Skip to main content

புதுவை வெண்முரசு கூடுகையில் நாஞ்சில் நாடன்


புதுவை வெண்முரசுக்கூடுகை – 16 (நாள்: 23.06.2018 / சனிக்கிழமை)


புதுவை வெண்முரசு வட்டத்தின் பதினாறாவது அமர்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது, வழக்கமான அமர்வு முறையில் வெண்முரசின் குறிப்பிட்ட பகுதி  பற்றி பிரதானமாக ஒரு வாசகர் பேசுவார், பின்  அனைவரும் அப்பகுதியை விவாதிப்போம். விவாதம் வள்ளலார் கோவிலில் நிகழ்வது போல் திரைகளை விலக்கி விலக்கி நுட்பங்களை நோக்கி செல்லும், நண்பர்கள் அரியோ மயிலாடுதுறை பிரபுவோ காவிய நிகழ்வுகளின் மறைபொருளை, உருவகங்களை விரிவு படுத்திப்பேசுவார்கள். கடலூர் சீனு இத்தனைக்கும் பிறகு புதிய கோணம் ஒன்றை,இணைப்புகளை சுட்டிக்காட்டுவார். வளவ துரையன் ஐயா சென்ற அமர்வில் நாங்கள் விவாதிக்காது விட்ட உவமைகளின் அழகை விவரித்தார். மரபான பார்வைப் புரிதலின் சிறப்பு என்னவென்று தெரிந்தது. நேர ஒழுங்கை பெரும்பாலும் மீறி காலம் தாழ்த்தியே நிகழ்வை முடிப்போம். அதன் பின்னும் கீதம் உணவகத்தில் பேச்சுகச்சேரியை தொடர்வோம். இல்லம் ஏகிய பின்னரும் இன்னும் பேசியிருக்கலாமே என்றுதான் தோன்றும், வெண்முரசு கடந்து தீராத நதி.

இந்த அமர்வு தமிழின் மூத்த எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் , திரு. கீரனூர் ஜாகீர் ராஜா இவர்களோடு விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களான திருச்சி செல்வராணி, ஜாஜா, மருத்துவர் வேட்ராயன் ஆகியோரும் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்வு.

செல்வராணியின் லடாக் பயண அனுபவத்தோடு நிகழ்வு துவங்கியது. அவர் தனியாக திருச்சியிலிருந்து லடாக் வரை தன் வெஸ்பாவில் பயணித்து மீண்டிருக்கிறார். தான் சென்று வந்ததை யாராலும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாமை குறித்து சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார். அவர் சென்றது அன்மீகப் பயணமோ இன்பச்சுற்றுலாவோ அல்ல, அய்ம்பது கிலோ மீட்டோருக்கோர்முறை மாறிக்கொண்டே செல்லும் நிலப்பரப்புகளை காண்பதற்காகவே சென்று வந்திருக்கிறார்.

வெண்முரசில் இந்த எல்லா நிலப்பகுதியுமே காட்சிப்படுத்தப்பட்டு விட்டதால் புதிய ஒன்றாக அவருக்கு தோன்றவில்லை. மாளவமும், விதர்ப்பமும், மார்த்திகாவதியும், மதுராவும் இன்றைய பெயர்களில் அறிமுகமாகியிருக்கிறது. எதுவும் நடக்கவில்லையா என்ற கேள்வியையே தான் எங்கும் எதிர்கொள்வதாக கூறினார் செல்வராணி. தமிழ்நாட்டை தாண்டி வெளியே சென்றால்நமக்குப்பாதுகாப்பில்லை என்றே கற்பிக்கப்பட்டிருக்கிறது அதுவும் மொழி தெரியாத ஊரில் என்ன செய்வது என்ற எண்ணம். இந்தியாவை சுற்றிப்பார்க்க இந்தி தேவை என்ற எண்ணமும் பொய்தான் என்றார். ஆக்ரா டெல்லி இந்த இரு பகுதிகள் தவிர்த்து வேறு எங்கும் இந்தி மொழி பெரிதும் பேசப்படவில்லை, உள்ளூர் மொழிகளே எங்கும் பேசப்படுகிறது. லடாக்கில் அவர் தங்கியிருந்த இடத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர்மொழிகள். இந்தி தெரியாமல் தான் இவ்வளவு தூரம் சென்று வந்துள்ளார். பாதுகாப்பின்மையை எங்கும் உணரவில்லை என்றும் சொன்னார். அனைவரும் கனிவுடனும் மகிழ்வுடனுமே அவரது பயணத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.அவரது திட்டமிடலும் நேர்மறை ஆற்றலும் இன்னும் அவரை பன்மடங்கு பயணிக்கச்செய்வன.

 மழைப்பாடலின் அனல்வெள்ளம் மற்றும் முதற்களம் ஆகிய பகுதிகள் பற்றிய தனது வாசிப்பை சுருக்கமாகப்பேசினார் திருமாவளவன். அச்வதந்த கல் அந்த அறையெங்கும் தன் ஒளியை எல்லோர் விழியிலும் காட்டிக்கொண்டிருந்தது. பின் விவாதம், சென்னை நண்பர்களும் பங்கேற்றதில் விவாதம் மேலும் செறிவானதாக மிளிர்ந்தது.. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதையில் குழந்தைகள் புதுத்துணியை உடுத்த வேக வேகமாக சாப்பிட்டு எழுந்திரிக்கும் அவசர மனநிலை அனைவரிடமும், ஆம் நாஞ்சில் பேச ஆரம்பித்தார்.



மகாபாரதம் வடதமிழகத்தில் தெருக்கூத்து வடிவில் நிலைத்திருக்கிறது, திரௌபதி வஸ்திராபரணம், அபிமன்யு கதை என்று விதவிதமாக கூத்து. மதுரைக்கு தெற்கே இந்த கூத்து கிடையாது வேறோர் கூத்து உண்டு அது தோல்பாவைக்கூத்து. பாவைக்கூத்தில் இராமாயணம் தான் பிரதானம், பாரதத்தின் கதை மாந்தருக்கு அத்திரையில் இடமில்லை. இராமயணக்கதையின் எளிமை இதற்குக்காரணமாக இருக்கலாம். இராமாயணத்தில் இருக்கும் பரிச்சயம் எனக்கு மகாபாரதத்தில் இல்லை,

தமிழில் மூன்று பாரதம் இருந்திருக்கிறது நல்லாப்பிள்ளை பாரதம், பெருந்தேவனார் பாரதம், வில்லி பாரதம். இவர்கள் யாருமே முழுவதுமாக பாரதம் பாடியவர்களில்லை. பாரதி கூட மகாபாரதத்தின் சிறு பகுதியையே இலக்கியமாக்க முடிந்தது, பாஞ்சாலி சபதம் மட்டுமே எழுதினார். ஆமாம் தேசபக்தியை மனதில் கொண்டு பாரதமாதாவை பாஞ்சாலியாக உருவகித்துப்பாடினார் என்று சொல்வார்கள். ஆனால் நான் படித்த மட்டில் எனக்கு அப்படித்தோன்றவில்லை, அவர் இன்னும் நீண்ட ஆயுள் கொண்டிருந்தால் ஒருவேளை அவர் இன்னும் அதிகமாக எழுதியிருக்கக்கூடும். தேவி பாஞ்சாலி உரைப்பாள் என்று துவங்கி அவர் எழுதியுள்ளதை வில்லி பாரதத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பாரதியின் வீச்சு புரியும்.

வில்லிபுத்தூரார் பற்றிய ஓர் கதையுண்டு. அவர் பிறப்பால் செல்வந்தர், நிலபுலங்கள் நிறைய உண்டு. அவரது தமையனாருக்கும் அவருக்கும் சொத்து பாகத்தில் பிரச்சினை. வழக்கு பாண்டிய ராஜாவுக்கு போகிறது. அவரோ அவர்களிடம் பாரதத்தை கொடுத்து முதலில் இதை தமிழில் எழுதி முடியுங்கள் பின் வழக்காய்வோம் என்றனுப்பி விடுகிறான். வில்லி பாரதம் பாடி சுவடிகளை மன்னனிடம் கொடுத்தனுப்புகிறார். மன்னனுக்கு வழக்கு நினைவுக்கு வருகிறது வில்லியை அழைக்கிறார், வில்லி சொத்துக்களை எல்லாம் அண்ணனே எடுத்துக்கொள்வதில் தனக்கும் சம்மதமே என்று பதிலளித்து விடுகிறார். ஒரு காவியம் படிப்பதினால் கிடைக்கும் தரிசனம், திறப்பு இல்லையா இது.

கம்பன் வால்மீகிக்கு முன் மூன்று இராமாயணம் இருந்ததாக பதிவு செய்கிறான். அனால் வியாச மகாபாரதத்திற்கு முன் வேறு பாரதங்கள் இருந்ததா தெரியவில்லை. ராஜாஜி எழுதிய இரண்டு முக்கியமான புத்தகங்கள் சக்ரவர்த்தி திருமகன் மற்றும் வியாசர் விருந்து இதில் வியாசர் விருந்து தான் நான் படித்தறிந்த மகாபாரதம். சோழ ராஜாவுக்கு அம்பிகாபதி அமராவதி மேல சந்தேகம், இவங்க ஏதோ பேசிக்கிறாங்களே எதுக்கும் சோதிச்சுப்பார்ப்போம்னு கம்பரையும் அவர் மகனையும் விருந்துக்குக் கூப்பிடுறார், விருந்துன்னா இன்னைக்கு அஞ்சு நட்சத்திர ஓட்டலிலே மூன்று டேபிள் போட்ட மாதிரி சாப்பாடு போட்டிருக்க மாட்டாங்க, காவல்கோட்டத்தில வெங்கடேசன் எழுதுறார் பாருங்க தளபதிகள் கம்மங்கூழ் குடிச்சாங்கன்னு அது ரொம்ப சரி. கம்பர், சோழன், அம்பிகாபதி அப்புறம் ரெண்டு தளபதிங்க, அமைச்சருங்க இருந்திருப்பாங்க, தரையில உக்கார்ந்திருக்காங்க, அப்போ அந்தப்பொண்ணு சாப்பாடு விளம்ப வர்றா, பாத்தவுடனே பாடிட்டான் கம்பர் மகன்இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க, வட்டில் சுமந்து மருங்கசையன்னு, பாவி குடியக் கெடுத்தானேன்னு நினைக்கிறார் கம்பர். அவன் விட்ட இடத்திலேயிருந்து பாடுறார்கொட்டிக்கிழங்கோ... கிழங்கென்று கூவுவாள் வழங்கோசை வையம்பெறும்னு.
இந்த மாதிரி தெருவிலே கூவி விக்கிறவங்களுக்கு கூவியர்னு பேரு சங்கப்பாடல்களிலே. இடியாப்பத்தை கூவி வித்திருக்காங்க அப்போ, இப்போவும் விக்கிறாங்க. சோழ ராஜாவுக்கு சந்தேகம், கொட்டிக்கிழங்கென்பது ஆம்பல் போன்ற நீர்த்தாவரமொன்றின் கிழங்கு, கடும் பஞ்சகாலத்தில் குளத்தின் நீர்வற்றினால் தான் கொட்டிக்கிழங்கு அகழமுடியும். என் நாட்டில கொட்டிக்கிழங்கு திங்கிற அளவுக்கா பஞ்சம்னு எட்டிப்பாக்குறான் ராஜா, அங்க ஒரு கிழவி கிழங்கு வித்துப்போறா. புலவனுக்காக அவன் மனம் துயரப்படக்கூடாதுன்னு சரஸ்வதி வாரா இல்லையா.
புலவன் தப்பா எழுதுவதில்லை, என்பு தின்னும் ஒட்டகம்ன்னு சங்கப்பாடல் ஒண்ணுல குறிப்பு வருது வையாபுரிப்பிள்ளை முதலிய எல்லா உரையாசிரியர்களும் அதை எலும்புன்னுதான் சொல்றாங்க. ஒட்டகம் எலும்பு திங்குமா அது ஹெர்பியோரஸ், சாகபட்சிணி, ஆனா மூணு மாதம் பசியில இருக்கற ஒட்டகம் எஜமானனின் தோல் கூடாரத்தையே உண்ண வல்லது. தமிழ்நாட்டுல ஒட்டகம் எலும்பு தின்ன என்ன அவசியம்? இது ஒன்னும் பாலை இல்லையே.  பிறகு நான் அகராதிகளில் தேடிப்பார்த்தேன் கிடைக்கல, கோரக்கர் அகராதியில இதுக்கு விடை கிடைச்சது வெள்ளிய உலர்ந்த புல், ஆமா என்புங்குறது புல் அப்பிடிங்குற அர்த்தம் அதில் கொடுத்திருந்தது. தேடினால் கிடைக்கும், யாரு சொன்னா என்ன, தேடனும் அவ்வளவுதான்.

ஒட்டகம், ஒட்டகை முதலிய வார்த்தைகள் சங்கப்படல்களிலே இருக்கு . தொல்காப்பியத்திலே ஒட்டகம் இருக்கு எந்தெந்த விலங்குகளின் குழந்தைகளை குட்டின்னு சொல்லனுங்குற இடத்திலே ஒட்டகம் வருது.
இந்த வார்த்தை எப்படி தமிழ் இலக்கியத்துல வருது. இது தமிழகத்தோட விலங்கு இல்லையே. ஒட்டகமும் குதிரையும் வெளியிலருந்து வந்தது ஆனா குதிரை தங்கிடுச்சு ஒட்டகம் தங்கல.ஆங்கிலத்துல கேமல், இந்தியில கம்லா இதுல ஒட்டகம் எனும் சொல்லோட வேர் எங்க இருக்கு.
வடமாநிலங்கள்ள ஒட்டகத்த ஊன்ட் அப்டிங்கிராங்க பீகார் பகுதியிலே ஊட் அப்டிங்கிறாங்க இங்கருந்து தான் ஒட்டகம் என்கிற வார்த்தை பிறக்குது.
இங்க ஒரு பேராசிரியர் ஒட்டிய வயிருள்ளதால ஒட்டகம்னு பெயர் வந்ததுங்கறாரு அப்பிடிப்பார்த்தா முதல்ல நாய்க்கில்ல அந்தப்பேர் வந்திருக்கனும். 

இங்க வடசொல்லை தமிழில பயன்படுத்தணுமான்னு கேள்வி இல்ல, நம்ம பாட்டனுக்கு பாட்டன் தொல்காப்பியரே அதுக்கு லைசன்சு குடுத்துருக்கான். நாட்டார் கதைகளில் வரும் பாரதம் வேற ஒண்ணு. அங்க கெட்ட வார்த்தைன்னு ஒன்னும் இல்ல, பேசுற எல்லா வார்த்தையும் நல்ல வார்த்தைதான். அதுக்கான அர்த்தத்த நாமதான் தப்பா எடுத்துக்குறோம். உதாரணமா சூரபத்மனுக்க அம்மை மகாபலசாலி உம்முன்னு ஒரு முக்கு முக்குனா ஆயிரம் அரக்கனுங்க பொறந்துடுவானுங்க, முருகன் சண்டை போடும்போது பாக்குறாரு, எத்தனை பேரக் கொன்னாலும் மறுபடியும் வாரானுங்களேன்னுட்டு, பிள்ளையார்கிட்ட உதவிகேக்கறாரு, அவரு தும்பிக்கையை வச்சு அவளோட சங்கதிய மறைச்சு அடச்சுப்புடறாரு. எல்லாம் மக்களோட கற்பனைதான். இதே மாதிரி மகாபாரத கதை ஒன்னு இருக்கு, துரியோதனன் பானுமதிக்கிட்ட அவ்வளவு பிரியமா இல்ல, இத மாத்தணுமேன்னுட்டு ஒரு மருந்து வாங்கி பாலில கலந்து வச்சுருக்கா, அந்தப்பக்கம் வந்த தச்சன்கிற பாம்பு அதக்குடிச்சிருச்சு. எப்போதும் அது பானுமதியவே சுத்தி வருது, அவ அல்லாடுறா பாவம். இப்போ பாண்டவர்களோட இடத்துக்கு விருந்துக்கு துரியோதனன் வர்றான், சோறு வைக்கிறா பாஞ்சாலி. நமுட்டுச்சிரிப்போட துரியோதனங் கேக்குறான் "மயினி இன்னிக்கு யாரு மொறேன்னு". துரோபதி ஒண்ணுஞ்சொல்லாம வெளிய வந்துர்ரா. அந்த உறவு முறையிலே இப்பிடி கிண்டலடிக்கிறது சகஜம். அப்ப கிருஷ்ணன்கிட்ட முறையிடறா, இந்த நீசனைப்பாரு கொஞ்சங்கோட வெக்கமில்லாம இப்பிடிக் கேக்குறான்னு. அதுக்கு கிருஷ்ணஞ் சொல்றாரு அடுத்தமுறை சோறுவைக்கும்போது அதுக்கு "இன்னிக்கி தக்கன் முறைன்னு" சொல்லுன்னுட்டு.   

திருக்குறளில் ஒன்பதாயிரத்து முன்னூற்று பத்து சீர் மொத்தம், வள்ளுவர்உத்தேசமாக ஏழாயிரம் சொற்கள் பயன்படுத்தியிருக்கலாம். கம்பனது பாடல், விருத்தம். சீவக சிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் பயன்படுத்திய அத்தனை விருத்தப்பாக்களையும் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான். கம்பனுடைய பாடல்களில் குறைந்தது ஒரு லட்சம் சொல்லாவது இருந்துள்ளது, இது உலக முழுதுமுள்ள செய்யுள் காப்பியத்தில் அதிக சொல்லுடைய காப்பியம் , இந்த சிறப்பு மொழியிலே நிகழ்ந்திருக்கிறது. தாமரை என்னும் ஒரு சொல்லுக்கு அரவிந்தம் வனசம் பங்கயம் என்று பல்வேறு சொற்களை தமிழ்ப்படுத்தி பயன்படுத்தியிருக்கிறான், அதற்கான தேவை மொழியிலே இருந்திருக்கிறது. இதை தொல்காப்பியம் அங்கீகரிக்கிறது. செய்யுளுக்கான இலக்கணப்படி, வடஎழுத்து தவிர்த்து தமிழ்ப்படுத்தி வடசொல்லை பயன்படுத்தலாம். இப்படி மொழிக்குள் ஏராளமான சொற்களை கொண்டுவந்தும், அதுவரை வராத சொற்களை பதிவு செய்தும் காப்பியம் செய்திருக்கிறான் கம்பன்.

தூது வந்த அனுமனுக்கு வாலிலே நெருப்பு வைக்கிறார்கள், செய்தி சீதைக்கு செல்கிறது, இப்போதுதான்இன்றென இருத்தியல்என்று வாழ்த்தியிருக்கிறாள், தான் கற்புநெறி காப்பதையும் உயிரோடிருப்பதையும் இராமனுக்கு சொல்ல வேறொருவன் இல்லை. அக்கினி பகவானை அழைக்கிறாள், “நிற்கே தெரியும் என் கற்புஎனக்கூறி, அவனை சுடல் என்கிறாள். சொன்ன மாத்திரம் கடலின் வடவைத்தீ அவிகிறது, இருசுடர் அணைகிறது, வேள்வித்தீ குளிர்கிறது, இறுதியாக முக்கண்ணனின் வன்னியும் அவிந்தது என்கிறார் கம்பர். அழல், (காரைக்காலம்மையார் பாடுறா இல்லை அழலால் அங்கை சிவந்ததோ, அங்கை அழகால் அழல் சிவந்ததோன்னு) தழல் கனல் அனல் நெருப்பு எரி அக்கினி தீ என்றெல்லாம் சொல்லிய கம்பர் வன்னி என்றோர் சொல்லும் கையாள்கிறார். வன்னி ஓர் மரம், ஈழத்து வன்னி உள்ளது , ஓர் சாதிப்பிரிவு உண்டு. இங்கு வன்னி எனப்படுவது நெருப்புத்தானே, காளமேகம் பாடுகிறாரே தீத்தான் அவன் கண்ணிலே, தீத்தான் அவன் உடலெலாம், புள்ளிருக்கு வேளூரா உன்னை தையலெப்படி சேர்ந்தாள் என்று. அயற்சொல் அகராதியிலே இந்த வார்த்தையை கண்டெடுத்தேன் வஹ்னி என்பது நெருப்புக்கான வடசொல் அதுவே கம்பனிடத்து வன்னியாயிருக்கிறது.
கம்பன் யுத்த காண்டத்திலே ஒரு இடத்திலே பூளைப்பூ பற்றிப்பேசுகிறான். மாருதத்தில் சிதறிய பூளை போல இராவணின் படை சிதறியதாக. நான் வசிக்கும் கோவையில் பொங்கல் பண்டிகையின்போது வேப்பிலை ஆவாரம்பூ பூளைப்பூ மூன்றையும் சேர்த்து எரவாணத்தில் சொருகி வைக்கும் வழக்கமிருக்கிறது, இதற்குக் காப்புக்கட்டுதல் என்று பெயர்.
கபிலர் குறிஞ்சிப்பாட்டின் பூ வரிசையில் பூளையையும் சேர்த்திருக்கிறார்.சங்க இலக்கியத்தில் இப்பூ வெண்தலைக்கும், வரகரிசிச்சோறுக்கும் ஒப்புமை சொல்லப்படுகிறது. காற்றடித்தால் சிதறி விடும் ஓர் எளிய பூ. இலக்கியத்தில் எவ்வளவு நயம் சேர்க்கிறது, எக்காலமும் நிலைத்து விடுகிறது.

வெண்முரசு நாவல் உரைநடை இலக்கியத்திலே உலகப்பெரும் ஆக்கமாக உருவாகி வருகிறது. இதிலுள்ள சொற்களை எல்லாம் ஓர் பல்கலைக்கழகம் அட்டவணைப்படுத்திபார்த்தால் மேலும் பல்லாயிரம் சொற்கள் மொழியில் சேர்ந்திருக்கும். நான் பிரார்த்திப்பது ஒன்றே இந்த பாரதம் எழுதும் பெருமுயற்சிக்கு ஜெயமோகனுக்கு தேவையான சக்தியை கடவுள் கொடுக்கட்டும்."


தாமரைக்கண்ணன் 
புதுவை 
 23.06.2018

  

 

Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போல தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சி சிறுமை உறுபவோ செய்பு அறியலரே இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது. நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனி