Skip to main content

மீட்சி - சிறுகதை


மீட்சி
சொல்லித்தீராத ஆற்றின் கரையில் பாணன் நின்றிருந்தான். இருள் தெளிந்து இளங்காற்று எழுந்து இன்னும் நீரின் தலை வருடவில்லை. எங்கும் இனிய அந்தகாரம் நிறைந்து, பிறப்பிற்கு முந்தைய அமைதியை நிகழ்த்திக் கொண்டிருந்தது, ஒளியே இங்கு வந்து இந்த தவத்தை குலைத்துவிடாதே, கதிரே உன் நாள் ஒழுங்கையெல்லாம் இன்றேனும் விட்டொழி , உயிர்களை இந்த பிறப்பின்மையை கொஞ்சம் அனுபவிக்க விடு.  

பெருந்துயரையெல்லாம் அழுகையால் ஓய்த்தபின் மனம் கொள்ளும் நிறைந்த வெறுமை ஆற்றில். செவிகூர்ந்தால் ஓசை கேட்கும், சிந்தை கூர்ந்தால் அது  இசை எனத்தெளியும். எப்போதும் ஓடும் நதி, இரவை ஆலாபனை செய்கிறது. அவன் அந்த தீராத இசையை ன் ஒட்டுமொத்த உடலாலும் பருகினான், போதாது போகவே தன் மனத்தால் பருகத்துவங்கினான், உடன் அக்கார்நதியும் அவனுள்ளிருந்த இசையைப்  பருகத் துவங்கியது.

அவனில் எழுந்த ஒலி மொழியற்றிருந்தது, பாணர் வாழ்வு போலே அலைவுற்றிருந்தது. மணற்கடிகைக்குள் இசையை நிரப்புவதில் பாணன் ஒவ்வாமை கொண்டிருந்தான். தன்னுள் பொங்கிய இசைக்கு வடிவத்தை உருவகிக்கவில்லை பாணன், புல்தலைத்துளி என அரும்பி தன்னொத்த துளிகளுடன் ஒழுகி, சிறு தாரைகள் பின்னிப்பின்னி கீழிறங்கி, செல்லிடம் கண்டு ஓடையாகி உயர வீழ்ந்து, நாடேகி நதியென நடந்து கடந்து கடந்து மீண்டும் முதல்துளிக்குள் கரைந்துவிடும் தவம் என அது நிகழ்ந்து கொண்டிருந்தது. வடிவமற்ற அந்த இசையால் கையாழின் நரம்புகள் விம்மியழுவதை அவன் கண்திறவாக் குருளை போல் செவிசாய்த்து  நகைமொக்குடன் கேட்டுக்கொண்டிருந்தான்,
பாணனுக்கு தன்னில் தான் மகிழ்ந்திருக்கும் பித்து இருந்தது, பெருவெளியின் இசையை யாழ்வழி முகர்ந்து பருகிக்கொண்டிருந்தான். வேறு எதுவும் பொருட்டல்ல என்றாகிய பின் மனதின் கனவுநிலை மீதூறி பாவனையிலும் வழிந்தது. மீண்டும் மீண்டும் அவன் அவனையே கண்டான் அங்கு வேறு யாருமே இல்லை. அந்தத்தனிமையின் துயர் மெல்ல மெல்ல அவனுக்கு ஒரு தேடலை உண்டாக்கியது, அந்த உணர்வு அவன் உடல் மனம் இசை அனைத்தையும் ஆட்கொண்டிருந்தது. அவன் உயிர் காற்றில் அகல்சுடர்போல அலைக்கழிக்கப்பட்டது, அரும்பொருள் ஒன்றைத் தொலைத்துவிட்டு தேடுபவன் போன்றவனைக்   காண்பாரும்  பித்தன் என்றே எண்ணத் தலைப்பட்டனர். வீதிகள் தோறும் உழலும் அவன் கால்கள் பெருமாளிகை வாயில்களில் நிற்பதில்லை.  அவனில் எழும் பேரருள் இசையை அவன் குடியிலும் சிலர் மட்டுமே உணர்ந்திருந்தனர். 
நதியின் அக்கரையில் அறிதுயிலுற்றிருந்தது ஆதி. அவனைக் காண ஆசை இருந்தது பித்தனுக்கு, அவனும் பாணனை விரும்புவான் என உவகை பொங்க எண்ணிக்கொண்டான். இந்த இசை முற்றும் அவனுக்கானது, நான் கொள்ளும் ஆனந்தத்தை அவனுக்கும் அளிப்பேன் என்றவாறே அடிவைத்தான் பித்தன். அவ்வுணர்வில் மேலும் மேலும் புதுவெள்ளமாய் இசை பெருகியது, திக்கனைத்தும் நெகிழ்ந்து விண்மீன் திசைமயக்குற்றது. கற்றதும் கேட்டதும் உணர்ந்ததும் அன்றி எங்கோ வைத்தமாநிதியென ஊற்று பொங்கியது, அலைகள் விண்ணோக்கி உயர்ந்தன, அவ்விசையோடு மீண்டும் நிலத்தை துளைத்து உட்புகுந்து அங்கிருந்த நெருப்பின் ஆற்றை கண்டுகொண்டது, தண்மையும் வெம்மையும் ஒன்றை ஒன்று விழுங்கி உமிழ்ந்தது, ஒளியிருளாய் இணைநாகமென பிணைந்து உயர்ந்தெழுந்த நீர்த்தம்பம், பெருவிசையோடு அங்கிருந்த அனைத்தையும் உண்ண எரிவாய் பிளந்து, நிலம் அறைந்தது. பாணனும் அப்பெருக்கில் உட்புகுந்தான்.   
--------------------------------
படுத்து வெகுநேரமாகியும் உறங்க முடியாமல் தவித்தார் சாரமுனி. அரங்கநகர் ஆலயத் திருப்பணிகளில் தன்னை செலுத்திக்கொண்டபின் இரவு உறக்கம் பிந்தியதில்லை அவருக்கு. தத்துவத் தேடல் போல மனச்சோர்வும் பாரமும் தருவதல்ல, மெய்யால் செய்யும் பணி. அது உடலை திரட்டி அதன்வழி எண்ணங்களை குவித்து கூராக்கி பின் அவை எல்லாவற்றையும் தன்னிச்சையாக நிகழும் ஒன்றாக்கி விடுகிறது, உடலால் ஆற்றும் பணி உற்சாகம் தந்தது. முன்பு தானமைத்த நந்தவனப் பூக்களை பார்க்கையில் வரும் அதே உற்சாகம். அன்றோர் நாள் காவிரியைக்கடந்து இந்நகர் நுழைந்த போது மனதில் இருந்த சஞ்சலத்தை எல்லாம் கரைத்து விட்ட அந்த உற்சாகத்தை இன்று செல்லிடம் காணோம். கண்ணை மூடினால் அவன் முகம் தான் நினைவுக்கு வருகிறது, எங்கோ பார்த்த முகம், உறையூரில் முன்பு பார்த்திருக்கிறேனா தெரியவில்லை. இவ்வளவு நாளும் தன்அகத்தில் எங்கோ புதைந்திருந்த முகம். மாலை கோவிலிலிருந்து திரும்புமுன் கோவில் காவல் தலைவனிடம் விசாரிக்கையில், அவன் குடியினர் வந்து தண்டம் சமர்ப்பித்து அழைத்துச் சென்றதாகக் கூறினார். முனிவருக்கு மீண்டும் நினைவில் தோன்றியது அந்தத்துயர் ததும்பிய, பரிதவிப்பும், தேடலும் வழிந்த பித்தனின் முகம். அத்தனை பிரம்படியிலும் அவன் கையாழை தாயின் காலை கெட்டியாகப்பிடித்துக் கொள்ளும் குழவிபோல பிடித்துக்கிடந்தானே.
அன்று காலை காவிரியாற்றில் கிரியைகளை முடித்து, அரங்கனுக்கு பொற்குடத்து நீர் தோள்சுமந்து வருகையில் வழியில் அவன் நின்றுகொண்டிருந்தான். விலகுமாறு அவர் முன்னே வந்துகொண்டிருந்த தண்டேந்திய கோவில் காவலன் பலமுறை கூவியும் அவன் விலகவில்லை. பின்னிருந்து அவன் கையில் என்ன வைத்திருந்தான் என்று காண முடியவில்லை, கண்களை மூடி இருந்தனவா என்ன, தலையை நிமிர்த்தி மேலே பார்த்துக்கொண்டிருந்தது போலத்தான் நினைவு. அவனை விலக்கும் பொருட்டு அவனைப் பிடித்துத் தள்ளினான் காவலன். தீக்கனவு கண்டு எழுந்ததுபோல் பதறிய அந்தப்பித்தன் சூழலை முழுதும் உணராமல் இடறி கீழே விழுந்தான், அவன் கையிலிருந்த யாழ்நுனி பொற்கலத்தில் பட்டு ஒலி எழுப்பியது, நீர்க்குடம் கீழே விழுந்துவிட்டது, பெரிய பிழை நேர்ந்ததே என முனிவர் துடித்துவிட்டார். இதுவரை இப்படிநேர்ந்ததே இல்லையே, திகைத்த மனம் மீண்டு வருகையில், தண்டக்காரர்கள் அவனை அடித்துக்கொண்டிருக்கக் கண்டார், அவன் கண்களை இறுக்க மூடியபடி தன் யாழை நெஞ்சோடு சேர்த்து அணைத்திருந்தான், அடிகளைத் தாளாது  அவன் உடல் துடித்துக்கொண்டிருந்தது. ஐயோ, இத்தனை  குருதியிருக்கிறதே உடையில். ஆம், கற்தரையில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டிருக்கிறது, அரையாடை முழுக்க சிவந்து விட்டது. முனிவர் அவர்களைத்தடுத்து, பாணனை ஓரமாகக் கிடத்தச்சொன்னார், அவனை ஆதூர சாலைக்கு அழைத்துச்செல்லப் பணித்தார், கோபம் கொண்டிருந்த காவலர் அதை நிறைவேற்றுவாரா என்னும் ஐயத்தோடு மீண்டும் ஆறு நோக்கி விரைவாக நடந்தார், காலை வழிபாட்டுக்கான நேரம் கடந்துகொண்டிருந்தது.
----------------
தலைநகர் உறையூரில், பத்தினிக் கோட்டத்தில் செம்பியன் கருநிலவு நாளில் வழிபடுகையில், மூதாய் மேல் எழுந்த பழந்தெய்வம், பேயாடி, சன்னதம் கொண்டு, தன் முலை தொட்டு, இன்னும் ஓர் பதி அழிக்கவோ, மண்மாரி பொழியக்காண் வேந்தே  நீயும் என்றது. அக்கொடு விழிகளை கனவிலும் காணாத வேந்தன் நடுக்குற்று அங்கேயே வீழ்ந்தான். அவ்விழிகளில் நெடுங்காலமாய் தழலாடிக்கொண்டிருந்தது அறப்பிழைக்கான கூற்று. மயிர்க்கால் இடைவெளியின்றி மணலைக்கொட்டியது போல உடல்முற்றும் அம்மை பரவியது சோழனுக்கு. அவன் நோய் நீங்கி, தன்னிலை மீள நெடு நாளாகும் என்றனர் மருத்துவர்.
அவைக்குழு அறவோருடன் ஆய்ந்த பின், அமைச்சர் தவக்குடில் சென்று, சாரமா முனிவரைத் தொழுது அவர் நந்தவனத்தை வணிக வீதிக்கென வளவன் கைக்கொண்ட பிழை பொறுக்குமாறு வேண்டினார். கோட்டத்தில் பிழையீட்டு நோன்பிருக்கும் அரசி, முனிவரின் மலர் வனத்தை மீண்டும் செம்மை செய்து தர உத்தாரமிட்டதையும் கூறினார்.
துறவு பூண்டு பலஆண்டுகள் தவமும், மலர்த்தொண்டும் செய்துவந்த முனிவர். தன் வனம் அழிவது கண்டு துயருற்று இறைவனிடம் முறையிட்டது ஏன் என வியந்தார். தன்பொருட்டு இறையெழுந்தது அறிந்த சாரமா முனிவர் மனம் வருந்தினார். அன்றே உறந்தை நகர் நீங்கினார், வெறுப்பின் துளி தன்னுள் எஞ்சியிருந்ததை, அது தன் தவமனைத்தையும் எரிக்க வல்லது என உணர்ந்தபின் வெறுமையுற்றார். என் தொண்டின் மேல் நான் அத்தனைப் பற்றுக்கொண்டேனா, அதன்பொருட்டு பிறரை வருத்துவதா தவம், அன்பிலா நெஞ்சுடைத் துறவு யார் மாட்டு. என்றெல்லாம் விசாரப்பட்டுக்கொண்டே காவிரியைக்கடந்தார்.
அரங்கநகர் கடிபொழில்களின் பூந்தாதுகள் அவரை வரவேற்றன. திருவரங்கத்தில் ஏற்கனவே மலர்த்தொண்டு செய்துவந்த விப்ரன் எனும் முது அடியார் முனிவரை அரங்கன் சேவையில் ஆற்றுப்படுத்தினார். அரங்கனுக்கு தினமும் மஞ்சன நீர் சுமக்கும் திருப்பணியை உவந்து செய்துவந்தார் முனிவர், லோக சாரங்கர் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றார். முன்னும் பின்னும் ஊசலாடிக்கொண்டிருந்த நினைவுகள் அவரை எங்கோ ஆழத்தில் அழுத்திக்கொண்டிருக்க, இமைகள் திரையென சரிந்தன.

விண்முட்டும் கரிய மகேந்திரமலையின் கரையில் இருந்தது அந்த விண்ணகரக்கோவில். இடந்த கேழல் வளையெயிற்றில் ஓர் ஞாழல் எனக்கிடந்த மண்மகளையும் கேள்வனையும் துதிக்க ஆதியில் அமைந்த கோவிலது. மேதினி தான் விருப்புற்று அமர்ந்த வனாந்தரம். விண்ணளந்த அப்பனை அம்மை துரத்தி விளையாட, மணிக்குறளனாகக் குறுகி அவள் மடியிலேயே ஒளிந்துகொண்டான் கள்வன். தீங்குறளனைத் தன் மேனிபுளகமுற முற்றனைத்து மகிழ்ந்தாள் அன்னை, அந்த அருட்கணத்தால் குறுங்குடி எனப் பெயருற்றது இவ்விடம்.
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய ஒலிகள் அவ்வெளி முற்றும் ஒளிபூச நின்றது. நீரும் காற்றும் புள்ளும் குழலும் அவ்வோசையை பிரதிபலித்தன. தென்குமரி நாடனிடம் பாடிப் பறைகொள்ளச் சென்ற பாணர் ஒருவர் அந்நிலத்தே கண்ணுற்ற இசை அவர் அறிந்திருந்த பண்களுடன் ஒத்திராதது என ஓர்ந்தார். அங்கேயே குடியமைத்து அப்பண்ணை சமைத்து கைசிகம் எனும் பெயரிட்டு, ஊழியில் பிள்ளையாய் ஆலிலை மிதந்தவனுக்கு அடிசிலாக்கினார். அவர்வழி வந்த பாணர் குறுங்குடி அழகனுக்கு நாள்தோறும் பண்ணிசைத்து துயிலச்செய்தனர்.
நம்பாடுவான் எனும் பாணன் தன நாள்க்கடன் செய்ய, இருளைத்தன் தலைசூடி இலைகளாக்கிய அடர்வனத்து வழியொழுகினான். சுரு நாற்றமொடு உடலெல்லாம் நிமொழுக புழுக்கள் நெளியும் வாயுடன் அருவுருவொன்று அவன் வழிமறித்தது. கள்வரோ எனப் பயந்துபோன பாணன், அஞ்சி கைப்பொருள் ஏதுமில்லை வறிய பாணன் நான் என்று இந்தளப்பண் சாகையில் கதறலுற்றான். பிலாக்கணத்தை பாடலென்று எண்ணிய முட்டாள் பூதம் உள்ளங்கையை தாடைக்கு அணைகொடுத்து உட்கார்ந்தது. நெருப்புமிழும் கண்களை நிமிர்ந்து நோக்கிய பாணன் யார்நீ என்றான், அந்தக்கேள்வியால் திடுக்கிட்ட பூதத்துக்குள்ளிருந்து வேறோர் குரல் எழுந்தது, நெறிபிழைத்த வேதியன் நான், பிழையீடாக இவ்வரக்க உருவில் உழல்கிறேன், என்பசி தீர்க்க எதையும் உண்ணத்தக்கவனாவேன். இன்று நீ என் உணவாவாய் என்றது. ஓர் பூதம் இன்னொன்றை உண்ணுமா என்றான் பாணன், இல்லை என பதில் வந்தது. அவ்வாறாயின் நான் எனது நெறிப்படி பண்ணிசைத்து வந்தபின் என்னைப்புசி என்றான் பாணன்.
கோவிலில் நின்று பண்ணிசைத்து உருகிக் கரைந்தான்  நம்பாடுவான். அழகனோ நீ பூதத்தை விடுத்து வேறுவழிச்செல் என்றான், பாணன் ஒப்பவில்லை. நெறியென்றும் சொல்லென்றும் நீ நம்புவது எதையோ அதைவிட்டு, என்னை நம்பு என்றான் தேவன். எவ்வாறாயினும் சொல்பிரள ஒப்பேன் என்றான் மனிதன். எப்போது வருவான் என்று காத்திருந்தது பூதம். மூவரையும் ஒன்றாக்கிய பரம் மேலுமொரு களம் வரைந்திருந்தது.
நீ செல்வதால் உனக்குக்கிடைப்பது புகழ் என்றான் மால். அது உனக்கேயாகட்டும் என்றான் பாணன். அதன்வழி நீ அடைவது பெருந்துயர். அது உனக்கே ஆகட்டும் என மறுத்துரைத்தான். அந்த பூதத்தின் விதியோடு நீ செய்யவிரும்பும் சமன் உன்னை அதுபோலே பித்தனாக்கி வருத்தும். இன்னோர் பிறப்பிலும், அவன் அடைவதை உனக்குத் திருப்பிக் கொடுக்காமல் நீ என்னைக் காணவும் முடியாது என்று உரத்துச் சொன்னான் கரியன். கண்ணில் நீர்பெருக, அது உனக்கே ஆகட்டும் என்று முடித்தான் பாணன். 
காலில்லாமல் ஓரிடத்தில் மிதந்து கொண்டிருந்த அருவுருவிடம் மீண்டான். பாணன் முகம் முன்பில்லாத தேவகளை கொண்டிருந்தது, பூதத்தை யோசிக்கச்செய்தது. நீ யார், உன் கையில் உள்ள கருவி யாது எனக் கூகையின் குரலில் கேட்டது பூதம். நான் வெறும் பாணன், ஆனால் இந்த பேரியாழ் மிகவும் உயர்ந்தது, உலகத்தின் துயரையெல்லாம் ஆக்கவும் அழிக்கவும் வல்லது. அது எவ்வாறு என்று அகவியது பூதம். சொல்லில் பெறமுடியாத ஞானத்தை எல்லாம், பேசாமொழி கொண்டு இருவிரல் சுட்டி ஓராப்பொருளை எல்லாம், தன்கை யாழ் இசையால் அருள்கிறான் தென்திசைப்பரமன். இமைப்பொழுதும் ஒய்வின்றிப் படைப்பவனின் தொழில் காக்க சகலகலாவல்லி ஊட்டும் மூவாத முலைப்பால் யாழ் இசை, உடல்மெலிந்த என்னை உண்ணும்முன் இந்தப் பேரிசையை சற்றே பருகு என யாழிசைத்தான் பாணன், முதலில் பூதத்தின் செவியில் அது புகவே இல்லை, மெல்ல அது அவ்வொலியை உணர்கையில் தாங்கவொண்ணா வேதனை உண்டாயிற்று, நிறுத்து நிறுத்து அதை என உறுமியது, நச்சை  உமிழ்ந்தது. நெருப்பு நா சுழல பல்லாயிரம் விழிபெருக்கி கொல்லுகிர் கொண்டு அவனைச்சூழ்ந்தது, பாணன் அவற்றில் அகப்படாது சுரங்களில் தாவித்தாவி சென்று கொண்டிருந்தான். கைகளால் தன் புடைத்த தலையை பற்றிக்கொண்டு கதறத்துவங்கியது, பெருங்கரத்தால் அங்கிருந்த ஆலமரத்தை வேரோடு பிழிது வீசியது, நிலமதிர அறைந்தது. காற்றில் இறகென வானில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான் பாணன், பூதம் விம்மி விம்மி அழுதது, பெரிய ஓலத்துடன் மண்வீழ்ந்தது. பாணன் கசிந்தகண் விழிக்கையில் அந்த மாயப்புகை கரைந்து பொன்னுடல் கொண்ட ஒருவன் கூப்பிய கைகளுடன் வெளியே வந்தான், அவனைக்கண்ட கணம் பாணன், ஆழ்ந்த அமைதியோடு பெரும் வள்ளல்களுக்குரிய விழிகளுடன் கையாழ் பற்றி அங்குதோன்றிய பெரும்சுழலில் தன் காலெடுத்து வைத்தான். பேயுரு ஒழிந்து தன்னுரு மீண்ட முகத்தைக் கூர்ந்து நோக்கிய முனிவர் அங்கு தன்முகம் இருப்பதை அதிர நோக்கினார். மீண்டும் பாணனைப் பார்த்தார், அங்கு காலையில் கண்ட பித்தன் சிவந்த அரையாடையுடன் நிற்க, அந்த முகம் ஐயோ அது தினமும் தான் காணும் அரங்கனின் முகம். 
------------
பதறி எழுந்த முனிவருக்கு பிறகு உறக்கம் வரவில்லை, எண்ண ஓட்டங்கள் பொங்கிப் பெருகிக்கொண்டிருந்தது. யாரவன் பித்தன் மீண்டும் எப்படி அவனை அணுகுவது என்று சிந்தித்தார், நம் குரல்தீண்டாது அகம் குவித்து எதைப் பார்த்துக் கொண்டிருந்தான், காவலர் அடிக்கையில் அவன் உதடுகள் மீண்டும் மீண்டும் துடித்த சொல், அது அது ஆம் நீள்மதில். அதைத்தான் நிமிர்ந்து பார்த்தான் அவன், அது உயர்ந்ததா எதைவிடவும் பெரியது, எதனால் அவன் சிறியவன்.
காவிரி தன் கொழுநனை மீண்டும் முற்றத்தழுவ விடாது பேதைமாந்தர் கட்டிய நீள்மதில், ஏழு சுற்றுக்கொண்டு அந்நகரை காக்கும் கல்லரவு, அரங்கன் எம் அரும்பொருள் என உலகுரைத்து  இறுமாந்து அடியவர் எழுப்பிய நீள்மதில், அது பக்தியின் ஆணவம். எதைக்காக்க முடியும் மதில்களால், எதைத்தடுக்கும் இவை ? யாரைத் தடுக்கும் ? பாணனின் பக்தியை, கொடையை தடுக்க வல்லவையா அரங்கத்தின் மதில்கள், செய்வதறியாது உளம்சோர்ந்தார் முனிவர்.

அன்று முதற்புள் சிலம்ப, நீராடி மஞ்சனநீர் கொணர கலத்துடன் நதி சென்றார் சாரமுனி. நதிநீங்கி மேலெழுந்தான் பாணன், அவனெதிரே நீள்மதில்கள் நின்றிருந்தன. நீர்சொட்ட கரைநின்று கைகுவித்தான் பாணன். அவனது கண்களின் தேடல் தீவிரமாகியிருந்தது, சூரைக்காற்றில் சிக்கிய கந்தல்போலிருந்தது அவனுயிர். முனிவர் கையசைக்க, சிவிகை வந்தது, அதில் பாணனை ஏற்றித் தன் ஆடையையும் அவன்மீது போர்த்தினார் லோக சாரங்கர். பொற்கலநீரையும் சிவிகையிலேற்றி, ஏவலரின் பரிவட்டத்தைத் தான்கட்டிக்கொண்டார் முனிவர். பல்லக்கு சுமந்தார், நீள்மதில் கடந்தார், உலகை, உறவை, உயிரை, மனதை, அறிவை, அகத்தை, துறவை என ஏழ்பெருமதில்களைக் கடந்தார். கலத்தை இறக்கி துவராடை பாணனோடு கருவறை புகுந்தார்,
பாணனின் உடல் தந்தியென அதிர்ந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் திறந்தன, அரங்கனின் திருவடிமுதல் திருமுடிவரை கண்ணாரக் கண்டான். அத்தனைக் காலமும் அவன் தேடிக்கொண்டிருந்த ஒன்று அங்கிருந்தது, அவ்வுரு விழியில் புகுகையில்தான்    அதைக் கண்டுகொண்டான், கண்டடைந்ததை அறிந்த கணம் முதல் மேனியின் மயிர்க்கால் தோறும் பண் கசிந்தது. தன்னுள் இருந்த ஆயிரம் சுரங்களின் வடிவாகக் கண்டான் அதை. அறிந்திருந்த லயமெல்லாம் அக்கரும்பாதங்களில் அதிர்ந்திருந்ததைக்கண்டான், தான் முற்றும் அறிந்திராத, அகவெளிப் பிரபஞ்சத்தை கருவறையில் கண்டான். வடிவிலாத நீர்மையை, உருவிலாத ஒலியை, அலகிலாத வெளியை, கண்ணுள் கண்டான். உள்ளும் புறமும் ஒன்றான நிலையை பாணன் எய்தினான். பாணன் தன் யாழை றையிலிருந்து எடுத்தான், யாழின் நரம்புகள் தீண்டப்பட்டன, எங்கும் அழியாத நாதம் நிறைந்தது. பிரம்மம் பாணனுக்கு நாதமயமானது, அது முனிவரையும் பூதத்தையும் தெய்வத்தையும் கட்டறுத்து மீளச்செய்வது. ஓயாத சுழலில் பிறந்திறக்கும் அனைத்துயிரின் துயர் செறிந்தது. அதோ அங்கு கைகூப்பி வீழ்ந்துகிடக்கும் முனிவர் முக்திபெற்றுவிட்டார், யாழ் அரங்கனின் காலடியிலிருக்கிறது. பாணனை எங்கும் காணோம், அங்கெழும் இசையை முரலும் வண்டொன்று காலவெள்ளத்தால் சுழன்றுகொண்டிருக்கும் அறிதுயிலன் கரிய உந்திச்சுழியில் உட்புகுகிறது. இப்போது மீண்டும் இனிய அந்தகாரம் எங்கும் நிறைகிறது. 


                        

Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மந்தஹாசம்

மேலாளர் அழைத்தார் என்ன என்றேன், நான் இரு நாட்களாக  இங்கில்லை, லீவ்  என்றார், தெரியும் என்றேன் புன்னகையுடன். எனது கணினி ஏன் திறப்பில் உள்ளது என்றார், முகத்தில் புன்னகை இல்லை. உற்றுப்பார்த்தேன், ஆம். தகவல்திருட்டு மிகவும் மோசமான விஷயம், அதுவும் நம்பிக்கை மோசடி தர்மத்துக்கு மாறானது. ஆழ்ந்த அமைதி, அலுவலகத்தின் பெண்பாலினர் அனைவரும் கடவுச்சொல் அறிவர், என்செய. "சார் ஒருவேள" என்று துவங்கி, அவர் வயதொத்த மூத்த பெண்மணி ஒருவரது பெயரை உச்சரித்தேன், மனிதர் முகத்தில் பெருமிதம் கலந்த மந்தஹாசம்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா