கி ராவை பாக்கணும் என்று கொள்ளைநாளாய் ஆசை. முதிர்ந்த பிராயத்தில் ஒரு
வயசாளியை தொந்தரவு செய்யனுமா என்கிற எண்ணத்தை ஆசை ஜெயித்து விடுகிறது, எப்போதும்
அதுதானே நடக்கும். நண்பர் மணிமாறனை அணத்த்தி எடுத்து அவருடன் வண்டியில்
தொத்திக்கிட்டு போன நாத்திக்கிழமை(4.3.18) தாத்தாவை பார்க்க போயாச்சு.
சாய்வு நாற்காலியில் முதுகுக்கு நோவாது தலையணை போர்வைகளை வைத்து
அமர்ந்திருந்தார், கால் ரெண்டும் ஒட்டுனாப்போல மடித்து ஒருபக்கமாக சாய்த்து
நாற்காலி மேலேயே வைத்திருந்தார், பேசி முடிக்குமட்டும் கால்களை நகர்த்தவில்லை
அதுவே அவருக்கு இசைவான நிலைபோலும். சுருக்கங்கள் அடர்ந்த நரம்புக்கைகள் பேச்சுக்கு
தக்கன எழுந்து காற்றில் அலைந்து பின் மீண்டும் மரக்கைப்பிடியில் வந்திறங்கி
விடுகின்றன. உள்ளோடும் இசைக்கு ஏற்றபடி
லயம் கூட்டும் விரல்கள். கூர்மூக்கு தீட்சண்யமான கண்கள், முதல்பார்வையிலே மனுஷாளை
உள்புகுந்து பார்த்து விடுகிற கண்கள், சிரிக்கும்போதெல்லாம் துளி கறைகூட இல்லாது
ஒளிவிடும் கண்கள். மேத்துண்டு, மெல்லிய
வேட்டி. சிம்மாசனத்துக்கு அருகிலேயே செங்கோல் கைத்தடி. வலதுகைப்பக்கம் மேசையில்
புத்தகங்கள், அருகிலேயே சுவரை ஒட்டி பழைய எழுதுபலகை ஒன்று சாய்த்து
வைக்கப்பட்டிருந்தது அதைப்பார்த்ததும் அதன்மேல் இயல்பாக பொறாமை எழுந்தது.
கொண்டுவந்த கேள்விகளையெல்லாம் முதுகுக்குப்பின் மறைத்து விட்டு கதை
கேட்கும் பிள்ளைகளாய் மாறிப்போனோம். இடையிடையே எடுத்துக்கொடுப்பது, பேச்சினூடே
இடைவெளி வந்தால் அதை கலைப்பதற்காக மட்டும் வாயை திறப்பது இதோடு சரி.
அறிமுகப்படலத்தின் போதே மணியிடம் கல்யாணம் ஆகிடுச்சா என பிரபி அண்ணன்
கேட்க “எங்க ஊருல கல்யாணம் ஆயிருச்சான்னு கேட்டா உடனே பொண்ணு வச்சுருக்கியான்னு
கேப்பான் “ என சிரிப்பாணியோடே பேசத்தொடங்கினார்.
கோபல்லகிராமம் நான் எழுதுன கதைதான் ஆனா இப்போ எனக்கு மறந்து போச்சு.
அதுல வர அச்சிந்தலு தீயில குதிக்கறது எப்பிடீன்னா அந்த காலத்துல இருந்திருக்கு.
கட்டி வச்சு எரிக்கிறதும் கூட ...இடையிலே வந்திருக்கும் அதில்லாம விரும்பி தீயிலே
விழுவதும் இருக்கும். இது இல்லாம புருஷன் சண்டையில செத்திருப்பான் அவன் உடம்பு
அங்க போர்க்களத்துல இருக்கும் இவ இங்க ஊர்ல கட்டிய அடுக்கி தீப்பாய்வா.
அப்பிடித்தான் கோயம்புத்தூர்லே மாடுகட்டி பாளையம்னு ஒரு இடம் இருக்கு அங்க போனோம்
அங்க ரங்கம்மா கோவில்னு இருக்கு அந்த சாமி வெட்ட வெளியிலே இருக்கு சுத்தீ மாடிவீடா
இருக்கு அதெல்லாம் யார்னு கேட்டா இந்த சாமிய கும்புடரவங்க நாங்கேட்டேன் இப்பிடி
கோவில சுத்தி சுவர்மட்டும்தா இருக்கேன்னு கேட்டேன் அதுக்கு அவுங்க சொன்னாங்க தொடர்ந்து
இருவத்தஞ்சு வருஷம், இருவத்தஞ்சு வருஷமா
கோவில் கட்டுறதுக்கு பூக்கட்டி கேட்டோம்
சாமி ஒவ்வொரு வருஷமும் வேண்டாம் வேண்டாம்னே சொல்லீருச்சு அதனால
கெட்டலைன்னுட்டாங்க.. அதுல பாத்தீங்கன்னா பொண்ணு தீப்பாயுமுன்னே சிதைய சுத்தி
வருவா அப்போ அவகிட்ட போயி கும்பிட்டு கேப்பாங்க, அவுங்களும் நீங்க இன்ன செய்யுங்க
நல்லா இருப்பீங்க அப்பிடீன்னு சொல்றதுண்டு. ஆனா நாங்க போன இடத்துல அந்த சாமியா
இருக்கற பொண்ணு தன்னோட புகுந்த வீட்டுக்காரங்க கிட்ட அப்பிடி எதுவுமே சொல்லலயாம்
அவுங்களும் கேட்டிருக்காங்க அந்த அம்மா கையை மட்டும் தூக்கி (ஆசி வழங்குவதுபோல்
கையை காட்டுகிறார்) இப்பிடி காட்டிட்டு தீயில இறங்கிருச்சாம். இன்னும் அந்தப்பெண்
பிறந்த வீட்டுகாரங்க மட்டும்தான் கோவிலுக்கு உள்ள சாமி கும்புடறது, புகுந்த வீட்டுக்காரங்க செவுத்துக்கு அந்த
பக்கம்தான் பொங்க வச்சுக்கும்பிடுறாங்க.
சத்தங்கேட்டு உள்ளறையிலிருந்து கணவதி அம்மா வருகிறார் “வாங்க வாங்க
யாரு புதுசாருக்கே”, “நான் புதுசு இதோ இவர் போன தடவை ஜே கூட வந்தாரே” அம்மா
மீண்டும் “ஆளு தெரியலையே” என்றார் , நைனா சிரித்துக்கொண்டே சொல்கிறார் “புதுசு
தான் ஆளு தெரியலன்னா புதுசுதானே”
கோபல்ல கிராமம் பிரெஞ்சுல மொழிபெயர்த்து புத்தகமா வந்திருக்கு , பிரபீ
அந்தப்புத்தகம் அந்த அண்ணன் உள்ளே போகிறார் கண்ணுக்கு தெரியுதா ..ம் அங்க புத்தகம்
போடும் போது என்ன பண்றான் இந்தப்பக்கம் அது என்ன மொழியில எழுதப்பட்டுச்சோ அது
அந்தப்பக்கம் பிரெஞ்சுல இருக்கு இப்போ இந்த புத்தகத்துல தமிழ் ஒரு பக்கம் பிரெஞ்சு
ஒரு பக்கம்னு இருக்கு, இதுல நம்ம இஷ்டத்துக்கு வண்டி ஓட்ட முடியாதுல்லே (
சிரிப்பு). இந்த பொஸ்தகம் மொழிபெயர்த்தது
எலிசபெத் அப்டீங்கற பொம்பளை. அந்தம்மா அங்கே ஒரு சிலோன் தமிழன கல்யாணம் பண்ணீட்டு
அப்புறம் தமிழ் கத்துக்கிட்டு இந்த நாவலப்பத்தி கேள்விப்பட்டு
மொழிபெயர்த்திருக்கா..
அந்தம்மா இந்த நாவல மொழிபெயர்க்க பர்மிஷன் கேட்க வந்தா, அப்போ கோவில்ல
பாட்டெல்லாம் பாடுராங்கயில்லியா என்னது ம்
ஓதுவார் அவுங்களைப்பத்தி தெரிஞ்சு
ஆராய்ச்சி பண்ண இங்க வந்தா.. நான் சொன்னேன் இதையெல்லாம் நீங்க பொஸ்தகமா போடலாமேன்னு
அதுக்கு அவ இத யார் படிக்கிறது, யாரு புத்தகம் போட வருவான்னு கேட்டா. அந்தம்மா
இப்போ ஒரு நாலு நாளைக்கு முன்ன தவறிட்டாங்கன்னு தகவல் வந்தது.
இடைஇடையே பாடல் ஒன்றை ஸ்வரம் பாடிக்கொண்டு மரப்பிடியில் தாளமிடுகிறார்
இதெல்லாம் சில வினாடி இடைவெளிகளில்
ஒரு ஆளுக்கு பல பேர்கள் இருக்கும் அவங்க வீட்ல பேரு வப்பாங்க அது
அந்தப்பையனோட தாத்தா பேரா இருக்கும் அதுனால தானே பேரன்னு சொல்லுறது, அந்தப்பையன்
தன் அப்பா பேர தன் மகனுக்கு வைப்பான் இப்பிடி
ராமன்னு பேரு வச்சுருப்பாங்க தாத்தா வேற கல்லாட்டம் உக்காந்துருப்பாரு
(பெருஞ்சிரிப்பாய் சிரிக்கிறார்) அவரு முன்னாடி அடேய் ராமா இங்க வாடான்னு கூப்புட
முடியாது அப்போ வீட்டிலேயே இன்னொரு பேர் இருக்கும், அவன் பள்ளிக்கூடத்துக்குபோகும்போது அங்கிருக்க பயலுகல்லாம் ஒரு பேரு வைப்பாங்க
அது பட்டப்பேர். ஒரே பேருல பலர் ஒரு ஊருல இருக்கரதுண்டு அதனால அந்த ஊருக்காரங்க
அவனுக்கு ஒரு பேரு வச்சுருப்பாங்க. அந்த ஊரு பொண்ணுங்க அவனுக்கு ஒரு பேரு
வச்சுருப்பாங்க அது பெண்களுக்குள்ளேயே அவங்களுக்கு மட்டும் தெரிஞ்ச பேரு, இப்பிடி
ஒரு மனுஷனுக்கு பல பேர்கள் உண்டு.
இங்க நகரத்துல ஒரு பகுதிக்கு ராஜாஜி நகர் காந்தி நகர்னு பேர்
வச்சுருவாங்க ஆனா கிராமத்துக்கு அப்பிடியில்லே. கலைஞர் கூட கலைஞர் கருணாநிதி
நகர்னு பேர் வச்சாரு ஆனா மக்கள் அத கே கே நகர்னு ஆக்கிட்டாங்க யாரும் கலைஞர்
கருணாநிதி நகர்னு சொல்றதில்லை கேகே நகர்தான், இதுல அவருக்கு வருத்தம்தான்.
ஒரு ஊருக்கு எப்போவும் அந்த ஊரு ஆளுங்க பேரு வக்கிறதில்ல
வழிப்போக்கங்க அந்த ஊரு வழியா போறவுங்கதான் வக்கிறது. என்னை கேப்பாங்க என்ன நீங்க
கரிசல் எழுத்தாளர் கரிசல் மண்ணோட ஏருன்னெல்லாம் சொல்றாங்களே உங்க ஊரு இடைசெவல்
அப்பிடீன்னுல்ல இருக்குன்னு, ரெண்டு பக்கமும் கரிசல் மண்ணு நடுவுலே செவப்பு மண்ணு
பாதை மாதிரி அதுனால இடைசெவல்னு பேரு வந்தாச்சு. எங்க ஊரு நிலமும் கரிசல் தான்
,இப்போ அங்க ஒண்ணுமில்லே விவசாயம் பாத்தா, நட்டம் தான். ஒருத்தனப்பழி வாங்கணும்னா
பத்து ஏக்கரா நிலத்தக்குடுத்து விவசாயம் பாருடான்னா போதும். எங்க ஊரு பக்கத்துல
வில்லிசேரின்னு ஊரு இருக்கு வில்லிங்கிறது ஒரு பெண்ணோட பேராக இருந்திருக்கலாம்,
இப்பிடி ஊரு பேரு பொறந்து வருது. பன்னிகுளம்னு ஊரு இருந்தது காட்டுபன்னிக வந்து
தண்ணி குடிச்ச இடமா இருந்திருக்கும் அந்த ஊரு ஆளுங்க பாத்தாங்க நம்ம ஊரு மட்டும்
இப்பிடியான்னு பன்னீர் குளமா மாத்தி வச்சுக்கிட்டாங்க உண்மையில பன்னீர் குளம்னு
ஏதும் இருக்கா இருக்காது, இப்பிடி ஓநாய் குளம் ஓம்நமோ குளமா ஆயாச்சு (
சிரிக்கிறார் ) .
அப்பிடித்தான் பஸ் நின்னவோடனே கண்டக்டர் சீட்டுக் கணக்கு சொல்லணும்
அவரு வானரம் நாலு அப்பிடீன்னாரு அது வானரம்பட்டி, அப்போ அந்த ஊரு ஆளுங்க இருந்தா
சண்ட போடுவாங்கல்ல என்ன வானரம்னு சொல்றேன்னு.
புராணத்துக்கும் ஊர்ப்பேருக்கும் தொடர்புங்கறது பாத்தீங்கன்னா
அந்தக்கதை விரிஞ்சுகிட்டே போகும் பெரிய கடல் மாதிரி, அத நாம சொல்லீரமுடியாது.
கோபல்ல கிராமம் கதை தெலுங்குல மொழிபெயர்க்கப்பட்டு தொடரா வந்துருக்கு,
அங்க பாத்தீங்கன்னா அந்த பத்திரிக்கையிலேயே எழுத்தாளரோட போன் நம்பர போடுறாங்க, அது
ரொம்ம்ப நல்ல பழக்கம். அப்பிடி தொடரா வரும்போழுது எனக்கு நிறைய போன் வரும் 800
வருஷத்துக்கு முன்னாடி இங்க இருந்து அங்க போயி இருக்கிறீங்களே நீங்க பேசுற பாஷதான்
அப்புடியே இருக்குன்னு சந்தோஷப்படுவாங்க
அத மொழிபெயர்த்தவரு தெலுங்கு
தேசத்திலிருந்து தமிழ்நாடுக்கு வேலைக்காக வந்தவரு, இருவது வருஷமா இங்கியே
இருக்காரு. இங்கே வந்து தமிழ் பேசக்கத்துகிட்டு தமிழ் எழுத்துப்படிக்கக் கத்துக்கிடராரு,
புஸ்தகம்லாம் படிக்கிறாரு. அப்போ எதேச்சையாத்தான் இந்த நாவலப்பத்தி கேள்விப்பட்டு
படிக்கிறாரு, இது நம்ம ஊர்க்கதையாக இருக்குதே நம்மளப்பத்தி இருக்குதேன்னு
ஆச்சரியப்பட்டு தான் இதை மொழிபெயர்க்க எங்கிட்ட பர்மிஷன் கேட்டாரு நான்
குடுத்துட்டேன். இந்த நாவல மொழிபெயர்க்க ஒரு அம்மா உதவி பண்ணீருக்கா அவுங்க இந்த
வார்த்தகளை பத்தி ஆராய்ச்சி பண்ணி செகரிக்கிரவுங்க.
கோபல்ல கிராமத்தினோட முதோ
அத்தியாயம் ஒரு காலேல ஒரு கிராமமே கண்ணு முழிக்குது. அத படிக்கிறவன் எப்பேர்ப்பட்டவனா
இருந்தாலும் அசந்து போவான் அப்படிப்பட்ட பகுதி இது, அத இவங்க மொழிபெயர்த்து
தெலுங்குல வாசிச்சுக்காட்டராங்க அப்பிடியே எனக்கு புல்லரிக்கி.
மதிய நேரம் நெருங்கவே கச்சேரியை முடித்துக்கிளம்பினோம் சரி என்று
விடைகொடுத்தார். பேச ஆரம்பிக்கையில் “இப்போ எல்லாம் யாரையும் நான்
சந்திக்கிரதில்லை , உடம்புக்கு முடியாதது ஒண்ணு, நியாபகத்துல நிறைய மறந்து
போயிருது அதான்” என்றார் கி ரா. அது அவருக்கான வார்த்தைகளே அல்ல, அவரைபோல ஒரு
கதைசொல்லி எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்த முடியுமா என்ன. கி ரா பேசுகையில்
சிரிக்கையில் சுற்றியுள்ள உலகையெல்லாம் உறையச்செய்பவர். அது அவ்வாறே
தொடரட்டும்.
தாமரைக்கண்ணன்
புதுவை
06.03.2018
Comments
Post a Comment