரியுமாம். சித்தர்களுக்கு அவர்கள் ஞானமெல்லாம் முப்பத்தியாறு டிகிரியில் ஒரே சாய்வாக இருக்கும் என்று படித்திருக்கேன். அப்படி முருகன் மயில் மீது வருவதை பார்க்கையிலே ,

பாடத்துவங்குகிறார்

ஆடுமயில் மீதினிலே ஓடிவரும் வேலவனே காவடிகள் கூட்டமதை, காணமனம் நாடுதடா

பாடப்ப்பாட இனிக்குதடா பழனி ஆண்டவா, உன் பார்வையிலே தோன்றுதடா கருணை காட்டவா

சக்தி உமை வேல்பிடித்த சாமியல்லவா சக்தி உமை வேல்பிடித்த சாமியல்லவா உன் சரணாகதி நானடைந்தேன் பாதமல்லவா உன் சரணாகதி நானடைந்தேன் பாதமல்லவா

ஆடுமயில் மீதினிலே ஓடிவரும் வேலவனே காவடிகள் கூட்டமதை, காணமனம் நாடுதடா

முத்தமிழுக்கு வழிகாட்டும் முருகனல்லவா உன் மூல மந்திரம் அதற்கு இங்கே தேவை அல்லவா சக்தி உமை வேல்பிடித்த சாமியல்லவா சக்தி உமை வேல்பிடித்த சாமியல்லவா உன் சரணாகதி நானடைந்தேன் பாதமல்லவா உன் சரணாகதி நானடைந்தேன் பாதமல்லவா

ஆடுமயில் மீதினிலே ஓடிவரும் வேலவனே காவடிகள் கூட்டமதை, காணமனம் நாடுதடா காணமனம் நாடுதடா ...

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !

Comments

Popular posts from this blog

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிர...

திருவிழா .......

நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது. எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன . பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .   வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை. இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது. மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத...