Skip to main content

யானைக் காதல்


களிறு, கைமா, வேழம், எனப் பலசொற்கள் உண்டு தமிழில் யானையைக் குறிக்க, அவ்வகையில் கடலையும் யானையையும் மட்டும் தமிழ்மொழி அதிகம் நேசித்த காரணம் பரம ரகசியமாகவே இருக்கிறது. நானும் ஒரு யானையைப் பார்க்க மதுரை வரை சென்றிருந்தேன். ஆலவாயின் வடக்கே, காலத்தை தன் காலடியில் இட்டு அதன்மேல் அசையாது படுத்திருக்கிறது ஒரு கல்யானை, நால்வாய் மேலே நீள்துதிக்கை கிடத்தி தூங்காநகரைக் கண்கொட்டாமல் பார்க்கும் அதற்கு, ஈராயிரம் ஆண்டுகளாகவும் யானைமலை என்றே பெயர்.  பசுமைநடை அமைப்பின் நூற்றியோராவது நடை அங்குதான் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நிகழ்வை அறிந்து அதில் பங்கேற்பது உறுதியானதும்,  முதல்முறை நிஜயானையின் மீது ஏற்றிவிடப்பட்டபோது குத்திய அதன் கனத்த முடிகளையும், அதற்காக அழுததையும் நினைத்துக்கொண்டேன்.


யானைமலையில் வரலாற்றுச் சான்றாக  மூன்று இடங்கள் உள்ளன, காலத்தால் முந்திய, மலையின் மேல் பகுதியில்  உள்ள தமிழிக்கல்வெட்டு உடன் சமணப்படுக்கைகள். அடுத்து மலையின் பக்கவாட்டில், தீர்த்தங்கரர்கள் உருவங்கள் செதுக்கப்பட்ட குகை, கல்வெட்டுகள்.  அறுதியாக ஏறத்தாழ அடிவாரத்தில், குடைவரையாக விளங்கி இப்போது தனிக்கோவிலாக நீட்டிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ள யோக நரசிம்மர் ஆலயம் மற்றும் முருகனுக்காக தனிக்குடைவரையாக உள்ள லாடன் கோவில், நரசிம்மர் குடைவரையும் லாடன் கோவில் குடைவரையும் அருகருகே அமைந்தவை. கிட்டத்தட்ட இத்தொல்லிடங்களின் காலவரிசையும் இவ்வாறே எனலாம்.

நடை இந்திய நேரப்படி ஆறுமணிக்கு துவங்குவதாக இருந்து, அதே இந்திய வழக்கப்படி ஆறு நாற்பதுக்கு மேல் துவங்கப்பட்டது. இலக்கியக்கூட்டங்களுக்கு இது பரவாயில்லை என நினைத்துக்கொண்டேன். அரசியல் கூட்டங்களுக்கு இலக்கியக்கூட்டங்கள் தேவலாம் என்று இதேகணத்தில் யாரேனும் நினைத்துக் கொள்ளக்கூடும். இடைப்பட்ட நேரத்தில் காய்கதிர்ச்செல்வன் யானைமலைக்குப்பின் மெல்ல எழுந்துகொண்டிருந்தான், தனக்கான நாள்தான் இது என்ற பொறுப்பு கொஞ்சமும் இன்றி அவனும் சோம்பலோடு நெட்டி முறித்தாற்போல் இருந்தது.

 நான் சென்றுசேர்ந்த ஆறு பதினைந்துக்கே மக்கள் சிலர் கூடியிருந்தனர். முகநூல் நண்பர்களான நடையின் ஒருங்கிணைப்பாளர் ரகுநாத்திடமும் திருவிழாக்களின் நகரம் புத்தகத்தின்  ஆசிரியர் சித்திரவீதிக்காரனிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன், எழுத்தாளர் முகநூலில் பார்த்திருக்கிறேன் என்கிறார்.  முகநூல் என்பதன் பொருள் யாதெனின் முகங்களை மட்டும் பதியச்செய்யும், அதே ஆள் நம்மை கடந்துபோகையில் அறியமாட்டோம், மனிதர்களை அவர்கள் உடலமைப்பு குரல், அசைவுகள் மூலமாகத்தான் முழுதும் நினைவில் பதிவுசெய்துகொள்ள முடியும், அப்படித்தான் நமது மூளை  பல்லாயிரம் ஆண்டுகளாகப் பழகி வந்திருக்கிறது. வடிவமில்லாத ஒன்றை எளிதில் நினைவில்கூற முடியாது. அதனால்தான் சிறுவர்களுக்கு காமிக்ஸ் பிடிக்கிறது நாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளுக்கிணையாக கார்ட்டூன்களை நாடுகிறோம், உருவ வழிபாடும் அதனால் தான் நிலைபெற்றிருக்கிறது.

மக்கள் குடும்பம் குடும்பமாக திரள் சேர்ந்துகொண்டிருந்தனர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் சாந்தலிங்கம் முதலிய தொல்லியல் அறிஞர்கள், பேராசிரியர்கள் வந்துகொண்டேயிருந்தனர். குழந்தைகள் கூடி விளையாட ஆரம்பித்தனர், இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அமர்ந்து சிறு குழுக்களாக உரத்து கதையாடிக்கொண்டிருந்தனர். உற்சாகம் விளிம்பு கட்டி நின்றிருந்தது. நான் மகிழ்ச்சியோடு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரகுநாத்திடம் பார்ட்னர் வரலையா என்று யாரோ கேட்டுக்கொண்டிருந்தார்கள், மனிதரின் முகத்தை கூர்ந்து பார்த்தேன்.  வெட்கத்தின் சாயல்... அப்படி ஏதும் இல்லை அதே மலர்வும், சிரிப்பும் தான். உணவும் வந்து சேர்ந்தபின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் முன்னேற்பாடுகளுக்காக தளத்திற்கு விரைந்தனர், சற்று நேரத்தில் அனைவரும் தத்தம் வாகனங்களில் கிளம்பினர், வாகன வசதியற்றோருக்கு முத்துகிருஷ்ணன் உதவினார், குழந்தைகள் பெண்களை கார்களில் அனுப்பிவைக்க, இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஏனையோரை அழைத்துச்சென்றனர். என்னை ரிஷி என்னும் நண்பர் அழைத்துச்சென்றார், ரிஷி  உயரமான யுவன் ,மதுரையர், அமெரிக்கன் கல்லூரியில் படிக்கிறார்.

 மலை உச்சிக்குச்செல்லும் திட்டம் அன்று இல்லாததால் தீர்த்தங்கரர்களின் உருவம் பொலிந்த குகையில் நிகழ்வின் துவக்கமும், அதன் தொடர்ச்சியான உரைகள் லாடன் கோவில் முகப்பிலும் நிகழ நிரல் செய்யப்பட்டிருந்தன. துவங்குமிடத்திற்கு சற்று முன்சென்றோம். குகையின் மறுபுறத்தில் ஒரே ஒரு தீர்த்தங்கரர் இருக்கிறார் அண்ணாந்து பார்க்குமாறு, எந்தத் தொந்தரவும் இல்லாது, அறிதலின் புன்னகையோடு பரந்த கூடலின் அழகை ஆயிரம் ஆண்டுகளாக கண்மூடிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். பாறையில் மகாவீரரின் புடைப்புச்சிற்பம்,  சுதைப்பூச்சும் வண்ணமும் தீர்த்தங்கரர் மேனியில் சிறிதே எஞ்சி நிற்கிறது. முழுத்தோற்றமும் காண நான் வேலியேறிக் குதித்தபோது அப்பிடியே எடுத்த போட்டோவை எனக்கும் குடுங்க பாஸ் என்ற குரல் வந்தது, அவர் சுதர்சன் பாஸ்கர், முகநூலில் பார்த்ததற்கு கொஞ்சம் கனம் கூடியிருந்தார்,. இல்வாழ்வின் பூரிப்பு.



நலம் விசாரிப்புகளுக்குப்பின் குகையின் முன்புறமுள்ள எட்டு தீர்த்தங்கரர்கள் மற்றும் இயக்கியரின் முன் அமர்ந்தோம், குகை உள்ளும் புறமுமாக மனிதர்களின் உற்சாகத்தாலும் பிள்ளைகளின் சிரிப்பாலும் நிறைந்தது. முத்துக்கிருஷ்ணன் சுருக்கமாக இந்த அமைப்பு நடத்திய முதல் கூடலின் நினைவலைகளை பகிர்ந்தார். பத்தாண்டுகளுக்கு மேலே, நூறு நடைகளாக தொடர்ந்து இணைந்திருக்கும் நண்பர்களையும் தொல்லியல் அறிஞர்களையும் நினைவு கூர்ந்தார். அடுத்து திரு சாந்தலிங்கம் அய்யா பேச வந்தார், மதுரையும் சமணமும் என்ற நூலின் மூலம் நாம் அனைவரும் அவரை அறிவோம். வயதுக்கு மீறிய மிடுக்கு. குரல் உயர்த்தாமல் இவ்வளவு தெளிவாக பேசுபவர் அரிது. அமைப்பை வாழ்த்தியபின் யானைமலையின் சிறப்பைப்பற்றி சொன்னார், முதல் இரு நூற்றாண்டு காலம் சார்ந்த தமிழ்பிராமி இருவரிக்கல்வெட்டு பற்றி துவங்கியவர், தொல்காப்பிய விதிகளின் படி மெய்யெழுத்தில் புள்ளி வைக்கப்பட்டு வெட்டப்பட்ட மூத்த கல்வெட்டாக இதுவே உள்ளது என்றார். கல்வெட்டில் *இவகுன்றம்* என்னும் பிராகிருத அல்லது சமஸ்கிருதப்பெயரால் இவ்விடம் சுட்டப்படுவதை கூறியவர் அதன்பொருள் யானைமலை என விளக்கினார். மதுரையைச் சுற்றிமட்டும் மாங்குளம் முதலிய இத்தனை  இடங்களில் பழந்தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்திருப்பதைப் பற்றி சொல்லி, தன்னளவில் தமிழ் பிறந்தது பொதிகைமலையில் அன்று மதுரையில்தான் என்றார். கடந்த சில ஆண்டுகளில் ஏனாதி முதலிய இடங்களில் அதிகக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டிருப்பதை சொன்னதோடு, மிழலைக்கூற்றம் போன்ற  தென்பாண்டி நாட்டிலுள்ள கல்விக்கூடங்களில் படித்தவர்கள் அரசியல் தலைமையிடமான மதுரையில் அமைச்சர்களாக, தளபதிகளாக பணிபுரிந்ததை ஆனைமலை கல்வெட்டு சொல்கிறது என்று தொடர்புறுத்திச் சொன்னார். சமணம் எவ்வாறு சைவத்தால் ஒடுக்கப்பட்டு பின் சமணத்துறவி அச்சணந்தி காலத்தில் மீட்டெடுக்கப்பட்டது என்பதையும், அதற்கு ஊர் சபையின், திணைக்களத்தின் ஆதரவு பெற்று கல்வெட்டுச்சான்றாக பதியப்பட்டு உள்ளதையும் விரித்துரைத்தார். இது பற்றி அவரது புத்தகத்தில் மேலதிக தகவல்கள் உள்ளது.  



பிறகு லாடன் கோவில் சென்று குழுமினோம். அங்கு பேராசிரியர் கண்ணன் மற்றும் சுந்தர்காளி பேசினர். லாடன் கோவில் பற்றி கண்ணன் பேசியது அருமையான உரை. தாய்ப்பாறையில் புடைப்புச்சிற்பமாக இறைவனும் இறைவியும் உள்ளனர், இறைவன் சன்ன வீரம் அணிந்து அமர்ந்திருக்கிறார் என்பதாலும், சேவல் மயில் சிற்பங்கள் வெளிச்சுவற்றில் உள்ளதாலும் இது முருகனுக்கான கோவில் எனப்படுகிறது. துணைவி வள்ளியா அல்லது தெய்வானையா என்று சொல்வதற்கில்லை. மிகுதியான தலையணிகள், சிலைகளின் கால்பகுதி உடைக்கப்பட்டிருக்கிறது. காதல் மிகுதியோடு ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோன்ற சிலைகள், கடவுளர் என்றே சொல்ல முடியவில்லை இளங்காதலர் என்றுதான் சொல்ல வேண்டும். வள்ளியாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

லாடன் கோவில் சிறிய அழகிய குடைவரை. சுருள்யாளி வடிவில் கைப்பிடிச்சுவர், இருபுறமும் படிகள், முகப்பில் தடியோடு சிறிய பூதம் ஒன்று அமர்ந்துள்ளது இதுதான் லாடன் பூதம் போல, பார்க்க லகுலீசர் போன்ற சிற்பம். இதைத்தொட்டுத்தான் இக்கோவில் லாடன் கோவில் எனப்படுகிறது. ஒற்றைக் கருவறை, மேலே அட்லஸ் போல தாய்ப்பாறையையும் சுவரையும் இணைக்கும் பூதங்கள், கோவில் கட்டுமானத்தின் அங்கங்கள் யாவும் அமையப்பெற்ற குடைவரை இது. சுவற்றில் வாயில் காப்பாளர் இடத்தில் இரு பூசகர்கள், புடைப்புத்தூண்களில் சேவலும் மயிலும், அர்த்தமண்டபத்தில் பக்கவாட்டுச்சுவரில் ஒன்றில் அரச வடிவம் அல்லது தேவன் ஒருவர் அமர்ந்த நிலையில் இறைவனைச்சுட்டுகிறார், அவருக்கு நேரெதிர் சுவரில் உள்ள உருவம் சிதைந்துள்ளது அது வாகனமாக இருக்கலாம் அல்லது மற்றோர் அரசன்.


கூடுகை முடிந்து உணவு நேரத்தில் வெளியேவந்தோம், நானும் ரிஷி மற்றும் சூர்யாவும் யானைமலையின் மீது ஏறினோம், யானையின் கண் உள்ள இடத்தில் ஒரு சுனை உள்ளது யானைக்கண் தெப்பம் என்று அதற்குப்பெயர். யானைக்கண்ணீர் சுனை ஒன்றும் உள்ளது என்கிறார்கள், செங்குத்தான பாறைகள், உள்ளூர் சிறுவர்கள் தங்களுக்குள் பந்தயம் கட்டி யானையின் நெற்றிமீது ஏறுவார்களாம். நாங்கள் முடிந்தவரை மலையின் இறுதிக்குச்சென்று ஏறத்துவங்கினோம். நுணா மரங்களும் கொண்டலாத்திப்பறவைகளும் கண்ணிலிருந்து மறையத்துவங்கின. பாறையிடைப்புற்கள், காய்ந்த இலைகள் நீல, காவி வண்ணங்களில் ஜாலம் காட்டின, நாங்கள் சென்ற குகை மேலிருக்கும் மகாவீரரை உற்றுப்பார்த்தால், சுற்றி வரையப்பட்டுள்ள சாமரம், திருவாசி, குடை முதலியவை தெரியும், அதன் வண்ணங்கள் கண்முன் வந்து போனது, இயற்கையின் மாாயங்களை யார் அறிவார்.   


யானையின் முதுகுப்பகுதியில் கால்பந்து விளையாடும் அளவுக்கு சமதளமிருக்கிறது. அங்கிருந்து பார்க்க அனைத்தும் வேறாகத்தெரிந்தன, திரும்பிவரும் வழியில் சாலையின் மறுபுறத்தில் பாறைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன, எட்டிப்பார்த்தேன் அதலபாதாளம். மலைவிழுங்கி மகாதேவன் என்ற பெயர் வெறும் கற்பனையல்ல.  மலைகள் பூமிக்கு உள்ளேயும் அதே உயரத்தில் வாழ்பவை, நான் பார்த்த இடம் முற்றாகவே வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. யானையின் கண்ணீர் அங்குதான் தேங்கியுள்ளது என்று நினைத்துக்கொண்டேன்.  

பசுமை நடை அமைப்பு மதுரையில் துவங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள மாற்றம் எளிதில் நிகழக்கூடியது அல்ல. தங்கள் செயல்பாடுகள் மூலம், சூழலியலையும் தொல்லியலையும் இணைத்துப் பார்க்கும் அற்புதமான புள்ளியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். குழந்தைகள் பெண்கள் எனக் குடும்பமாக மதுரை மக்களை இந்த நிகழ்வுக்கு வரவைத்ததுதான் இவர்கள் முழுமுதல் வெற்றி. இதனால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு, கிரானைட் கொள்ளையர்களிடமிருந்து இம்மலைகளைக் காத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  எந்தக்கருத்து பெண்களிடமும், எந்தப்போராட்டம் சாமான்யர்கள் கையிலும் செல்லத்தக்கதாகிறதோ அதுவே வெற்றி அடைகிறது. தமிழகம் முழுக்க பல பகுதிகளில் அகிம்சை நடை, தொன்மை நடை, மரபு நடை என்று பல வடிவங்களில் மக்கள் இதை முன்னெடுத்துச் செல்கிறார்கள். மிகப்பெரிய பெர்ஷியாவின் படைகளை முன்னூறு பேர் எதிர்த்து நின்றதுபோலத்தான், இத்தகைய எளியவர்கள் எப்போதும் வரலாற்றில் நிற்கிறார்கள், கையில் ராட்டையை சுற்றிக்கொண்டும். சென்ற பத்தாண்டுகளில் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு அடையாளங்கள் இரண்டுதான் ஒன்று ஜல்லிக்கட்டுப் புரட்சி மற்றோன்று பசுமை நடை.  

பேருந்துநிலையத்திற்கு செல்கையில் கரும்புச்சாறு அருந்தினோம். அங்கிருந்து பார்க்க யானை மெய் பளீரிட்டது. தமிழின் தொன்மையை ன் கர்ப்பத்தில் பொதிந்துள்ள யானை.  

***

(பசுமைநடையின் நூற்றியொன்றாவது நிகழ்வு -  யானைமலை, மதுரை - 07.07.2019)



-
தாமரைக்கண்ணன்
புதுவை  
10.07.2019

  
               

Comments

Post a Comment

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

யாளி சூழ் உலகு ஶ்ரீவைகுண்டம்

நண்பரது திருமணத்துக்கு தென்பாண்டிநாட்டுக்கு செல்லவேண்டியிருந்தது, புலரியில் திருச்சீர் அலைவாய்ப்பெருமாளை  வணங்கிவிட்டு ஸ்ரீவைகுண்டம் சென்றிருந்தேன். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அழகிய தலம் ஸ்ரீவைகுண்டம், வைணவர்கள் வணங்கும் நூற்றியெட்டு திவ்யதேசங்களுள் ஒன்று. நெல்லைச்சீமை நவ திருப்பதிகளில் சூரியனுக்குண்டான பதி. பாலத்தில் நடந்தபடி ஸ்ரீவைகுண்டம் அணையை பார்த்துக்கொண்டே சென்றேன். உச்சிவெயிலில் பொருநையில் இளவட்டங்கள்  நீந்திக்களித்துக்கொண்டிருக்க, கரையோரத்தில் பெண்களும் குழந்தைகளும் கூச்சலோடு விளையாடிக்கொண்டிருந்தனர். நீரின் மடியில் அவர்கள் நின்றுகொண்டு  "போவே" என்று ஞாயிறைப் பழித்துக்காட்டியது போல் தோன்றியது, பொறாமையாகவும் இருந்தது .  வைகுந்தவாசன் என்றால் அமர்ந்திருக்கப்பட்டது தானே சரி,  ஆனால் நம்மாழ்வாரால் "வைகுந்தத்துள் நின்று" என்று பாடியபடிக்கு கொஞ்சம் நிக்கலாம்டே என்று நின்றகோலத்தில் பெருமாள் அருள்கிறார்.  திருமால் படுத்தால் படுக்கை , இருந்தால் இருக்கை, நின்றால் குடையாவேன் என்று  பின்னே ஆதிசேஷன் குடையாகி  நிற்கிறார். திருவழுதி வளநாட்டின் வைகுந்தநாதருக்கு