Skip to main content

யாளி சூழ் உலகு ஶ்ரீவைகுண்டம்



நண்பரது திருமணத்துக்கு தென்பாண்டிநாட்டுக்கு செல்லவேண்டியிருந்தது, புலரியில் திருச்சீர் அலைவாய்ப்பெருமாளை  வணங்கிவிட்டு ஸ்ரீவைகுண்டம் சென்றிருந்தேன். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அழகிய தலம் ஸ்ரீவைகுண்டம், வைணவர்கள் வணங்கும் நூற்றியெட்டு திவ்யதேசங்களுள் ஒன்று. நெல்லைச்சீமை நவ திருப்பதிகளில் சூரியனுக்குண்டான பதி.

பாலத்தில் நடந்தபடி ஸ்ரீவைகுண்டம் அணையை பார்த்துக்கொண்டே சென்றேன். உச்சிவெயிலில் பொருநையில் இளவட்டங்கள்  நீந்திக்களித்துக்கொண்டிருக்க, கரையோரத்தில் பெண்களும் குழந்தைகளும் கூச்சலோடு விளையாடிக்கொண்டிருந்தனர். நீரின் மடியில் அவர்கள் நின்றுகொண்டு  "போவே" என்று ஞாயிறைப் பழித்துக்காட்டியது போல் தோன்றியது, பொறாமையாகவும் இருந்தது .


 வைகுந்தவாசன் என்றால் அமர்ந்திருக்கப்பட்டது தானே சரி,  ஆனால் நம்மாழ்வாரால் "வைகுந்தத்துள் நின்று" என்று பாடியபடிக்கு கொஞ்சம் நிக்கலாம்டே என்று நின்றகோலத்தில் பெருமாள் அருள்கிறார்.  திருமால் படுத்தால் படுக்கை , இருந்தால் இருக்கை, நின்றால் குடையாவேன் என்று  பின்னே ஆதிசேஷன் குடையாகி  நிற்கிறார். திருவழுதி வளநாட்டின் வைகுந்தநாதருக்கு கள்ளப்பிரான் என்றும் பெயர், பால்பாண்டி என்னும் செல்லப்பெயரும் உண்டு. இரண்டுக்கும் பின் கொஞ்சம் சுவையான கதைகளும் உண்டு.

காலதூசகன் என்னும் நல்லதிருடன்?! ஒருவன் பெருமாளையும் திருட்டுத்தொழிலில் கூட்டுச்சேர்த்துக் கொள்கிறான். கிடைப்பதில் பப்பாதி பிரித்து உண்டியலில் போட்டுவிடுவது, பெருமாளின் வேலை யார்கண்ணிலும் படாமல் கள்ளனை காப்பாற்றுவது. ஒரு நாள் மணப்படை என்னுமிடத்தில் உள்ள அரசனின் பொருள்களை திருடி அகப்பட்டுக்கொள்கிறான், காவலர் துரத்துகின்றனர். பெருமாளிடம் வந்து கோட்டைவிட்டுட்டீரே என சண்டை பிடிக்கிறான் காலன். கூட்டுக்களவாணியான பெருமாள் "இருடே, நாம்பாத்துக்கிறேன்" என்று அவன் உருவில் அரசனிடம் சென்று வாதிடுகிறார். திருட்டுக்குக் காரணமான வறுமையை ஒழிக்காதது மன்னனின் தவறு தான் என உணர்த்தி மறைந்து விடுகிறார். காலனுக்கும் நீலனுக்கும் திருட்டில் உதவுவதே தொழிலாகக்கொண்ட பெருமாளைப் பின்னே கள்ளப்பிரான் என்பது தானே சரி. 

முன்காலத்தே மண்மூடிக்கிடந்த பெருமாளின் உருவம் பாண்டியரால் பாலபிஷேகம் செய்து கிடைக்கப்பட்டதால் பால்பாண்டி என்ற பெயர் சுவாமிக்கு.

பாண்டியநாட்டுத் தலங்களைப்போல பிரம்மாண்டமானவை எங்குமில்லை, இத்தலமும் பல சுற்றுக்களை உடைய, முழுதும் கல்மேவிய மேற்தளம் கொண்ட அழகிய கட்டுமானம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வனப்புடையவை. கோபுரத்தில் முன்பக்கம் துவாரபாலகர்களும், பின்பக்கமுள்ள பெரிய, சிறிய திருவடிகளான கருடனும் அனுமனும் வித்தியாசமான  கற்களால் ஆனவர்கள் என்பதை வண்ண மாறுபாடு காட்டுகிறது. கோபுர வாயிலின் தளத்தில் முன்புறம் பரமபதநாதர் சிற்பமும், உலகளந்தோன் சிற்பமும் சிறந்தவை, மாவலியிடம் கைநீட்டும் வாமனன் குறளழகன். முழுக்கவே பெண்களால் ஆன குதிரை மீதும் யானை மீதும் உள்ள மன்மதன் ரதி சிற்பங்கள் அரியவை. கார்த்தவீரியன் பரசுராமரிடம் போரிடும் சிற்பம் அதனினும் அரியது.




கோயிலுக்குள் திடீரென திரும்புகையில் குரங்கு உங்களைப்பார்த்து பல்லைக் காட்டினால் பயந்து விடாதீர்கள், அது சிலையாகத்தான் இருக்கும். கோவில் முழுதும் உள்ள சிற்பங்களில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன, ஆனால் நிறைய இடங்களில் குரங்குகள் தான் கூட்டமாக, தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. அது இந்த இடத்தின் இயற்கை எழிலைக்காட்டுகிறதா அல்லது (நிஜ) குரங்குகளை குழப்பும் உத்தியா என்று தெரியவில்லை.

கோவிலில் உள்ள சிற்பங்களைப் பேரளவில் வேட்டை அல்லது களவு என்னும் இரு வகைகளில் அடக்கி விடலாம். இளவரசியை தூக்கி செல்லும் வீரன், இளவரசனை கடத்தி செல்லும் குறத்தி, விலங்குகளை-பறவைகளை வேட்டையாடும் விலங்குகள், ஓரிடத்தில் புலியைக்குத்திக்கொல்லும் வீரன் கூட சிலையாக உள்ளான். அதுபோல பெருமாளைத்தவிர அனைத்து ஆண் சிற்பங்களும் அழகிய மீசையுள்ளவை. அந்தந்த மண்ணின் மக்களையும் சூழலையும் இச்சிற்பங்கள் பதிவுசெய்து வைத்திருக்கின்றன என்றே எண்ணத் தலைப்படுகிறேன்.     


வைகுந்தநாயகி, சோரநாத நாயகி என்ற இரு தாயார் தனிச்சந்நிதிகள். ஆண்டாளுக்கு உள்திருச்சுற்றில் சந்நிதி இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. வைகுண்ட நாயகி சன்னதிக்கு பக்கவாட்டில் உள்ள கல்மண்டபத்தில் நான்கு நாயக்க மன்னர்களின் சிலைகளுள்ளது.  சிற்பங்கள் ஓரளவுக்கு நிஜ முகசாடையை , உடலமைப்பை பிரதிபலிப்பவை. நான் அவர்களின் கால் அழகை வெகுநேரம் வியந்துகொண்டிருந்தேன், அவை நிஜக்கால்களாகவே தோன்றின.


கோவிலின் உச்சகட்ட சிற்ப அதிசயங்கள் திருவேங்கடமுடையான் மண்டபம் என்னும் நூறு கால் மண்டபத்திலுள்ளவை. முகப்பிலுள்ள நான்கு பெரிய சிலைகளை வீரபத்திரர், ராமன், இலக்குவன், வீரன் என்று பெயரிட்டுக்கொள்ளலாம். இவற்றில் ராமனுக்கும் இளையவனுக்கும் வித்தியாசம் குறைவு, உன்னிப்பாகப்பார்த்தால் இலக்குவனுக்கு மட்டும் காலணிகள் இருக்காது. இந்தச்சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை, பெருமாள் கோவிலுக்கு உள்ளேயே  சிவவடிவமாக உள்ள வீரபத்திரரும் அவருக்கு பக்கவாட்டில் உள்ள சட்டைநாதரும் இருப்பதை ஆச்சரியமான ஓர் சைவவைணவ ஒற்றுமை வெளிப்பாடெனக் கொள்ளவேண்டும். வீரபத்திரரின் இருபக்கமும் வாத்தியங்களிசைக்கும் பெண்ணும் ஆணும் உள்ளனர்.

பக்கவாட்டில் சீதையுடன் உள்ள இராமன் கூப்பிய கைகளுடன் உள்ள சுக்ரீவனை அணைத்தவாறு நெடிது நின்றவர். இவருக்கு வலப்புறம் விபீஷணர் உள்ளார். கீழே கைகூப்பித் தொழுபவர் வானரர். வில்லழகும் நிமிர்முகமும் வயிற்றின் மெல்லிய வரிகளும் கருணை விழிகளும் கண்டபின் கல்லல்ல இது கல்லல்ல என்றே மனமரற்றும்.

அடுத்த தூணில் உள்ள இலக்குவனிடம் பணிவாக கைப்பொத்தி நிற்கிறான் சுந்தரனான சொல்லின் செல்வன். வலப்புறம் அங்கதன், கீழே ஆயுதம் ஏந்திய வானரப்படைகள். அனுமனின் அழகு சொல்லற்கரியது.



அடுத்த தூணில் வாளும் ஊதுகொம்பும் கொண்டு போருக்கு புறப்படும் வீரன். காலுக்கடியில் நாகம் செதுக்கப்பட்டுள்ளது. அவனது கொண்டையழகும், கையணியும், வாளின் வளைவும், முழங்காலின் அணியும், வீரக்கழல்களும் கல்லில் செய்ததா களிமண் பிசைந்து செய்ததா என்று நம்மை விழியகற்றாது வியக்கச்செய்யும்.

இந்த நான்கு சிற்பங்களைத்தாண்டி முன்வரிசையில் அழகிய இரண்டங்குல சிற்பங்கள் பல பொலியப்பட்டுள்ளன. இக்கோவிலின் சிறப்பம்சங்களாக இத்தகு சிற்பங்களைக்கூறுவேன். வேட்டை விலங்கை தோளில் சுமந்திருக்கும் வீரனின் காலில் குத்திய முள்ளை எடுக்கும் பெண்ணின் சிற்பம் ஓர் கற்கவிதை, பனையோலைப்பெட்டிகளுடன் மாரில் குழந்தையை தூளிகட்டிக்கொண்டு, தோளிலுமோர் குழந்தையை சுமந்து, குழந்தைகள் சூழச்செல்லும் அன்னையரின் சிற்பம் இரண்டும் வித்தியாசமான அழகுடையவை.  அவற்றை படமெடுக்கும் என் கலையார்வம் கீழே பூத்திருந்த நெருஞ்சிக்கு தெரியவில்லை, காலை பதம் பார்த்து விட்டது, உள்ளே நன்றாக நடந்து போனவன் வெளியே வரும்போது நொண்டுகிறானே என்று பிச்சைக்காரத்தாத்தா ஒருவர் பரிதாபமாகப்பார்த்தார்.





மண்டபத்தின் உள்ளே வரிசையாக யாளித்தூண்கள் இருபுறமும் உள்ளன. சிங்க யாளியும் யானை யாளியும் நிரை நிற்க, மேல் விதானமெங்கும் நூற்றெட்டு திவ்ய தேசங்களின் கடவுளர் அருள்கின்றனர்.

சீறும் யாளிகளின் அழகு வினோதமானது, யானையை வேட்டையாடி உண்ணும் யாளிகள், கூர்த்த நகங்கள், தீப்பிழம்பு பறக்கும் விழிகள், நுணுக்கமான வேலைப்பாடமைந்த பிடரிமுடி, இம்மியளவும் சதை அதிகமின்றி கச்சிதமான வலிமையின், ஆக்ரோஷத்தின், வேட்டைத்தன்மையின் வெளிப்பாடுகள். அன்று முற்றும் யாளிகளைத்தான் சுற்றிச்சுற்றி வந்தேன். என்னளவில் கல்லாலான யாளிகளின் உலகமாக அந்த மண்டபம் மாறியிருந்தது.  யாளிகளைக் கண்டபின் வேறெதிலும் மனம் லயிக்கவில்லை, அவற்றின் மீதான என் காதல் பன்மடங்கு பெருகியிருந்தது. அதில் ஏதாவதொரு யாளி உயிரோடு வந்து என்னை உண்டிருந்தாலும் கவலைப்பட்டிருக்கமாட்டேன்.







 ஸ்ரீவைகுண்டம் கோவிலுக்குச்சென்ற அனுபவம்

- தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
27.04.2018

Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மந்தஹாசம்

மேலாளர் அழைத்தார் என்ன என்றேன், நான் இரு நாட்களாக  இங்கில்லை, லீவ்  என்றார், தெரியும் என்றேன் புன்னகையுடன். எனது கணினி ஏன் திறப்பில் உள்ளது என்றார், முகத்தில் புன்னகை இல்லை. உற்றுப்பார்த்தேன், ஆம். தகவல்திருட்டு மிகவும் மோசமான விஷயம், அதுவும் நம்பிக்கை மோசடி தர்மத்துக்கு மாறானது. ஆழ்ந்த அமைதி, அலுவலகத்தின் பெண்பாலினர் அனைவரும் கடவுச்சொல் அறிவர், என்செய. "சார் ஒருவேள" என்று துவங்கி, அவர் வயதொத்த மூத்த பெண்மணி ஒருவரது பெயரை உச்சரித்தேன், மனிதர் முகத்தில் பெருமிதம் கலந்த மந்தஹாசம்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா