எழுத்தாளர் ஜெயமோகன் எழுதும் வெண்முரசு நூல்வரிசையில் இரண்டாம் நூலான மழைப்பாடல் பற்றி ஈரோட்டில் ஒருமுறை பேசினேன். அதற்காக எழுதத்துவங்கிய குறிப்பு. ஆனால் இதைப்பேச வில்லை. என்றேனும் இதைப் பின்பற்றி எழுதலாம்.
மாமழை
நீள்விசும்பு
தன் அருளை ஒரு துளி
மண்ணிற்கு அளித்து உயிர்க்குவை யாவையும்
முகிழ்க்கச்செய்கிறது. அவ்விண் துளி வேண்டி,
வெடித்து வரியோடிய நிலத்தின் இடுக்குகளின் உள்ளிருந்து வித்துக்கள் யாவும் மொத்த
வானத்தையும் குடித்துவிடும் விடாய் கொண்டு உயிர்
உயிர் என ஓட்டுக்குள் தீராத்தவம்
செய்கின்றன. தன் வஞ்சத்தை எதிராளியிடம்
காட்டாது கரப்பவன் போல் இருண்மை கொண்டு
வானைமூடும் முகில்களிடையே மின் என வெட்டி
அதிர்கிறது மெய்ப்பொருள். தொலைந்த பிள்ளையை கூட்டத்தில்
தேடுபவன் விழியென பெருநிலம் யாவையும்
பரிதவிப்போடு தழுவிக்கொள்கிறது மாமழை.
முதலில் அது மணமென
எழுந்து நாசி வழியே உள்ளுடலை விழிக்கச்செய்கிறது. மென்காற்றெனத்தழுவி குளிரை ஏற்றி
மயிர் கூச்சரியச்செய்கிறது, உள்ளோடும் குருதியின் வெம்மையை கூரான துளிகளால் உணர்த்தி
உடெலெங்கும் பரவச்செய்கிறது. உள்வெம்மையை உணருந்தோரும் தன் உடலின் திண்மையையும், காற்று
மேலிட அலைகளாகி வந்தறைந்து கூசி நடுங்கச்செய்யும் போதெல்லாம் பிள்ளைப்பிராயத்தின் நொய்மையையும்
அறியச்செய்கிறது. எதிர்நிற்பவனின் முழுக்கவனத்தையும் தன்னகத்தே திருப்பும் குழந்தை
அல்லவா மழை. விண்ணையும் மண்ணையும் இணைக்கும் அலகிலா சரங்கள் ஒவ்வொன்றிலும் புவிலுள்ள
ஒவ்வோர் அணுவுக்கும் விண்ணிலிருந்து விழி விழி எனும் செய்தி வந்து கொண்டேயிருக்கிறது.
புவியில் அனைத்தையும்
பருப்பொருளாக கண்டு அறியும் அறிவுக்கெட்டாததாய் ஏழ்வானுக்கு அப்பால் எங்கோ இருக்கிறது
வித்து உயிர் கொள்ளும் ரகசியம். இருக்கிறேன் என்னும் உணர்வுக்கும் முந்தையது அது. தேர்ந்த
கருமான் ஒருவன் இதுவே அது என தன் பெட்டியிலிருந்து ஓர் திருகாணியை எடுத்து பொருத்துவது
போல் ஒவ்வோர் வடிவத்துக்குள்ளும் உயிரை வைத்து
அனுப்பும் இறைவனது முகங்களில் உறையும் களிப்பே
அந்த உயிரனலை எழுப்பும் உலைத்துருத்திக்காற்று என்க.
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
07.08.2019
Comments
Post a Comment